இன்றைய நாளில் – 30 வருடங்கள் முன்னர் இடம்பெற்ற ஒபரேஷன் லிபரேஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை உட்பட்ட யாழின் வடமராட்சி பிரதேசத்தைக் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கைப்பற்றுவதற்காக, இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான “ஒபரேஷன் லிபரேஷன்” (Operation Liberation or Vadamaradchchi operation, தமிழில் “விடுதலை விடுவிப்பு”) இன்றைய தினமான மே 26 ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு யாழ் வடமராட்சியின் தொண்டைமனாற்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தால் அதன் வரலாற்றில் முதன் முதலாக எடுக்கப்பட்ட மரபு வழியிலான பாரிய இராணுவ நடவடிக்கையாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகவும் இது கருதப்படுகின்றது.
இந்த நடவடிக்கை ஆரம்பமானவுடன் தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி உள்ளடங்கலான பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து நெல்லியடி, புற்றளை போன்ற இடங்களிலும் பலர் தென்மராட்சியிலும் தஞ்சம் அடைந்திருந்தனர்.
மே 26 ஆம் திகதி இராணுவ நடவடிக்கை ஆரம்பித்திருந்தாலும் மே 28 ஆம் திகதியே வல்வெட்டித்துறை மற்றும் உடுப்பிட்டி பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சமரில் அன்றைய நாளில் வடமராட்சிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த விடுதலைப் புலிகளின் தளபதி சூசை அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அலன் மற்றும் வீமன் உட்பட்ட ஐவர் உயிரிழந்திருந்தனர் என அன்று விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இந்த இராணுவ நடவடிக்கையின் போது, அப்போதைய வடமராட்சிப் பிரதேச விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்த சூசை அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக இலங்கை அரச ஊடகங்களில் அப்போது செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தரப்பில் சூசை அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்ததாக கூறப்பட்ட வல்வெட்டிதுறையைச் சேர்ந்த அலன் என அழைக்கப்பட்ட நடனசிகாமணி பாக்கியலிங்கம் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த வீமன் ஆகியோருடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவா உட்பட ஐவர் மரணமடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.