இன்றைய நாளில் - நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார் திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2017 (வெள்ளிக்கிழமை)
திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் ஆரம்ம்பித்த நாள் இன்றாகும்.
1963 நவம்பர் 27 ஆம் திகதி யாழ் ஊரெழுவில் பிறந்த இவரின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். இவர் யாழின் முன்னணி பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் ஆவார்.
83 ஜூலை கலவரத்திற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்ததாகச் சொல்லப்படும் இவர், பின்னர் விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம்
கீழ்வரும் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முன்றலில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
5 அம்ச கோரிக்கைகள்
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2) சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
26.09.17 அன்று
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி, கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாமல் திலீபன், 26.09.1987 சனிக்கிழமை காலை 10.48 க்கு மரணமானார்.
இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது.
மருத்துவ பீடத்திடம் உடல் கையளிப்பு
திலீபனின் வேண்டுகோளுக்கு இணங்க இறுதி ஊர்வலத்தின் பின் சுதுமலையில் வைத்து யாழ் மருத்துவ பீடத்திடம் அவரின் உடல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக அன்றைய செய்திதாள்களில் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.