யாழ்ப்பாணத்தில் அண்மையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழ் சிறைக் கைதிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தற்போது வழக்கு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தொடர்பில் நிவாரணமொன்றைப் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
சிறைக் கைதிகளையும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சிறையிலுள்ள சிறைக் கைதிகளையும் வேறாக வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அச் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதுவரை காலம் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
அவர்களும் அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக யாழ் நகரத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
இந்த இரு தரப்பினரதும் பிரதான கோரிக்கையாக இருந்தது வவுனியா நீதி மன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள வழக்கை வவுனிய நீதி மன்றத்திற்கு மாற்றுவதாகும். அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் வெசலுத்திய ஜனாதிபதி, இக்கோரிக்கைகள் நீதி மன்றத்துடன் தொடர்புபட்டவை என்பதால் இது தொடர்பில் சட்ட மா அதிபர் ஊடாக நீதி மன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதன் மூலம் இருதரப்பினருக்கும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறினார். ஒரே மேசையில் இருந்து கலந்துரையாடுவதன் மூலம் நிலவுகின்ற பல்வேறு தவறான கருத்துக்களை நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்வரும் சில நாட்களில் ஏனைய பிரச்சினைகள் குறித்து சட்ட மா அதிபர் பொலிஸார் மற்றும் நீதி அமைச்சுடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுக்க முடியுமான தீர்வுகள் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கெண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.