வல்வை சிதம்பராக் கல்லூரி நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2013 (திங்கட்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.ராஜதுரை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. சுமார் 02:30 மணியளவில் சிதம்பராக் கல்லூரியின் கலையரங்கவளாகத்தில் ஆரம்பித்திருந்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்த விழாவில் மாணவர்களின் நாடகம், நாட்டியம், வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முன்னாள் காட்லிக் கல்லூரி ஆசிரியரும், கொழும்பு (ஆண்கள்) இந்துக்கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபரும், வடமராட்சி வடக்கு முதியோர் பேரவைத் தலைவருமான திரு.சிவா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புப் பேருரை வழங்கியிருந்தார். விழாவின் முடிவில் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது 07.30 மணிவரை நீடித்திருந்தது.
வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
வல்வை சிதம்பராக் கல்லூரி இதே நாளில் 1896 ஆம் ஆண்டு , மதிப்பிற்குரிய திரு.கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 'சிதம்பரா வித்யாலயம்' என ஸ்தாபிக்கப்பட்டமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த வருடம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினார்களாகக் கலந்து கொண்டிருந்த மறைந்த திரு.R.S.சிவசுப்ரமணியம் (ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்) மற்றும் திரு.V.வேலும் மயிலும் (ஓய்வு பெற்ற பிரதேச செயலர்) ஆகியோர் இதே தினத்தில் வல்வை மக்களால் கெளரவிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகள்
திரு.R .S .சிவசுப்ரமணியம் மற்றும் திரு.வேலும்மயிலும் கௌரவிக்கப்பட்டார்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.