தொடர்ந்து நிராகரிக்கப்படும் ஒரு முன்னோடி - ச.ச.முத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2016 (வியாழக்கிழமை)
மிக அண்மையில் ஊர் சார்ந்த இணையத்தில் அல்லது இணையங்களில் ஒரு நிகழ்வு பெரும் முன்னெடுப்பு ஒன்றுடன் வெளியாகி இருந்தது. தேசியவீரன் தாஸ் நினைவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி என்பதே அதுவாகும்.தாஸ் தேசியவீரனா இல்லையா என்பதற்குள் இப்போது இந்த ஆக்கம் மூலம் போக நான் தயாரில்லை. அதற்கு வேறு இடம் இருக்கு. இப்போது எனது கேள்விகளும் ஆதங்கங்களும் என்னவென்பதையே இந்த ஆக்கம் மூலம் வெளியிடுகிறேன்.
பிரிவினை சம்பந்தமாக பேசுவதும் அரசியல் செய்வதும் பெருங்குற்றமாக அரசியலமைப்பின் ஊடாக தடை செய்யப்பட்டுள்ள ஒரு நாட்டில் தமிழர்களின் உரிமை சம்பந்தமாக எழுந்தவர்களை எவ்விதம் நினைவு கொள்வது என்பது ஒரு பெரும்சிக்கலான கேள்விதான்.இங்கிருந்து கொண்டு அங்கிருப்பவர்களை அவ்விதம் செய்ய சொல்லி கேட்பதும் முறை இல்லைதான். நல்லது. ஆனால் தேசியவீரன்தாஸ் என்ற பெயரில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தி அதற்கு தலைமையாக இலங்கை பாராளுமன்ற குழுக்களின் பொறுப்புகளில் இருக்கும் ஒருவரும் மாகாணசபை உறுப்பினர்களும் வந்து சிறப்பிக்க முடிந்திருப்பது மிக நன்றுதான்.
டெலோ அமைப்பின் முக்கியஸ்தர்கள் வந்திருந்து அதனை நடாத்தி இருந்தார்கள். சிறிசபாரெத்தினத்துக்கு கோண்டாவிலில் விளக்கு வைத்து அஞ்சலித்து விட்டு அவரால் கொல்லப்பட்ட தாஸ்க்கும் நினைவு உதைபந்தாட்டம் நடாத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்ட அரசியல் சகிப்பு தன்மையை பாராட்டுகின்றேன். இங்கே தான் ஒருவிடயம் வந்து நெஞ்கை குடைந்து கேள்விகளை எழுப்புகின்றது..
தாஸை தேசியவீரன் என்று கொண்டாடி நினைவு கொள்ள முடிந்த அவர்களால் ஏன்தான் தாஸைவிட மூத்த போராளி, மிக மூத்த முன்னோடியான தேவனை (ரமேஸ்- பார்த்தசாரதி) நினைவு கொள்ள முடியாமல் போனது??? எனது பாடசாலை,கல்லூரி தோழனும் கம்பர்மலை சந்தியநாதன், கம்பர்மலை ரவீந்திரன் (பண்டிதர்) ஆகியோரின்கல்லூரி தோழனுமாகிய தேவன் என்கிற ரமேஸ் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியின் மிக முன்னோடி ஆவான்.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த அந்த நண்பன் தனது பதினேழாவது வயதில் இருந்தே தமிழர்களின் தேசிய எழுச்சியில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டவன். தமிழர்களின் தேசிய உரிமைக்கான எழுதல் சில நேரங்களில் திசை மாற்றி செல்லப்பட எத்தனித்த கணங்களில் அவனின் குரல் அவனின் செயற்பாடு அதற்கு காட்டமான எதிர்ப்பாக இருந்தது.
எல்லாவற்றையும் இதில் எழுத முடியாவிட்டாலும்கூட 80களின் ஆரம்பத்தில் தமிழர்களின் எழுச்சியை மாவட்டசபை என்ற மாயமான் மூலம் திசை திருப்ப ஜெயவர்த்தனா எடுத்த முயற்சிகளுக்கு எழுந்த இளைஞர்களின் எதிர்ப்பில் தேவன் என்ற ரமேசின் பங்கும் வேலைகளும் காத்திரமானவை.
அதிலும் மாவட்டசபையை ஏற்றுக்கொண்ட கூட்டணிக்கு எதிராக அவனின் எதிர்ப்பு பல பரிணாமங்களில் இருந்தது. மேலும் தமிழர்களின் தேசிய விடுதலை அமைப்பு ஒன்றை கட்டி அமைப்பதில் அவனின் பங்களிப்பும் செயற்பாடுகளும் வேறு யாரையும் விடகுறைந்தவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் மிகமிக முன்னோடிகளில் அவன் ஒருவன்.
அவனுக்கு பின்னா அந்த அமைப்பில் இணைந்தவர்களே இன்று அந்த அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதிலும் அவனின் அமைப்பின்சார்பாக இலங்கை பாராளுமன்றத்திலும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் பலருக்கும் அவனது ஆளுமையும் அவனது பங்களிப்பும் நன்கு தெரியும்.
தாஸ்'க்கு தேசியவீரன் என்ற சுட்டிலக்கத்துடன் ஒரு நினைவு உதைபந்தாட்டம் நடாத்த முடிந்த இவர்களால் ஏன்தான் ரமேஸ் என்ற தேவனுக்கு ஒரு நினைவு நடாத்த முடியாதுள்ளது. இப்படி தாசுக்கு உதைபந்தாட்டம்நடாத்திய அன்பர்களுக்கு மிக தாழ்மையுடன் ஒரு வேண்டுகோளை இந்த ஆக்கம் மூலம் விடுகின்றேன்.
தேவன் என்ற ரமேசின் நினைவுகளை எமது மக்களிடம் கொண்டு செல்லும் கடமை ஒன்று உங்களுக்குண்டு தோழர்களே..ஏதாவது ஒரு விடயத்தின் மூலம் அதனை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
என்றாவது ஒருநாள் தமிழர்களின் உரிமை போராட்டத்தின் வரலாறு என்பது முழுமையாக எந்தவொரு பாராபட்சமும் இன்றி பதியப்படுமானால் அதில் மிக நிச்சயமாக ரமேசின் (தேவன்) பங்கும் அவன் எத்தகைய முழுமையான இணைவும் கொண்டிருந்தான் என சரித்திரம் பதியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.