தைத்திருநாளாம் தைப்பொங்கல் தமிழர்தம் வாழ்வுக்கு ஒளி பாய்ந்திடும் மங்கல நாள் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது நம் ஆன்றோர் வாக்கு. அநுபவ வாக்காவும், அமைந்திடும். ஒளிக் கடவுளாம் சூரியன் தனு ராசியிலே போய்ச் சஞ்சரிக்கும் காலம் இத்தினம். சங்கிராந்திக் காலத்தை மனம் கொண்டே தைப்பொங்கலாம் திருநாள் மனக் கொள்ளப்படுகின்றது.
மழையின் தோற்றத்திற்கு இந்திரனே மூல காரணம் என்ற தன்மையில், அவன் செய்த நன்மையின் பொருட்டு, மழையின் பயன்பாட்டால் விளைந்த நெல் மணிகளைக் குத்திப் பதப்படுத்தி அரிசி மணிகளாக்குச் சமையல் செய்து மழைக் கடவுளாகிய இந்திரனுக்கே எம்மவர் ஆரம்ப காலங்களில் படையல் செய்து ஆராதித்தனர்.
கிருஷ்ண பகவானின் அவதாரத்திற்குப் பின் இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட படையல் அமுதினை எம்மவர் கிருஷ்ணனுக்கு படைத்து ஆராதித்தனர். இம் மாற்றத்தினால் உச்ச நிலையிலே கோபமடைந்த இந்திரன் குடிமக்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கக் கூடியதான பெரு மழையைத் தோற்றுவித்தான் எனவும், இப் பெருமழைக் காரணமாகக் குடிமக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டு அழிவுகள் பெருமளவில் ஏற்பட்டன.
குடிமக்கள் வதிவிடங்களை இழந்ததுடன், கால் நடைகளையும் இழந்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர். இந்த நிலையிலே செய்வதறியாது குடிமக்கள் கலங்குவதை உணர்ந்த காத்தற் கடவுளாகிய கிருஷ்ண பகவானாம் கண்ணன் கோவர்த்தவன மலையை எடுத்து விரித்து பெரும் குடையாகப் பாவித்துப் பெரும் மழைக்குரிய தடுப்பாக அமைத்துக் குடிமக்களின் அல்லல்களைப் போக்கினான் எனப் புராணங்கள் பேசுகின்றன.
காத்தற் கடவுளாம் கண்ணனின் செயலினால் குடிமக்கள் காப்பாற்றப்பட்டதை உணர்ந்த இந்திரன் வெட்கமுற்றுக் கண்ணனை வேண்டவே கங்கிராந்தி தினமாம் தைப் பொங்கலுக்கு முதல் நாள் மார்கழி மாத இறுதி நாளில் இந்திரனுக்கு படையல் செய்யும்படி குடிமக்களுக்குக் கண்ணன் உத்தேசித்தான். இந்திரனுக்கு உரிய உபகாரங்கள் செய்யப் பெற்ற தன்மையில் தைப் பொங்கலுக்கு முதல் நாள் இந்திரன் பெயரால் போகி பண்டிகை மேற்கொள்ளப்படலாற்று, தொடர்ந்தும் இதே நிலை நிலவியது. கண்ணன் உபதேசத்தினால் இந்திரன் அமைதி காத்த நிலையில் இந்திரனுக்கு தைப்பொங்கல் தினத்திற்கு முதல் நாள் போகி பண்டிகைக்கு மறுநாள் கங்கிராந்தி பண்டிகைச் சிறப்பிக்கப்படும்.
தைத்திருநாளாம் தைப்பொங்கல் சுபதினம் இத்தினமே சூரிய பகவான் தனுராசியினில் பிரவேசிக்கும் சுப தினம் இந்நிலையிலே பெருமழை காரணமாக வருந்திய மாடுகள் கன்றுகள் யாவற்றையும் உரிய நிலையிலே வைத்துப் பேணுவதற்கு வாய்ப்புக்கள் வசதிகள் கிடைத்த தன்மையிலும், உழவுத் தொழிலுக்கு மிக உந்து சக்தியாக அமைந்து விளங்கிய தன்மையிலும், மாடுகளை போற்றும் தன்மையிலும், கெளரவம் கொடுக்கும் தன்மையிலும் மாட்டுப் பொங்கல் - பட்டிப் பொங்கல் என்ற சிறப்பு பெயர்களுடன் பொங்கல் மேற்கொள்ளப்படலாயிற்று.
மறுநாள் பெருமழையால் ஏற்பட்டபெருங் சேதங்களை நிவர்த்தி செய்ய நல்வாழ்வு வாழ தொடங்கிய தமது பாசபந்தங்களை நேரிலே கண்டு சுகம் விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் சொந்த பந்தங்கள் சென்று திரும்புவதை மனங் கொண்டு மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் காண் பொங்கல் எனவும் சிறப்பிக்கப்படலாயிற்று. இத்தன்மையிலே தைத்திருநாளுக்கு முதல் நாள் இந்திரனுக்குரிய போகு பண்டிகை எனவும், தை மாதம் முதல் திகதி சூரியனுக்குரிய கங்கிராந்தி பண்டிகை எனவும், மறுநாள் மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் எனவும், நான்காம் நாள் சொந்தபந்தங்களை கண்களில் பார்த்து நலம் விசாரிக்கும் தன்மையிலே காண் பொங்கல் எனவும் தொடர் நிலையிலே வழங்கப்படலாயிற்று.
போகி பண்டிகை, கங்கிராந்திப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், காண் பொங்கல் என்ற தன்மையில் அமைந்துள்ள பொங்கலுடன் தொடர்புடைய சிறப்பு நாள்களில் தைத்திருநாள் தைப் பொங்கலே எம்மவரால் பெருமளவில் சிறப்பிக்கப்படுகின்றது. கொண்டாடப்படுகின்றது.
தைப்பொங்கல் தின அதிகாலையிலே எம்மவர்கள் துயில் நீங்கிக் காலைக் கடன்களைச் செல்வனே முடித்து ஆலயவழிபாடுகளை மேற்கொண்டபின், வீட்டு முற்றத்திலே பசுவின் சாணத்தினால் தரை மெழுகிக் கோலமிட்டு பசுவின் சாணத்தினாலே மஞ்சள் மாவினாலே விநாயகரின் திரு உருவினை அழகுற அமைத்து அடுப்பு முட்டி, புத்தம் புதிய பானையை அடுப்பிலே வைத்து, விளைவினால் பெற்றுக் கொண்ட அரிசி மணிகளைப் பாலுடன் கலந்து பானையில் போட்டு இனிமையான பண்டங்களையும் அதனுள் போட்டு பொங்கல் செய்யப்படும். சுப நேரம் பார்த்து பொங்கிய பொங்கல் அமுதினை சுற்றம் சூழ நின்று சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் செய்யப்படும். ஈற்றில் பாசபந்தங்கள் ஆழ அங்கமர்ந்து பொங்கிய பொங்கல் உண்டு மகிழ்வார்கள்.
போகி - இந்திரன்
கோவர்த்தனம் - மதுரைக்கு அருகில் உள்ள மலை
கங்கிராந்தி - சூரியன் தனுராசியில் சஞ்சரிக்கும் காலம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.