சித்ரா பௌர்ணமி தினத்தன்று காலையில் பறைமேள ஒலியுடன் அம்பாள் தீர்த்தமாடப் புறப்படல், நெடியகாடு பிள்ளையார் கோயிலில் தங்கி, இரவு 7 மணிக்கு பந்தலுக்கு வருதல், மோர்மட நிகழ்ச்சிகள், இரவைப் பகலாக்கும் மின் அலங்காரங்கள், வீதிகளில் கட்டப்பட்டிருக்கும் வாழை – மூங்கில் வரிசைகள், வீதி நிகழ்ச்சிகள், தாக சாந்திக்கான தரிப்பிடங்கள், வளைவுகள், கட் அவுட்டுகள், பெருவிழாக்காண வந்துகுவியும் மக்கள் வெள்ளம் - இவை அனைத்தையும் ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகின்றோம். அதனால், மேற்குறித்த விசேடங்களின் விபரத்திற்கு போகமால், சற்றே முன்னோக்கி உங்களை அழைத்து செல்கின்றேன்.
அம்பாளுடன் பறை மேளங்கள்
ஏறக்குறைய 1968 வரை அம்பாள் தீர்த்தோற்சவத் திருவிழா, “வல்வைச் சரித்திரம் கண்டறியாத பெருவிழா” என்றே அழைக்கப்பட்டதுடன் – பத்திரிக்கை விளம்பரங்களிலும் அவ்வாறே வந்திருக்கிறது. எனவே, “இந்திரவிழா”வின் தோற்றப்பாட்டிற்கு முந்தியதே இந்தப் பழங்கதை.
அந்நாளைய பிள்ளையார் தெற்கு வீதி இன்று இருப்பதைப்போல அகன்ற பெருவீதியாக இல்லாமல், ஒடுக்கமான வீதியாக இருந்தது. தெற்கு வீதியிலுள்ள கிணற்றுக்கு சரி கிழக்காக பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்களாக இருந்த “சோமய்யா” வின் வீடு, (சோமசுந்தரக்குருக்கள்) இவர் “பொன்னு ஜயா” – நந்தகோபாலக்குருக்களின் தகப்பனார்) ஒரு மாட்டுத் தொழுவம், ஒரு முருங்கை மரம், ஆகியன இருந்தன. இந்தக் குருக்கள் குடிமனைக்குத் தெற்காக 10’அகலமான கிழக்கு – மேற்கான பாதையொன்று இருந்தது. இப்போது மேடை போடப்பட்ட பாதையாக உள்ளது. தீர்த்த நிகழ்ச்சிகளையும் – வாண வேடிக்கைகளையும் காணவரும் கூட்டம் அதிகரிக்க, குருக்கள் குடிமனைப் பகுதி முற்றாக அகற்றப்பட்டு, தெற்கு வீதி இரட்டுப்பு அகலமாகி புதிய தோற்றப் பொலிவு பெற்றது.
இன்றுள்ள பெருவிழா அலங்காரங்களுக்கும் மேடை நிகழ்ச்சிகளுக்கும் எத்தனை முக்கியத்துவம் உள்ளதோ, அதேபோல அந்நாளைய தீர்த்தப் பெருவிழாவின் வெடி – வாண வேடிக்கைகள் மிகப் பிரபல்யாமானவை. மோர்மட நிகழ்ச்சிகள் சில மணி நேரத்தில் முடிவடைய, வாண வேடிக்கைகள் பல மணி நேரம் நீடிக்கும். இன்று இந்திரவிழா காண வரும் பல லட்சம் மக்கள் கூட்டம் அன்று இல்லையாயினும், ஊரவர்களும் – அயல் கிராம மக்களும் இந்த வாணவேடிக்கையைக்காண ஆயிரக்கணக்கில் கூடுவர்.
இந்திரவிழாவின் பகற்பொழுது
தெணிக்கிணற்றிக்கு வடகிழக்கு மூலையில் (இடைக்காலத்தில் விறகு காலை இருந்த இடம்) காணியின் மையத்தில் ஒரு கிணறும் ஒரு கொட்டிலும் இருந்தது. தீர்த்தோற்சவத்திற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே வெடிகளும் – வாணங்களும் தயாரிப்பு வேலைகள் அந்தக் கொட்டிலிலும் – கொட்டிலை அண்டிய மர நிழலிலும் ஆரம்பமாகிவிடும். பின்னாளில் இந்தக் கொட்டில்கள் இல்லாமற்போக, கிணறு மட்டும் இடிபாடுகளுடன் இன்றும் காணியின் மையத்தில் உள்ளது.
இவர்களது வாணத் தயாரிப்பில் “MILK MAID” நோனா மார்க் பால் பேணிக்குப் பிரதான பங்கு உண்டு. சாதாரண அளவு – அதைவிட சிறிய அளவு கொண்டதாக இரண்டு அளவுகளில், நடுவே ஒரு சிறிய மூடி வைத்து, ரின் பால் அடைக்கப்பட்டிருக்கும். கத்திச் சொண்டினால் மூடியைத் தட்டிவிட ” நோனா மார்க் பால் வெளியே கொட்டும். இந்த வெற்றுப் பேணிகளை வீடுவீடாகச் சேகரித்து கை வண்டில்களில் ஏற்றிச்செல்வர்.
” நோனா மார்க் பாலின் இனிமைபோல இதுவும் ஒரு சுவையான பந்தியாகும். மதவடி சந்தியில் வடக்கு பார்த்தபடியான பழைய தலைவாசல் வீட்டில், (தலைவாசல் அருகே இருந்த மைல் கல்லு இன்றும் உள்ளது. அந்த பழைய தலைவாசலின் பெயர் "தேவ குஞ்சரி வாசம்" என்பதாகும்) கைவண்டிலில் விறகு இழுத்து சீவியம் செய்து வந்த நடராசா எனும் பிரமச்சாரி குடியிருந்தார். அவர் ஒரு நோனா மார்க் பாற் பிரியர். அவர் மூன்று வேளையிலும் உணவு உட்கொண்டதை விட, பல தடவைகளில் நோனா மார்க் பால் உட்கொண்டதையே அதிகம் எனலாம்.
வல்வைப் புகழ் - புகைக் குண்டு
ஆனாலும் “மனுஷன்” இறக்கும் காலம்வரை நோய் நொடி இன்றி (குறிப்பாக நீரிழிவு இன்றி) வாழ்ந்து முடித்தார் என்பது ஆச்சரியமானதே. நடராசாவின் பழைய வீட்டில் மூலைக்கு மூலை நோனா மார்க் வெற்றுப் பேணிகள் குவிக்கப்பட்டிருக்கும். தனியாக ஒரு கை வண்டில் கொண்டு வந்து இந்த வெற்றுப் பேணிகளை எடுத்து செல்வதை பல தடவைகள் பார்த்திருக்கிறோம். இந்தப் பேணிகள் “விறிசு வாணம்” செய்வதற்கு ஏற்ற பொருளாகும்.
தெணியடி வாணக் கொட்டிலில் தயாராகும் வாணங்களைத் தவிர “அளவெட்டி” போன்ற இடங்களிலிருந்து பெறப்படும் பலவிதமான அவுட்டுகள், பூப்பொழிவு மத்தாப்புக்கள் , எலி வாணங்கள், சீறுவாணங்கள், சிறிய –பெரிய குருவி வாணங்களும் தெணியம்பை மகோற்கடம் அண்ணாவிடமிருந்து பெறப்படும் மத்தாப்புக்கள், ஆகாயக்கோட்டைகள் முதலானவையும் கொள்வனவு செய்து வாண வேடிக்கை களைகட்டி நிற்கும்.
பிள்ளையார் வடக்கு வீதியில் உள்ள கிணற்றினை நெருங்கியபடி நின்றிருந்த தென்னை மரத்திற்கும், வீதிக்கும் மேற்காக இருந்த பெரிய அரச மரத்திற்கும் இடையே உயரத்தில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த கேபிள் வரிசையாக ஆயிரக்காணக்கான “மூலை வெடிகள்” இணைக்கப்பட்டிருக்கும். அம்பாள் பிள்ளையார் மோர்மடம் வந்து சேர்ந்ததும் மூலை வெடியின் இரு முனைகளும் கொழுத்தப்படும். அம்பாள் மோர்மடத்திலிருந்து ஊறணி நோக்கிப் புறப்படும் வேளைவரை இந்த மூலைவெடிகள் வெடித்துச் சிதறியபடி இருக்கும். ஒவ்வொரு “மூலைவெடி” யும் வெடிக்கும் போது உண்டாகும் சத்தம் படு பயங்கரமாக இருக்கும். இதுவும் மகோற்கடம் அண்ணாவின் கைவண்ணமே.
வெடி மருந்துகளை கலந்து அரைக்கும் பொழுது, தாமாகவே தீப்பற்றிக் கொண்டு, தெணியடி வாணக் கொட்டகை இருமுறை எரிந்து போன சந்தர்ப்பங்களும் உண்டு.
நிகரற்ற நெடியகாடு மோர்மடம்
ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வாணங்கள் இந்த தீ விபத்துகளினால் அழிந்து போனதே தவிர எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை..
ஆயினும் வாணக் கொட்டகை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் புரோக்கர் வேலும் மயிலும் ஆவார். கருகருவென வளர்ந்திருந்த சிலுப்பாத் தலைமுடி..... நீண்டு வளர்ந்திருந்த தாடி.....நெடிய – கரிய – மெலிந்த உருவம் – இதுவே புறோக்கரின் தோற்றம். இந்த வெடி விபத்தில் வலது பக்கம் முழங்கை வரை கையை இழந்ததுடன், வலது கண்ணையும் இழந்தார். இன்னும் சிலர் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர் .
சாதாரணமாகத் தடியில் கொழுவி விடும் பெரிய குருவி வாணத்தை புறோக்கர் – தன் இடது கையில் பிடித்திருக்க – இன்னொருவர் குருவி வாணத்தைக் கொழுத்திவிட – மிக லாவகமாக அதனைப் புறோக்கர் விண்ணில் ஏவுவார்.
இன்று பிள்ளையார் நேர் ஒழுங்கையில் வலது புறமாக பூங்கொல்லை (நந்தவனம்) இருப்பதைப் பார்க்கிறீர்கள். அந்நாளில் இந்தக் காணியில் –தெணியடி வாணக் கொட்டகை விபத்துக்களின் பின்னர் தற்காலிகமாக இருந்த வாணக் கொட்டகையும் ஒரு முறை தீப்பற்றி எரிந்து போயுள்ளது.
இந்திரவிழாவிற்கு தயாராகவுள்ள வீதி
மோர் மடத்தருகே புகைக்குண்டு ஒட்டப்படும் மடத்தின் விறாந்தைப்பகுதி அந்நாளில் கிடுகினால் வேயப்பட்டிருந்தது. வாண வேடிக்கை வேளையில் இரண்டு மூன்று தடவைகள் இந்தக் கிடுகுக் கூரை தீப்பற்றிக் கொண்டதனால் பின்னாளில் ஓடு வேயப்பட்ட விறாந்தைப் பகுதியானது.
சிறுதும் பெரியதுமான பல வர்ணப் புகைகுண்டுகள் வானத்தில் பறக்க விடப்படும் நிகழ்வு அந்நாளிலும் தீர்த்தப் பெருவிழாவின் முக்கிய அம்சமாகும். புகைக்குண்டு தயார் செய்யும் நபர்கள் நம்மூரில் மட்டுமே இருந்தனர். கொழும்பு – திருமலை போன்ற இடங்களுக்கும் இங்கிருந்து புகைக்குண்டுகளை எடுத்துச் சென்று விடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
மோர்மடத்தின் மேல் புகைக்குண்டு
குறிப்பாக, திருமலை கோணேசர் ஆலய மகோற்சவத்தின் பின்னர் நடைபெறும் தெப்பத் திருவிழா திருமலை துறைமுகத் தொழிலாளர் சங்கத்தினால் நடத்தப்படும் திருவிழாவாகும். ஒரு வேளையில் திருமலை துறைமுக கூட்டுத்தாபனத்தில் நம்மவர்கள் – நூற்றுக்கும் அதிகமாக – பல்துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தனர். நம்மவர்கள் பலரும் உயர் பதவிகளில் ஆளுமை செலுத்தி வந்தமையால் நமது ஊர் திருவிழா பாணியிலேயே தெப்பத் திருவிழா ஏற்பாடுகளும் அமைந்திருந்தன.
திருமலை முற்றவெளி கடற்பரப்பில் நடக்கும் இந்த தெப்பத் திருவிழாவில் – நெடியகாடு இளைஞர்களால் – பல அளவுகளில், பல வர்ணங்களில் இங்கு தயாராகும் புகைக்குண்டுகள் – அங்கு வானத்தில் பறக்க விட்டு அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தினர். பல வருடங்கள் நீடித்த இந்நிகழ்வு உயர்மட்டத்திலுள்ள பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுத் தந்தது.
விநாயகர் கட் அவுட்
அந்த வேளையில் இருந்த நெருக்கமான வீதி அமைப்புக்களும், வாண வேடிக்கைகளினால் பொது மக்களுக்கு ஏற்பட்ட அசெளகாரியங்களும் காரணமாக படிப்படியாக வாண வேடிக்கைகள் குறைந்து கொண்டே வந்தன. அதனால் பெருவிழாவின் ஏனைய அலங்காரங்கள் – வீதிச் சோடனைகள் – மின் கட்அவுட்டுகள் – வளைவுகள் எனப் பல்வேறு விடயங்களிலும் கவனம் திரும்பியது.
“வல்வைச் சரித்திரம் கண்டிராத பெருவிழாவின் (1967 காலப்பகுதி) ஆரம்பத்தில் வாழைகளும் – வளைவுகளும் அந்த நாளில் வெள்ளக் குட்டி அண்ணா (இன்று குஞ்சண்ணா கடையடி இருக்குமிடம்) கடையடி வரை மட்டுமே இருந்தது. 1968 இல் அலங்காரங்கள் வேம்படி வரை நீடிக்கப்பட்டது. வருடா வருடம் கூட்டம் அதிகரிக்க அலங்காரங்களும் – வளவுகளும் சந்திவரை வந்து, பின்னர் அம்பாள் வீதிவரை வந்து சேர்ந்தது.
இந்தக் கால கட்டமே தீர்த்தப் பெருவிழா “இந்திர விழா” வாகப் பரிமாணம் பெற்ற கால கட்டமாகும்.
இந்திர விழாவிற்கான பந்தல்
இந்த மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியில் பழைய மோர்மடக் கட்டடத்திற்குப் பதிலாக புதிய மோர்மடம் கட்டும் பணி ஆரம்பமானது. காலஞ்சென்ற “தியாகராசா – தேவசிகாமணி” அவர்களினால் 1978 இல் புதிய மோர்மடம் அமைத்து அர்ப்பணிக்கப்பட்டது.
நில மட்டத்திலிருந்து 3 அடி வரை உயரமான எண்கோண மண்டபமாக நவீன கட்டடப்பாணியில் அழகான இந்த மோர்மடம் தோற்றம்பெற்றது. காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் S.V.நடராசா அவர்களின் இரண்டாவது மகளை திருமணம் செய்தவரே மேற்குறிப்பிட்ட “தியாகராசா தேவசிகாமணி” ஆவார்.
கால நேரமறிந்து செய்யப்பட்ட தெற்கு வீதியின் அகலிப்பும், புதிய மோர்மடத்தின் அழகும் – பொலிவும் பிற்கால “இந்திர விழா" விற்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது எனலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.