144 ஆண்டுகளிற்கு ஒரு முறை நிகழும் மஹோதய புண்ணியதினம், ஊரணி தீர்த்தக் கடற்கரையில் 10 கோயில்களின் சுவாமிகள் தீர்த்தம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2016 (வெள்ளிக்கிழமை)
மகோதய புண்ணிய கால தீர்த்தம் எனப்படும், அமாவாசை தினத்தில் திருவோண நட்சத்திரமும் திங்கட்கிழமையும் கூடி வரும்நேரம் மகோதய புண்ணிய காலம் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமை இந்துக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 06.30 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி தீர்த்தக் கடற்கரையில் வல்வெட்டித்துறை மற்றும் வல்வை சுற்றி அமைந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 கோயில்களைச் சேர்ந்த சுவாமிகளின் தீர்த்த ஆடும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இவ்வாறு ஊறணி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடவரவுள்ள சுவாமிகளின் கோயில்களின் விபரம் வருமாறு
1. கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயம்
2. ஆதிவைரவர் ஆலயம்
3. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
4. ஸ்ரீ வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயம்
5.புட்டணி பிள்ளையார் ஆலயம்
6. வயலூர் முருகன் ஆலயம்
7. வன்னிச்சியம்மன் ஆலயம்
8. வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயம்
9. வல்வெட்டி ஸ்ரீ சித்திவிநாயக பூ லட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில்
10. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம்
மஹோதய புண்ணிய தினம்
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இடம்பெறும் "மகோதய புண்ணிய தினம்' ஆனது, இந்த முறை எதிர்வரும் மாசி 8 ஆம் தேதி நிகழ்கின்றது. குறித்த இந்த தினத்தில் அமாவாசை, திங்கட்கிழமை, திருவோண நட்சத்திரம் மற்றும் வியாபாதீப ஜோகம் ஆகிய அனைத்தும் ஒன்றாகக் கூடி மஹோதய புண்ணிய காலம் என்ற சிறப்பைப் பெறுகின்றது.
அமாவாசையானது ஞாயிற்றுக்கிழமை, திருவோண நட்சத்திரம் மற்றும் வியாபாதீப ஜோகம் ஆகியவற்றுடன் சேரும்போது அந்த நாள் ‘அர்த்தோதாய புண்ணிய காலம்’ எனவும் அழைக்கப்படுகின்றது.
இத்தகைய புண்ணிய காலங்களில் கடல் மற்றும் புண்ணிய நதிகளில் புனித நீராடுவதன் மூலம் பித்ருதோஷம், பாவம், சாபம் போன்றன நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தினத்தில் நமது முன்னோர்களான பிதுருக்களை வழிபடுவது சிறந்தது என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த தினத்தில் ஏழைகளிற்கு அன்னதானம், வஸ்திரதானம், சுவர்ணதானம் என்பவற்றை மேற்கொள்ளலும் சிறந்ததுடன், இந்த நாளில் சுவாமிகள் ஒன்றாக தீர்த்தம் ஆடுதலும் மிகவும் சிறப்பைப் பெறுகின்றது.
மஹோதய புண்ணிய தினம் குறித்த வல்வையூர் அப்பாண்ணா எழுதிய ஆக்கம் இன்னும் ஓரிரு தினங்களில் எமது இணைய தளத்தில் பிரசுரமாகும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி மஹோதய புண்ணிய தினம் அன்று உலகில் அதிக மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஒன்றான ‘சீனப் புத்தாண்டு’ (Chinese new year) இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்க்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.