டென்மார்க்கில் நிகழ்ந்த உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2014 (புதன்கிழமை)
வல்வையைச் சேர்ந்த கே.எஸ்.துரையின் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் வெளியீட்டு விழா சிறப்புக்காட்சி டென்மார்க் கேர்னிங் நகரில் கடந்த 22.03.2014 அன்று மதியம் 14.00 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் ரசிகர்களுக்கு ஒரு திரையரங்கிலும், டேனிஸ் மக்களுக்காக டேனிஸ் மொழி விளக்கக் குறிப்புக்களுடன் இன்னொரு திரையிலும் காண்பிக்கப்பட்டது.
மொத்தம் 450 ஆசனங்கள் கொண்ட இரண்டு அரங்குகளும் ரசிகர்களால் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்க பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே நாடுகளில் இருந்தும், டென்மார்க்கின் பல்வேறு நகரங்களில் இருந்தும் கலைஞர்களும், ரசிகர்களும் குவிந்திருந்தனர்.
ஒல்போ பல்கலைக்கழகத்தில் இருந்து திரைப்பட நிபுணர்கள் குழுவொன்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
முதலில் நடிகர் லிமோஸ் வாகனத்தில் நகரத்தைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, செங்கம்பள வரவேற்பளித்து திரையரங்கு கொண்டுவரப்பட்டார்கள்.
அங்கு பலூன் ஜோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரங்கில் திரைப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற்றது, அத்தருணம் இசையமைப்பாளரும், நடிகருமான வஸந்த் முக்கிய உரையாற்றினார்.
டென்மார்க் ஆளும் சோசல் டெமக்கிரட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தகவல் தொடர்புத்துறை பாராளுமன்ற குழு நிலைத் தலைவருமான திரு. ரோல்ஸ் ராவன் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றினார்.
அத்தருணம் டென்மார்க்கில் குடியேறிய தமிழ் மக்கள் வர்த்தக ரீதியான திரைப்படங்களை தயாரிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது குறித்து டென்மார்க் நாடு பெருமையடைவதாக சுட்டிக்காட்டினார்.
விரைவில் தமிழகத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் மக்கள் கருத்தறிவதற்காக டென்மார்க்கில் உள்ள 15 திரையரங்குகளில் படிப்படியாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் புலம் பெயர் வர்த்தக சினிமா தயாரிப்பில் முக்கிய காலடியை பதித்துள்ளதாக பிரான்சில் இருந்து வந்த கலைஞர்கள் பாராட்டினார்கள்.
திரைப்படம் முடிவடைந்த பின்னர் கலைஞர்களுக்கு விருந்துபசாரமும், கருத்தரங்கும் நடைபெற்றது.
நமக்கான சினிமாவை கொண்டு வருவது தொடர்பாக நள்ளிரவு தாண்டி இரண்டு மணிவரை கருத்தரங்கு இடம் பெற்றது, சுமார் 100 பேர்வரை இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் கோலாகலமான விழாவாக இது முன்னெடுக்கப்பட்டது.
நிறைவாக பிரான்ஸ் நையாண்டி மேளக் கலைஞர்களின் வேடிக்கை உரையாடல் நிகழ்வுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
வல்வை மக்களின் வரலாற்றில் இது பொன்னான நாள் என்று இங்கிலாந்தில் இருந்து வருகைதந்த அப்பலோ பானானா லீப் அதிபரான வல்வை த.பாலேந்திரராஜா, பாவலர் சி. கிருஷ்ணானந்ததேவர் ஆகியோர் மகிழ்வு தெரிவித்தனர்.
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் டென்மார்க்கில் தொடர்ந்து காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம்வரை இப்பயணம் தொடரும்.
மேலும் ஏப்ரல் மாத இறுதியில் டென்மார்க் தலைநகர் உட்பட மூன்று நகரங்களில் திரைப்பெரு விழா நடக்க இருக்கிறது.
அந்த நாட்கள் நகர மக்களும், நடிகர்களும் பங்கேற்கும் நிகழ்வாக அமையும், அங்கும் கருத்தரங்குகள், விருந்துபசாரம் என்று பல மணி நேரம் விழா தொடரும்.
அதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளுக்கான காட்சிப் பயணம் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கு முன்னதாக டென்மார்க்கில் பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக திருத்தங்கள் செய்யப்பட்டு, பிரான்ஸ்சில் பெருவிழாவோடு காண்பிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ரசிகர்களின் கருத்துக்கமைவான திருத்தம் செய்யப்பட்டு அமெரிக்கா பயணத்தை ஆரம்பிக்கிறது.
கனடாவில் வல்வை மக்களின் திரைப் பெரும் சினி விழாவாக ஒரே நாளில் ஆறு திரையரங்குகளில் கனடா வெளியீட்டுப் பெருவிழாவாக நடக்க இருக்கிறது.
இப்படம் இலங்கையிலும் காண்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.