தமிழக மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வல்வை சிறுமி சம்பியன் பெற்று சாதனை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2017 (திங்கட்கிழமை)
இந்தியாவின் தமிழக மாநிலத்தின் இடம்பெற்ற மாநில அளவிலான கீழ் பிரிவினர்களுக்கான நீச்சல் போட்டிகளில் வல்வையைப் பூர்வீகமாக கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியனாக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி கோயம்புத்தூரில் நடைபெற்ற The state junior inter school swimming competition 2017 இல் இரண்டு போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும், இன்னொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும், இன்னொரு போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்களில் செல்வி தனுஜா 23 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
பங்குபற்றிய போட்டிகளின் விபரம் வருமாறு.
1. Butter fly, 50 meter - first place - 34' 43"
2. Front style 50 meter - first place - 31' 16"
3. Front style, 100 meter - second place - 71' 6"
4. Backstroke 50 meter - 3rd place - 39' 74"
தடங்கள் நீங்கின
கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் ஏராளமான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்ற செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கையைப் பூர்வீகமாக இருந்த காரணத்தால் பல தடங்கல்களை சந்தித்திருந்தார். இவரின் வயதிற்கான மருத்துவ சான்றிதழும் திட்டமிட்ட முறையில் பிழையாக கொடுக்கப்பட்டு பல போட்டிகளில் பங்குபெறும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தார். ஆனாலும் இவரின் தந்தை ஜெயக்குமார் தொடர்ந்து போராடி சட்டரீதியாக இருந்த தடைகளை வென்றுள்ளார்.
தற்பொழுது இவருக்கு தகுந்த மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சும் இவரை சகல போட்டிகளிலும் பங்கு கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
திரு ஜெயக்குமாருக்கு சட்டரீதியான முயற்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் திரு மரிய ஜோன்சன் அவர்கள் கட்டணங்கள் எதுவும் வசூலிக்காமல் தனது முழு உதவிகளையும் வழங்கியுள்ளார். அத்துடன் திரைப்பட இயக்குனர் கௌதமன் அவர்களும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சிடம் தொடர்பை ஏற்படுத்த உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.