வாரம் ஒரு பழங்கதை – இந்திராணிக்கு அகவை அறுபத்தியெட்டு – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2015 (திங்கட்கிழமை)
“பழைய ஆஸ்பத்திரி வீதி” என இன்றும் நம்மவர்களால் அழைக்கப்படும் வீதியின் அந்தத்தில் “றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை” இன்று இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இன்று பாடசாலை இயங்கிவரும் இந்த பழைய மருந்தக வளவினுள் ஒரு அரசாங்க மருந்தகம் ஒரு காலத்தில் இயங்கி வந்திருக்கின்றது.
திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை
நாலு பக்கமும் அகலமான விறாந்தையும் – நடுவே இரண்டு அறைகளும் கொண்ட பழைய நாற்சார் வீடு அது. இந்தப் பழைய சுண்ணாம்புக் கட்டத்தில் வெளி நோயாளர்களைப் பார்வையிடுவதும், மருந்து கட்டும் காரியமும் மட்டுமே நடந்து வந்துள்ளது. அந்த நாளில் தாதியர்கள் வீடுகளுக்கு வந்து பார்க்கும் பிரசவமே வழமையாக இருந்து வந்துள்ளது.
வல்வை மக்களும், அயல் ஊரவர்களும் படும் அவலத்தை அவதானித்த வள்ளல் இ.அப்புக்குட்டியாபிள்ளை அவர்களால் ஊரணியில் ஒரு வைத்தியசாலை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. கட்டட வேலைக்கான செங்கற்கள், ஏனைய பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்து பாய்க்கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, வைத்தியசாலைக்கு முன்பாகவே இறக்கப்பட்டு வேலைகள் நிறைவுபெற்றன.
திரு திருமதி.அப்புக்குட்டியாபிள்ளை
இ.அப்புக்குட்டியாபிள்ளையின் மகள் “இந்திராணி” யின் பெயரில் “இந்திராணி வைத்தியசாலை” என பெயர் சூட்டி, அப்போதைய சுகாதார அமைச்சர் கெளரவ ஜோர்ஜ் ஆர் டி சில்வா அவர்களால் 01.02.1947 இல் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது. திருமதி.அப்புக்குட்டியாபிள்ளையின் பெயர் கொண்ட “சாரங்கம்மா பிரசவவிடுதி” யும் இதேதினத்தில் திறந்து வைக்கப்பட்டது.
திருமதி.இந்திராணி
சிவன் கோயில் வாசல் வீதியில் குடியிருந்த தங்கவேலாயுதம் மங்கயற்கரசி (மங்கை) என்பவரே சாரங்கம்மா பிரசவ விடுதியில் முதற் குழந்தையை பெற்றெடுத்தவர் ஆவார். முதற் பிறந்த ஆண் குழந்தைக்கு மறைந்த அப்புக்குட்டியாபிள்ளை தங்கச்சங்கிலி, காப்பு அணிவித்து மகிழ்ந்தார். தற்பொழுது சிவன் கோயிலின் தென்கிழக்கு மூலையில் குடியிருக்கும் பொன்னம்பலம் (யோகச்சந்திரன், மோகண்ணா என்றும் அழைக்கப்படுபவர்) என்பவரே முதற் பிறந்தவர் ஆவார்.
சாரங்கம்மா பிரசவவிடுதி
அகவை அறுபத்தியெட்டைக்காணும் அவர் இன்று பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
திரு.அ.சி.விஷ்ணுசுந்தரம்
மறைந்த அப்புக்குட்டியாபிள்ளை அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் “முகாந்திரம்” என்ற கெளரவ விருது வழங்கிக் கெளரவித்திருந்தது. முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை 1959 – 1960 இல் வல்வை பட்டினசபையின் தலைவராக இருந்து. மக்கள் சேவையாற்றினார். புதிய நிர்வாகசபையின் நிர்வாகக் கட்டடம் அருகே அன்னாரின் பெரிய முழு அளவிலான உருவச்சிலை 23-01-2011 இல் திறந்து வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
வைத்தியசாலையில் கூடுதல் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வசதியாக மறைந்த வர்த்தகர் அ.சி.விஷ்ணுசுந்தரம் அவர்களால், தனது தாயார் பெயரில் “திருமதி சிற்றம்பலம் பார்வதிப்பிள்ளை பிரசவவிடுதி” யும், மாடியில் குழந்தை நோயாளர் விடுதியும் கொண்ட மாடிக் கட்டடமும் கட்டிக் கொடுக்கப்பட்டது.
திருமதி சிற்றம்பலம் பார்வதிப்பிள்ளை பிரசவவிடுதி
வடக்கு தெற்காக அமைந்த இந்தக் கட்டடம் 02-02-1966 இல் அன்றைய சுகாதார அமைச்சர் கெளரவ M.D.H ஜெயாவர்த்தனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் வர்த்தகர் அ.சி.விஷ்ணுசுந்தரம் அவர்களுக்கு “சமாதான நீதவான்” கெளரவப்பட்டம் வழங்கியிருந்தது.
பங்குனி 1992 இல் இந்திராணி வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளராக இருந்த ஓய்வுபெற்ற காலஞ்சென்ற R.S.சிவசுப்ரமணியம் அண்ணா அவர்களே மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர முழு முயற்சியையும் மேற்கொண்டு வெற்றிகண்ட பெருந்தகையாவார். இவரது தளராத முயற்சியினால் நம்மூர் மக்களும் அயற் கிராமமக்களும் பெரிதும் பயன்பெற்றுவருகின்றனர்.
R.S.சிவசுப்ரமணியம்
ஊரணி வைத்தியசாலையில் காலத்துக்கு காலம் நம்மவர்கள் பலபேரும் வைத்திய அதிகாரிகளாகவும் பதிவு செய்யப்பட்ட வைத்திய அலுவலர்களாகவும் மக்கள் சேவையாற்றியுள்ளனர். மிகவும் இக்கட்டான காலப்பகுதிகளில் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் நீண்டகாலம் சேவையாற்றி ஓய்வுபெற்ற “அப்பு டொக்டர்” (Dr.அப்பாத்துரை) மக்கள் மனதைவிட்டு நீங்காத ஒரு சேவையாளன்.
இதேபோல வைத்தியசாலையின் ஊழியர்களாகவும் – தாதியர்களாகவும் நம்மூரவர்கள் பலபேர் சிறந்த பணிபுரிந்து ஓய்வுபெற்றனர். Dr.சி.சிவயோககுரு 01-02-1977 இல் கடமையேற்றதும், மாவட்ட அதிகாரியாக Dr.க.மயிலேறும்பெருமாள் வைத்தியசாலையைப் பொறுப்பேற்றதும் 13-07-2013 இல் Dr.சோதிமயம் மாற்றலாகி வந்ததும் நிகழ்ந்தது.
Dr.க.மயிலேறும்பெருமாள் கடமையேற்ற பின்னருள்ள காலம் பொற்காலம் எனலாம். அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் பலவும் கிட்டிய போதிலும், புலம் பெயர்ந்த நம்மவர்கள் காட்டிய அக்கறையும், அவசியம் கருதி அவர்கள் அளித்த நிதி உதவிகளும் பல நற்பணிகள் ஆற்றுவதற்கு அவரைத் தூண்டின.
திரு.ம.க.சிவாஜிலிங்கம்
நாளும் பொழுதும் வைத்தியசாலையில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. Dr.க.மயிலேறும் பெருமாளின் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் பூரண ஒத்துழைப்பு நல்கிவந்த வைத்தியசாலை அபிவிருத்திச்சபையினரின் சேவைகளை நாம் மறக்க முடியாது. Dr.க.மயிலேறும்பெருமாள் 01-11-2013 இல் மாற்றம் பெற்றுச் செல்லும் வரையிலான அவரது சேவைகளும் பணிகளும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.
ஒரு காலத்தில் நோயாளர்களின் பாவனைக்கு வேண்டிய குடிதண்ணீர் (ஒப்பந்தக் காரர்களினால்) குடங்களில் கொண்டு வரப்பட்டமையை நாம் அறிந்ததே. தற்போது வைத்தியசாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மேற்காகவுள்ள தெணிக் கிணற்றிலிருந்து குழாய் வழியாக நன்னீர் வந்து சேருகின்றது.
தங்கம்மா பிரசவஅறை
எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ம.க.சிவாஜிலிங்கம் அவர்களால் பாராளுமன்ற உறுப்பின்றாகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபா வரை செலவு செய்து இப்பணி நிறைவேறியது.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும், பல்வேறு வகையாகவும் தன்னால் முடிந்த அனைத்தையும் வைத்தியசாலைக்கு அர்ப்பணிப்புடன் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ம.க.சிவாஜிலிங்கம் அவர்கள் எம் அனைவரினதும் நன்றிக்குரியவர் ஆவார்.
தெணிக் கிணற்று நீர் வழங்கும் திட்டம் 30-11-2011 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதைவிட தேசிய நீர் வழங்கல் சபையினரால் தற்போது குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் வைத்திய சாலையில் இரு தாங்கிகளில் சேமிக்கப்பட்டு தனியாக விநியோக்கிக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு.பொன்னம்பலம்
அவுஸ்திரேலியாவில் உள்ள வல்வை நலன்புரிச்சங்கத்தினரால் அதி நவீன இரத்தப் பரிசோதனை நுண்கருவி ஒன்று (Photo Meter) வழங்கப்பட்டு 20-10-2004 முதல் இரத்தப் பரிசோதனை நடைபெற்று வருகின்றது. வேறு எந்த வைத்தியசாலையிலும் இல்லாத இந்த அதி நவீன இக்கருவி மூலம் நாற்பதுக்கு மேற்பட்ட இரத்தப் பரிசோதனைகள் செய்ய முடியும். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோரும், ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பல்வேறு கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவோரும் இந்த இரத்தப் பரிசோதனை கருவி மூலம் பயன்பெற்றுவருகின்றனர்.
வைத்தியசாலைக்கு மேற்காகவுள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான ஏழு பரப்புக் காணி லண்டனில் உள்ள தி.கருணாகரன் – கெளரிபாய் குடும்பத்தினரால் (சட்டத்தரணி கனகமனோகரனின் தம்பி, அ.மி.த.க பாடசாலை ஒழுங்கை) வைத்தியசாலைக்கு 29-02-2004 இல் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. இந்தப் பெறுமதி மிக்க காணியில் X-கதிர்ப் பகுதிக்கான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
கண் சிகிச்சை முகாம்கள், இலவச கண்ணாடி வழங்கல்கள், க.பொ.த (உ/த), க.பொ.த (சா/த), ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு, இரத்தான முகாம், எனப் பல்வேறு நிகழ்வுகளும் வைத்தியசாலை அபிவிருத்திச் சாபையினரால் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
து.சக்திவேல்
குருதி கொடையளித்து நம்மவர்கள் மனதில் இடம்கொண்ட சாதனையாளர் து.சக்திவேல் பற்றிய சில வார்த்தைகள். இதுவரை 50 தடவைகள் குருதி கொடுத்து சாதனை படைத்த து.சக்திவேல் பற்றி தனியாக ஒரு பழங்கதை (சில புதிய தகவல்களுடன் சேர்த்து வரவிருப்பதால்) மேலதிக விபரம் எதுவும் இங்கு தரப்படவில்லை. ஆனாலும் இவரது சாதனையின் பெரும்பகுதி “இந்திராணி வைத்தியசாலை” யிலேயே நிகழ்ந்தமையை மட்டும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
திருமதி அப்புக்குட்டியாபிள்ளை பெயரிலான சாரங்கம்மா பிரசவவிடுதியை அண்மித்தபடி “தங்கம்மா பிரசவஅறை” புதிதாக கட்டப்பட்டு 2014 இல் திறந்து வைக்கப்பட்டது. லண்டனில் உள்ள நம்மவர்களான நடராஜா துவிதாஸ் – துவிதாஸ் சாந்தி ஆகியோரினால் இந்த நற்பணி நடந்தேறியுள்ளது.
இந்திராணி வைத்தியசாலையின் தற்போதைய தோற்றம்
குடாநாட்டில் யாழ்பாணம், மந்திகை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் அனைத்துமே இப்போது பிரதேச வைத்தியசாலையாக மாற்றம் கண்டுள்ள போதிலும், நமது வைத்தியசாலையை இன்றும் “இந்திராணி வைத்தியசாலை” என்று அழைக்கும் பலரை நாம் தினமும் காண்கின்றோம்.
வல்வையூர் அப்பாண்ணா
“இந்திராணி வைத்தியசாலை” யுடன் சம்பந்தப்பட்ட நம்மவர்களின் பல்வேறு வகையான உதவிகள், கடமைகள், சேவைகள், அன்பளிப்புக்கள், நன்கொடைகள் பற்றிய விபரம் மட்டுமே ஒவ்வொரு பந்தியிலும் சொல்லப்பட்டிருப்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டும்.
“இந்திராணி” யின் நாமம் என்றும் வாழ்க........
வல்வையூர் அப்பாண்ணா
குறிப்பு
இதுவரை இவரின் 11 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.