வாரம் ஒரு பழங்கதை – ஆலடியும் சிவகுருவும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2015 (திங்கட்கிழமை)
“ஆலடியும் சிவகுருவும்” என்னும் தலைப்பினுள் உண்மையில் 3 பழங்கதைகள் அடங்குகின்றன.
1) பழைய ஆலடி சுற்றாடல்
2) ஆலமரச் சூழலில் “சிவகுரு வித்தியாலயம்”
3) இன்றைய ஆலமரத்தின் வரலாறு
1) பழைய ஆலடி சுற்றாடல்
(இன்றைய) ஆலமரத்தின் கிழக்காக M.G.R சிலை இருக்கும் இடம் உட்பட, அதற்கு கிழக்காக அம்பாள் வீதிவரையுள்ள முக்கோண வடிவினதான காணியில் 3 அல்லது 4 ஆலமரங்கள் நின்றிருந்தன. வீடுகள் எதுவும் அப்போது அந்த முக்கோண நிலப்பரப்பினுள் இருக்கவில்லை. ஆலமரங்கள் வீதியை மூடிக் கிளைபரப்பி நிறைந்த நிழல் கொடுக்கும் இடமாக இருந்தது ஆலடி.
கிடுகு
ஊரில் அந்த நாளில் அநேகமாக எல்லா வீடுகளுமே கிடுகு வீடுகளாகவும், கிடுகு வேலிகளாகவும் இருந்ததால் கிடுகின் தேவை மிக அதிகமாகவே இருந்தது. மாலைப் பொழுதாகி சூரியன் அஸ்தமிக்கும் கருக்கல் பொழுதினில், அல்வாய் கோயிற்சந்தை முதலான பல இடங்களில் இருந்தும் வரும் கிடுகு வண்டில்கள், ஆலடியிலும் அம்மன் கோயில் பின்வீதியில் உள்ள கத்தோக்கு மரத்தடியிலும் தரித்துநிற்கும்.
சுமை இழுத்து களைத்து வரும் மாடுகளை அவிழ்த்து, எசமான் கிணற்று நீர்த் தொட்டியில் தண்ணீர் காட்டி, வைக்கோல் உதறிப்போட்டு, மாடுகளுக்கு ஓய்வு கொடுப்பார்.
தாமும் முருகையா மடத்தில் தலைசாய்த்துப் படுத்து உறங்குவார். காலையில் ஊருக்குள் பல்வேறு திசைகளிலும் கிடுகு வியாபாரம் ஜோராக நடைபெறும்.
மோர் மாடம்- முருகையா மடம்
(கத்தோக்கடி, முருகையா மடம் இரண்டின் பழங்கதைகளும் பின்னர் தனியாக பதிவாகும். அம்பாள் வட மேற்கு மூலையில் – வாடி ஒழுங்கைக்குக்கு கிழக்காக – வீதிக்கு வடக்காக தற்பொழுது மோர் மாடம் உள்ள இடமே “முருகையா மடம் இருந்த இடம் ஆகும்.)
கிடுகு வண்டில்களைப் போல செல்வச்சந்நிதி திருவிழாவிற்காக கிழக்கிலிருந்து வரும் வண்டில்களும் மேற்குறிப்பிட்ட ஆலமரச் சூழலிலேயே ஓய்வு எடுத்துச்சென்றன என்பதும் வரலாறு.
கத்தோக்கு மரத்தடி
2) ஆல மரச் சூழலில் சிவகுரு வித்தியாசாலை
மேற்குறித்த ஆலமர வரிசைக்கு எதிர்ப்புறமாக – வாடி ஒழுங்கை மேற்காக – றாக்கிச்சி அம்மன் கோயிலுக்கு தெற்காக தற்போது கம்பிவேலி போடப்பட்டிருக்கும் இடத்தை நீங்கள் அறிவீர்கள். சொற்ப காலத்திற்கு முன்னர் இந்த இடத்தில் “அரசாங்க மரக்காலை” ஒன்று இயங்கிவந்ததும், அக்காணியின் வடகிழக்கு மூலையில் 4 வெண்ணிறமான தூண்களும் – சேதமடைந்த தரைப்பகுதியும் இருந்தன.
தற்பொழுது இந்த அடையாளங்கள் இல்லையாயினும் இப்பகுதி புல்லும் புதருமாக இன்று இருக்கின்றது. பார்க்கக்கூடிய ஆவணங்களில் “அம்மன் கோவிலடி – ஆலடி” யில் “சிவகுரு வித்தியாசாலை” இருந்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மேற்குறித்த மரக்காலையே “சிவகுரு வித்தியாசாலை” இருந்த இடம் என்கிற முடிவிற்குவரலாம்.
சிதம்பர கல்லூரியை நிறுவிய வள்ளல் கு.சிதம்பரபிள்ளை அவர்கள், தாம் ஆங்கிலக்கல்வி கற்கவிரும்பியதால் பருத்தித்துறை சென்று கல்வி கற்றுவந்தார். போக்குவரத்து மிகக் குறைவாக இருந்த அந்நாளில், தாம் அடைந்த சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாதென்ற உயரிய நோக்கத்தில், 1896 இல் “சிதம்பர வித்தியாலயம்” என்னும் பெயரில் மேற்குறித்த காணியில் ஒரு ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தார்.
சிதம்பரக் கல்லூரி
1912 இல் ஊரிக்காட்டில் காலஞ்சென்ற ஞா.தையல்பாகருக்குச் சொந்தமான காணிக்கு இடமாற்றம் பெற்றதுவரை “சிதம்பர வித்தியாலயம்” இங்கேயே இயங்கிவந்தது.
இதன் பின்னர் வள்ளல் சிதம்பரப்பிள்ளையின் மைந்துனரான காலஞ்சென்ற ஞா. தையல்பாகர் “சிவகுரு வித்தியாசாலை” என்னும் பெயரில் அதே ஆலடிச் சூழலில் ஒரு தனித் தமிழ் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார்.
“”சிதம்பரா” ஆங்கில பாடசாலையாக இயங்கி வந்த காரணத்தினால் “இங்கிலீஷ் பள்ளிக்கூடம்” என்றும் “சிவகுரு” தனி தமிழ் பாடசாலையாக இயங்கிவந்த காரணத்தால் “தமிழ் பள்ளி கூடம்” என்றும் நீண்ட காலமாகப் பெயர் பெற்றிருந்தன.
“சிவகுரு வித்தியாசாலை” என்பதில் உள்ள “”சிவகுரு” என்பவர் சிதம்பரப்பிள்ளையின் நெருங்கிய உறவினர் எனவும் அறிய முடிகின்றது.
1942 இல் “சிவகுரு வித்தியாசாலை” தற்போதைய கடற்கரையை அண்மித்த பகுதிக்கு மாற்றம் அடைந்தபோதும், ஆலமரச் சூழலில் நீண்டகாலம் இயங்கி வந்த காரணத்தினால் “ஆலடிப் பள்ளிக்கூடம்” என்று அழக்கப்பட்ட பெயரே நீண்டு நிலைத்த பெயர் ஆயிற்று.
சிவகுரு வித்தியாசாலை
(3) இன்றைய ஆலமரத்தின் வரலாறு
(இன்றைய) ஆலமரத்தடியில் நிற்கின்ற ஆலமரம் புதியது. இதிவிட பல மடங்கு அடிபெருத்து கிளைவிட்டு பெரு விருட்சமாக நின்றிருந்தது பழைய ஆலமரம். இந்த ஆலமரத்தின் வயதும் பருமனும் - கருதியே “ஆலடி வீதி” பிரபல்யம் பெற்றது.
இடைக் காலத்தில் ஏற்பட்ட புயலில் வேரோடு சாய்ந்து போனது பழைய ஆலமரம். புயல் வீசிய காலம் 1962, 1963 காலப்பகுதியாக இருக்கலாம் எனக் கருதினாலும் சரியாக சொல்ல முடியவில்லை.
ஆலடி வீதிக்கு அருகே வடக்குப் பார்த்தபடி காலஞ்சென்ற தணிகாசலம் அண்ணை என்பவர் பீடாக் கடை (வெற்றிலை கடை) நடாத்திவந்தார். குறித்த இந்த பீடாக்கடை இருந்த காணியின் உள்ளேயும் ஆலமரத்தின் விழுதுகள் இரண்டு நீண்டு நிலத்தினுள் வேரோடி ஆலமரக் கொப்புக்களை தாங்கி நின்றிருந்தது.
தணிகாசலம் அண்ணையின் இனிமையான பீடா மிகப்பிரபல்யம் பெற்றிருந்ததால் மாலை நேரங்களில் அயற்கிராமங்களில் இருந்தும் பலரும் அவரை நாடிவருவார். இதனால் “பீடாக்கடை தணிகாசலம்” என்னும் சிறப்புப் பெயரும் அவரோடு ஒட்டிக் கொண்டது.
பழைய ஆலமரத்தின் கதை இவ்வாறு புயலோடு போக, அதே இடத்தில் சிறிய ஆலமரக்கிளை ஒன்றினை நாட்டி, ஆடு மாடு உட்புகாமல் கூடடைத்து பாதுகாத்து வந்தார் மனிதர்.
ஆலடி
அந்தத் தனிமனிதனின் முயற்சியினால் நாளும் பொழுதுமாக வளர்ந்து வந்த ஆலமரம் இன்று பெருமரமாக “ஆலடி” என்னும் பெயரினைக் காத்துநிற்கின்றது. இப்பெயர் இனிமேலும் எக்காலமும் நிலைத்து நிற்கும்.
பழைய ஆலமரம் புதிய ஆலமரம் இரண்டுக்கும் பொதுவான சுவையான – வாய்க்கு ருசியான ஒரு தகவல் உண்டு.
“”செக்கல் விளை மீன்” வாங்கிய அனுபவம் உங்களுக்கும் இருக்குமே. மாலை நேர கருக்கல் வேளையில் கூடை கூடையாய்க் கொண்டு வரப்படும் விளை மீன் வாங்குவதற்காக அயல் ஊரிலிருந்து வரும் பல நூறு பேருடன் நம்மவர்களும் காத்து நிற்பர் .
இரவு 10 மணி வரை “விளை மீன்” வியாபாரம் ஜே ...... ஜே ..... என நடக்கும். அந்த விளை மீனின் ருசியும் இப்போதில்லை, ஆலடி விளைமீன் வியாபாரமும் இங்கில்லை.
திரு.அப்பாத்துரை மாஸ்டர்
பழைய கதை தொடரும்
குறிப்பு.
வல்வையூர் அப்பாண்ணா வினுடைய முந்தைய ஆக்கங்கள் எமது இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் நிரந்தரமாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.