அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கை வல்வையிலும் மேற்கொள்ளப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2014 (வியாழக்கிழமை)
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அனர்த்த இடர் நிலையில் மக்களை ஒருங்கிணைத்து அனர்த்தத்திலிருந்து தப்புவது தொடர்பிலும் அனர்த்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய முகாமைத்துவ செயற்ப்பாடுகள் பற்றிய ஒத்திகை நடவடிக்கையானது வருட இறுதியில் இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்டுவரப்படுகின்றது.
அந்தவகையில் இந்த வருடமும் ஒத்திகை நடவடிக்கையானது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்டங்களின் அனர்த்த சூழ்நிலைகளுக்கேற்ப அரச நிறுவனங்களாலும் அரச நிர்வாக அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கையானது இன்று பிற்பகல் 3 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரிக்காடு சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டது.
பருத்தித்துறை பிரதேசத்தை பொறுத்த மட்டில் கடல் சீற்றமும் சுனாமியுமே பேரனர்த்தமாகவுள்ள நிலையில், கடலை அண்மித்த கடல் நகரமான வல்வையில் அனர்த்த எச்சரிக்கை கோபுரத்தினூடாக மும்மொழியிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அத்தோடு அனர்த்த முகாமைத்துவ நிலைய வாகனம் மூலமும் ஏனைய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு மக்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றது.
சுனாமி எச்சரிக்கை காரணமாக பீதியடைந்த மக்கள் சிலர் தமது உடமைகளுடன் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் முனைந்தனர். ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்த ஒத்திகை நடவடிக்கையில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனர். ஒத்திகை நடவடிக்கையின் போது அனர்த்த நிலைமையில் கூட்டாக இணைந்து செயற்படுவது மற்றும் இடர்களிலிருந்து மீள்வது தொடர்பான விளக்கங்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
கடலோரத்தை அண்டிக் காணப்படும் சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு மூலையில் அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கவென அனர்த்த முகாமைத்துவ நிலையத்திளால் எச்சரிக்கை கோபுரம் ஒன்று கடந்த 2006 ம் ஆண்டளவில் நிறுவப்பட்டது.
வடக்கு முனையான பருத்தித்துறையிலும் இதுபோன்ற எச்சரிக்கை கோபுரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கைகளானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இயக்கப்படும்.
சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு மூலையில் காணப்படும் எச்சரிக்கை கோபுரம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.