வல்வெட்டித்துறை சிவன்கோவிலில் இன்று சூரன்போர் சிறப்பாக நடைபெற்றது, நாளை திருக்கல்யாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2013 (வெள்ளிக்கிழமை)
கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் இன்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் 04.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் கேடயவாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 07.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
முருகப்பெருமானின் சூரசம்காரம் சிவன் கோவில் வீதியின் முன்பக்க பிரதான வீதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு சூரனோடு முருகன் போர் புரிவதும், சூரன் சக்கரவாகப் பட்சியாக மாறும் நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது. இந்த 'சக்கரவாகப் பட்சி' பல வருடங்களின் பின்னர் கடந்த வருடமே மீள் கொணரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவர்களின் தூதரான காந்தருவர், முருகப்பெருமானுக்கு மாலை இடுவதும் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டிருந்தது .
படங்களில் வல்வை மற்றும் வல்வையின் சுற்று வட்டாரப் பிரதேசங்களிலிருந்தும் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும் தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' யையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நாளை வல்வை சிவன் கோவிலில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.