வாரம் ஒரு பழங்கதை – யானை நடந்த கதை – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2015 (திங்கட்கிழமை)
வல்வை சந்தி ஒழுங்கையிலிருந்து சுங்க வீதிவரை வீதியின் வடபுறமாக இருந்த கடைத் தொகுதியினை உங்களுக்கு அறியத்தருகின்றேன். சந்தி ஒழுங்கையிலிருந்து கிழக்காக அடுத்தடுத்து வரும் கடைகள் இவை பத்திரிக்கைகள் மட்டும் விற்பனை செய்யப்படும்.
சந்தி ஒழுங்கையிலிருந்து கிழக்காக இருந்த கடைகள்
கந்தப்பா கடை (தற்பொழுது மின்மாற்றி உள்ள இடம்) ஒரு கிட்டங்கியை உள்ளடக்கிய பலசரக்குச் சாமான்கள் விற்பனை செய்யும் திருச்சிற்றம்பலம் கடை, அருகே ஒரு “வெல்டிங்” கடையும் அப்பு அண்ணாவின் புத்தகக்கடையும் சேர்த்து “மெத்தைக் கடை” என்றழைத்தனர். நம்மூரவரும் தொண்டைமானாற்றில் திருமணம் செய்தவருமான அ.கதிரவேற்பிள்ளை என்பவரே “வெல்டிங்” கடையின் உரிமையாளர் ஆவார்.
“A.K.Brothers” என்ற பெயருடனான புத்தகக் கடையில், பாடசாலை புத்தகங்கள் – எழுது கருவிகள் – சைக்கிள் உதிரிப்பாகங்கள் முதலான பலவும் விற்பனையாகின.
வெல்டிங்” கடைக்கும் மெத்தைக் கடைக்கும் 3 படிகள் மேலேறிச் செல்லவேண்டும். “மெத்தைக் கடை” மூன்று அடுக்குள்ள பழைய கட்டடம். நிலமட்டத்திற்கு கீழே ஒரு வீடு. வீதிப்பக்கமாக யன்னல்களும், பின்புறமாக (வடபுறம்) கதவுகளும் இருந்தன. வீட்டின் நடுப்பகுதியே இரண்டு கடைகளும் ஆகும். மேல்மாடியில் காளி கோவில் பொன்னண்ணாவின் போட்டோக்கடை. இதுவே மெத்தைக் கடையின் அமைப்பு.
சந்தி ஒழுங்கை
இவற்றிற்கு கிழக்காக ஆயுர்வேத மருந்துகள் – மூலிகைகள் விற்பனை செய்யும் மருந்துக்கடை. இதனை தமிழ் மருந்துக் கடை என்றே அழைத்தனர். பின்னாளில் இந்த இடத்தில் ஒரு லோன்றி இருந்து வந்தது. அடுத்ததாக பெரியதொரு கிட்டங்கி. இது பொலிகண்டி நா.வேலாயுதம் புரக்ரரின் மாலை நேர ஆபீசு, அடுத்திருந்தது வல்வை சனசமூக சேவா நிலையம் அந்த நாளில் இயங்கி வந்த இடம். தற்போது பேருந்து தரிப்பிடம் அமைந்துள்ள இடத்திற்கு வல்வை சனசமூக சேவா நிலையம் இடம் மாறியது. அருகே சுங்க வீதி.
சந்தி ஒழுங்கைக்கும் சுங்க வீதிக்கும் இடைப்பட்ட பகுதியின் வீதியோர அமைப்பினை நினைவிற்கொள்ளும்படியாக உங்களுக்கு தர முயன்றிருக்கின்றேன்.
சுங்க வீதி
நான் மேற்கூறிய நா.வேலாயுதம் புரக்ரரின் கிட்டங்கியின் ஒரு பகுதியும், வல்வை சனசமூக சேவா நிலையம் ஒரு காலத்தில் இயங்கி வந்த வீடு போன்ற அமைப்பும் மட்டுமே இடிபாடுகளுடன் தற்போதுள்ளது. ஏனைய அனைத்தும் இன்று இருந்த இடம் அடையாளமே தெரியாதபடி உள்ளது. இரண்டொரு நிழல் மரங்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றன.
இந்தகக் கடை வரிசையின் இடையே உள்ள “வெல்டிங் கடையே “யானை நடந்த கதை”யின் மூலமும் முடிவும் ஆகும்.
வல்வை சனசமூக சேவா நிலையம்
யானையை நடக்க வைத்த மும் மூர்த்திகள்:
தொண்டைமானாறு - அ.கதிரவேற்பிள்ளை, பாலசுப்ரமணியம் வாத்தியார் (தெணியம்பை சுந்தரி மருந்தகத்திற்கு 50 மீற்றர் தூரம் கிழக்கே, வீதிக்குத் தெற்காக உள்ள சிறிய ஒழுங்கையில் நேர் வீட்டில் வசித்தவர்), “மடத்தார்” என அந்த நாளில் அனைவராலும் அறியப்பட்ட வெ.திருமேனிப்பிள்ளை (சிவன் கோயில் எசமான் குடும்பத்தில் ஒருவர்) ஆகிய மூவருமே யானையை நடக்க வைத்த விற்பன்னர்களாகும்.
தொண்டைமானாறு கதிரவேற்பிள்ளைக்கு பெறாமகன் முறையானவர் ரேடியோ சத்தியண்ணா, (T.V திருத்துபவர்) இவர் அந்த நாளில் “பொடியானாக” அவர்களுக்கு அருகிலேயே உதவியாக இருந்து பங்களிப்புச்செய்தவர்.
ஊரின் கிழக்காக அம்பாள் தீர்த்தத் திருவிழாவன்று நெடியகாடு இளைஞர்களின் வரவேற்பாக “வராலாறு காணாத பெருவிழா நடைபெற்று வந்தது. (சில வருடங்களின் பின்னரே “இந்திரவிழா”வாகத் தோற்றம் பெற்றது).
பல ஆண்டுகள் இந்த வரலாறு காணாத பெருவிழா தொடர்ந்தது. இதேபோல ஊரின் மேற்கே கணபதியின் தீர்த்தோற்சவ தினத்தன்று அம்மன் கோவிலடி இளைஞர்களால் ஒரு சில வருடங்கள் தீர்த்தவிழா மிகச்சிறப்பாக நடந்தது. ஒரு தீர்த்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக யானையை நடக்க வைத்தார்கள் இந்த மூவரும்.
யானை
ஊரிலுள்ள சகல சைக்கிள் திருத்தும் இடங்களிலிருந்தும் பெறப்பட்ட பழைய சைக்கிள் உதிரிப்பாகங்கள், யாழ்ப்பாணம் பழைய இரும்புக் கடையிலிருந்து பெறப்பட்ட பழைய இரும்புச் சாமான்கள், புதிதாக வாங்கப்பட்ட கனம் குறைந்த 1”, 2” இரும்புப் படங்கள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி, வெல்டிங் செய்து, உட்புறமாக பற்றிகளை இணைத்து முழு உருவ அமைப்பும் – உயரமும் கொண்ட யானை உருவாகியது.
யானையின் உருவ அமைப்பிற்கு மேலாக சாக்குகள் கொண்டு இணைத்துத் தைத்து, கறுப்பு மைபூசி யானையை கரிய நிறமாக்கினர்.
சக்திமிக்க பற்றறிகள் இயக்கத்தில், உருளைகள் பூட்டப்பட்ட தன் கால்களை யானை முன்னும் பின்னுமாக அசைக்கும். சுளகு போன்ற செவிகள் இரண்டும் அடிக்கடி வீசிக்கொண்டிருக்கும். “வணக்கம்” தெரிவிக்கும் பாணியில் துதிக்கையை இடையிடையே மேலே தூக்கிக் கீழே விடும். கீழ்த்தாடை தன்னிச்சையாக ஆடும். மொத்தத்தில் யானை தனது அனைத்து இயக்கங்களையும் நேர்த்தியாகச் செய்தது.
பிள்ளையார் தீர்த்தோற்சவத்தன்று மாலை 7 மணியளவில் சிவன் கோவிலிலிருந்து புறப்பட்டு, சிவன் – அம்மன் புறவீதிகள் கடந்து, அம்பாள் வசந்த மண்டபத்தின் பின்புறமாக வீதியை நெருக்கியபடி இருந்த பந்தலின் கீழே தரித்து நிற்க, மோர் மடத்தின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. (என்ன நிகழ்ச்சி நடந்தது என்பதை நினைவில் கொண்டு வர முடியவில்லை)
அதேவேளை சந்தியில் வெல்டிங் கடையின் உட்புறத்திலிருந்த யானையை – படிகள் கடந்து – கீழே கொண்டு வரும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர். மிகப் பக்குவமாக இறக்கி வெளியே எடுத்தபோதும் யானையின் முன்னங்கால் ஒன்று நொண்டிக் கொண்டது. நொண்டிய காலை இழுத்துக் கொண்டு, மற்றக் கால்களை முன்னும் பின்னுமாக அசைத்தபடி – யானை பிள்ளையார் தரித்து நின்ற இடம் நோக்கி மெது மெதுவாக அசைந்து வந்தது. வீதி ஓரத்தில் நின்ற பல்லாயிரக் கணக்கான மக்கள் யானையின் நடையழகை ரசித்தபடி ஆரவாரம் செய்தனர்.
மெல்ல ஆசைந்து வந்த யானையின் துதிக் கையில் மாலையையும் – சால்வையையும் இணைத்துவிட, யானை பிள்ளையார் வீற்றிருந்த பந்தல் நோக்கி மெதுவாக நகர்ந்து குருக்களிடம் அவற்றினை நீட்டியது. குருக்கள் அதனை வாங்கி பிள்ளையாருக்குச் சாத்த, பக்தர் கூட்டம் “பிள்ளையார் அப்பா” “பிள்ளையார் அப்பா” எனக் கோஷமிட்டனர்.
வல்வையூர் அப்பாண்ணா
மோர் மடத்தின் பின்புறம், வைரவர் கோவிலுக்குக் கிழக்காக, ஒரு சிறிய மடம் இருந்ததையும், வைரவருக்குப் பொங்கல் செய்பவர்கள் அந்த மடத்தில் வைத்துத் தேங்காய் துருவுவது போன்ற காரியங்கள் பார்ப்பதையும் ஞாபகப்படுத்துங்கள்.
சரித்திரம் படைத்த இந்த யானை நீண்டகாலமாக மேற்குறித்த மடத்தில் தூங்கிக் கிடந்தது. ஆயினும் யானாயின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.
2002 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தவேளை இந்த மடம் இடித்து அகற்றப்பட்டு வைரவர் சன்னிதிக்காக புறவீதி அகலமாக்கப்பட்டது. நவீன தொழிநுட்ப வசதிகள் கிடைக்கப்பெறாமலேயே, பழைய இரும்புச் சாமான்கள் மட்டுமே கொண்டு,
நம்பிக்கையை மூலதனமாகி இந்த முயற்சியில் வெற்றிகண்ட மும் மூர்த்திகளான அ.கதிரவேற்பிள்ளை, பாலசுப்ரமணியம் வாத்தியார், வெ.திருமேனிப்பிள்ளை ஆகிய மூவரும் நாம் மனதில் நீங்காமல் நிறைந்துள்ளனர்.
இந்த நிகழ்வு நடந்து 1966 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும், ஆனாலும் உறுதியாகக் கூற முடியவில்லை.
- பழங்கதை தொடரும்
வல்வையூர் அப்பாண்ணா
குறிப்பு
இதுவரை இவரின் 6 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.