VEDA வினால் கடந்த 8ஆம் திகதி நடாத்தப்பட்ட கெளரவிப்பு விழாவும்,கலந்துரையாடலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டிதுறையில் செயற்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனமான, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA - Valvai Educational Development Association) கடந்த ஆண்டு க.பொ.சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வும்,2 ஆம் தவணைக்கான கலந்துரையாடலும் 08.08.2014 அன்று பிற்பகல் 04.00 மணிக்கு VEDA கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
கொற்றங்கலட்டி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் முகவரியில் சிறப்பாக இயங்கிவரும் VEDA கல்வி நிலையத்தில் 2013ம் ஆண்டு க.பொ.த (சா/த) தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழாவும், 2ம் தவணைக்கான பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுடனான கலந்துரையாடலும் VEDA கல்வி நிலையத்தில் 2014.08.08 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக 2ம்தவணைக்கான பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் VEDA கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் தரம் 6 – 11 வரையான அனைத்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், எமது கல்வி நிலைய ஆசிரியர் குழாமும் பங்கு பற்றியிருந்தனர்.
அதில் மாணவர்களின் கல்வி நிலை பற்றியும், அவர்களின் கற்றல் ஆற்றலை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் எனவும், மாணவர்களின் கல்வியில் பெற்றோருக்கான பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பருத்தித்துறை பிரதேசசபையில் இருந்து வருகை தந்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறுவர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக பல கருத்துக்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன்வைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து 2013ம் ஆண்டு க.பொ.த (சா/த) தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வல்வெட்டித்துறை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வல்வெட்டித்துறை முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.
தொடர்ந்து விருந்தினர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆரம்ப காலத்தைப் போலவே இனிவரும் காலங்களிலும் வல்வை மண்ணில் அதிகளவிலான புத்தி ஐீவிகளை அனைத்து துறையிலும் (விஞ்ஞான துறை, கணிதத்துறை, வணிகத்துறை, சட்டத்துறை) வளர்த்தெடுக்கும் முகமாக மாணவர் சமூதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றும், மாணவர்கள் கல்வியில் மட்டும்மன்றி ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மேலும் இந்த 100% சித்தியானது VEDA கல்வி நிலையத்திற்கும் அதனூடாக வல்வை மண்ணிற்கும் பெருமையை தேடித்தந்தது எனவும் VEDA கல்வி நிலையத்தினை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன் எமது நிலையத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இதே போன்று தொடர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி இருந்தனர். அதுமட்டுமன்றி எமது VEDA கல்வி நிலையமே சேவை நோக்கினை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கல்வி நிலையமாக வல்வை மண்ணில் சிறப்பாக தனது சேவையினை முன்னெடுத்து வருகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து விழாவின் நாயகர்களும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக VEDA கல்வி நிலைய நிர்வாகத்தினர் தமது எண்ண அலைகளை பகிரும் போது மற்றைய தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் எமது VEDA கல்வி நிலையம் சேவை நோக்காக கொண்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும் என்றும் கல்வி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு அனுசரணை வழங்குபவர்கள் பிரித்தானியா வாழ் வல்வை நலன்புரிச் சங்கத்தினர் என்று கூறி அவர்களையும் கௌரவிக்கும் முகமாக VEDA கல்வி நிலையத்தினர் பிரித்தானிய நலன்புரிச் சங்கத்தினருக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை கையளித்தனர். இவ் நினைவுச் சின்னத்தினை பிரித்தானியா நலன்புரிச்சங்கம் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்ட நலன்விரும்பி ஒருவர் பெற்றுக் கொண்டார். இறுதி நிகழ்வாக நன்றி உரையுடன் விழாவானது 6.00 மணியளவில் நிறைவு பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.