வாரம் ஒரு பழங்கதை – றோமன் கத்தோலிக்க பாடசாலையும் சைவமும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2015 (திங்கட்கிழமை)
அமைதியான அதிகாலை 5 மணிக்கு “திருந்தாதி” மணிச்சத்தம் (தேவாலய மணியோசை) கேட்டுக் கண்விழித்து, “செபஸ்தியார் அப்பா” என சத்தம் வந்த திசைநோக்கி வணங்கி, படுக்கைவிட்டு எழுந்து தமது நாளாந்த கடமைகளைப் பார்க்கப் புறப்படும் நம்மவர்கள் (சைவர்கள்) பலரை இன்றும் நாம் பார்க்கின்றோம்.
றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் பழைய கட்டிடம்
புனித செபஸ்தியார் தேவாலயத்தைக் கடக்கும் போது ஒரு கணம் தரித்துநின்று, “செபஸ்தியார் அப்பா, போகின்ற காரியம் நல்லபடி நிறைவேற வேண்டும்” என வணங்கிச் செல்லும் பலரை நாம் தினமும் காண்கின்றோம்.
புனித செபஸ்தியார் என்னும் கருணைத் தெய்வம் நம்மூர் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல – சைவர்களுக்கும் காவற்தெய்வம் ஆவார். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வரும் செபஸ்தியார் திருவிழா ஜனவரி 20 இல் நடைபெறும் பெருவிழாவுடன் நிறைவிற்கு வருகின்றது.
ஆரம்ப கால றோமன் கத்தோலிக்கப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்
அந்த நாளைய கத்தோலிக்க துறவியர் கத்தோலிக்க சமய வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை சமய வளர்ச்சியிலும் காண்பித்தனர். இந்த அடிப்படையில் தேவாலயங்களுடன் இணைந்தபடியே கல்விச்சாலைகளும் தோற்றம்பெற்றன.
றோமன் கத்தோலிக்கப் பாடசாலையும் 1889 இல் ஆரம்பமாகிய கல்விச் சாலையாகும். “வரலாற்றில் வல்வெட்டித்துறை” “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” எனும் வல்வையின் வரலாறு கூறும் நூல்கள், பாடசாலையின் தோற்றம் 1889 எனக் கூறிநின்றாலும், தேவாலயத்துடன் நீண்ட காலத் தொடர்புடையவரான திரு.குலநாயகம் அவர்கள் 1872 இல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாக அடித்துக் கூறுகின்றார்.
பாடசாலை அபிவிருத்தி சங்க அந்நாளைய உறுப்பினர்கள்
றோமன் கத்தோலிக்கப் பாடசாலை தேவாலய வளாகத்தைவிட்டு பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள பழைய மருந்தக வளவுக்கு (கடற்கரையை அண்மித்து) இடம்மாறிய 02-12-1989 அன்று ஒரு சிறப்புமலர் வெளியிட்டுள்ளார்கள். அந்த மலரிலும் கூட பாடசாலையின் தோற்றம் 1889 என்றே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஆரம்ப பாடசாலையான றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, கத்தோலிக்கச் சிறார்களுக்கு மட்டுமன்றி, சைவச் சிறார்களின் ஆரம்பக் கல்வி வளர்ச்சியிலும் அதீதமான அக்கறைகொண்டு செயற்பட்டமை அனைவரும் அறிந்ததே.
தேவாலயத்தின் பழைய தோற்றம்
ஊரில் பெரும்பான்மையாகவுள்ள சைவசமையிகளும், குறைந்த விகிதாசாரத்திலுள்ள கத்தோலிக்க மக்களும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து – விட்டுக் கொடுத்து – உதவிக்கரம் நீட்டி சொந்த சகோதரர்களாகவே ஆண்டாண்டு காலமாகப் பழகி வந்துள்ளனர். இன்றும் அந்நிலையே தொடர்கின்றது. இரு பகுதியினரதும் உள்ளன்பான புரிந்துணர்வை வெளிப்படுத்தும் பல உதாரணங்களைக் கூறலாம்.
நமது காலத்திற்கு முன்னர், 1927 இல் பிரபல வர்த்தகராயிருந்த மறைந்த வீரகத்திப்பிள்ளையின் மகன், தாசீசியஸ் அவர்கள் (Ref Fr V.R.Tacisius) கத்தோலிக்க குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, ஊருக்கு வருகைதந்தபோது ஊர்மக்கள் திரண்டுவந்து வரவேற்பளித்தனர்.
இடமாறிய புதிய கட்டிடம்
வல்வெட்டி “ஐயாத்துரை படலை”” யிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், மேளதாள வாதத்தியங்களுடன் தேவாலயம் வந்துசேர நீண்டநேரம் எடுத்ததாகக் கூறுகின்றார்கள்.
மேற்குறித்த வீரகத்திப் பிள்ளையின் புதல்வர்களே தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தை தோற்றுவித்தார்கள் என்பதும் அவரது பெயரிலேயே இன்றும் பாடசாலை இயங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
Fa.இம்மானுவேல் விஜயரத்னம் அடிகளார்
நம் கண் எதிரே நடந்த இன்னுமொரு நிகழ்வினை குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
நம்மூரவரான Fa.இம்மானுவேல் விஜயரத்னம் அடிகளார் அவர்கள் குருவானவராகக் தேவாலயப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வந்தபோது (1954 – ஆவணி – 6 ஆம் திகதி) வரலாறு காணாத பிரமாண்டமான ஊர்வலம் நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலடியில் இருந்து ஆரம்பமாகி தேவாலயம் வரை பாண்ட் வாத்தியம் – மேளதாளம் – வாண வேடிக்கைகளுடன் அழைத்துவரப்பட்டு வரவேற்புக் கூட்டமும் நடைபெற்றது.
அந்த நிகழ்வு வேளையில் எடுக்கப்பட்ட கூட்டுப்படத்தையும் அடிகளாரின் தனிப்படத்தையும் இங்கே காண்கின்றீர்கள்.
கத்தோலிக்க சகோதரர்களின் நல்லெண்ண வெளிப்படுத்தலுக்கான மேலும் சில உதாரணங்கள்.
1) மரணத்தின் பின் பிரேதத்தை தேவாலயங்களுக்கு எடுத்து வந்து, புனிதப்படுத்தும் நடைமுறை இருந்தபோதும், நம்மூரில் எக்காலத்திலும் இந்த நடைமுறை இருந்ததில்லை.
1954 ஆம் ஆண்டு நடைபெற்ற அவரின் வரவேற்பு விழா
2) “இந்திர விழா” போன்ற சைவசமயிகளின் நிகழ்வுகளிலும், ஏனைய பொது நிகழ்வுகளிலும், கத்தோலிக்க இளைஞர்கள் பலரும் தங்கள் உடல் உழைப்பினை வழங்கி, உதவிகள் புரிவதை பல தடவைகள் பார்த்திருக்கின்றோம்.
3) மறைந்த ஞானமூர்த்தி அப்பா நகரசபைத் தலைவராக இருந்த காலத்திலேயே, வல்வைச் சந்தியில் உள்ள நவீன சந்தைக் கட்டடங்கள் திட்டமிடப்பட்டன. இன்றைய நவீன சந்தைக் கட்டடங்கள் உள்ளடங்கிய காணிகளில் தொண்ணூறு வீதமானவை கத்தோலிக்க சமூகத்தினருக்கே உரித்தாக இருந்தமையை பலரும் அறியாதது.
திறப்புவிழாவின் போது
மேலே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளையின் பேரானாலும், மறைந்த செபஸ்தியாம்பிள்ளை குடும்பத்தினராலும், Dr.ஆரோக்கிய நாதர் சகோதர்களாலும் பெரிய மனதோடு வழங்கப்பட்ட காணிகளிலேயே, இன்று நகருக்கு அழகூட்டும் நவீன சந்தைக் கட்டடங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
நவீன சந்தைக் கட்டட முயற்சியில் அயராது உழைத்த மாமனிதர் ஞானமூர்த்தி அப்பாவை நாம் மறக்க முடியுமா?
4) நம்மவர்களின் நாடகங்களை நெறிப்படுத்தி எல்லார் மனதிலும் நீங்கா இடம்பெற்ற செலவ்ராசா மாஸ்டர், தோளோடு தோள் நின்று உழைத்த மர்சலீன்பிள்ளை, ரோமன் கத்தோலிக்கப் பாட்சாலையின் வளர்ச்சிக்காக மிக நீண்ட காலம் ஆசிரியராக – அதிபராக அயராது உழைத்த உத்தமர் பாக்கியநாதர் மாஸ்டர் போன்றவர்கள் என்றும் மனதில் நிற்கும் கத்தோலிக்கப் பெருந்தகைகள் ஆவர். இந்த வரிசையில் இன்னும் பலர் இருந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றார்கள்.
றோமன் கத்தோலிக்க பாடசாலையின் திறமைமிகு கல்விச் சேவையின் காரணமாக ஆண்டுகள் செல்லச் செல்ல இட நெருக்கடிகள் அதிகமாயிற்று. தேவாலயத்தின் கிழக்குப் பக்கமாக, பனை ஓலையால் வேயப்பட்ட 70 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட ஒரு மண்டபத்தில் 180 மாணவர்கள் கல்விகற்று வந்தனர்.
றோமன் கத்தோலிக்கப் பாடசாலை விழாவின் போது
இதனைக் கருத்திற்கொண்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் – பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள பழைய மருந்தக வளவிற்கு பாடசாலையை இடம்மாற்ற முடிவுசெய்து அதற்கான முயற்சியிலும் இறங்கினர்.
உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர் த.இராசலிங்கம், பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம் ஆகியோரின் ஒத்துழைப்பும், ரேவடி இளைஞர்களின் அயராத சிரமதானப் பணி ஆகிய அனைத்தும் ஒன்றிணைய, ஆறு மாதங்களில் கடற்கரையை அண்மித்த பழைய மருந்தக வளவினுள் 02-12- 1979 இல் புதிய பாடசாலையின் திறப்புவிழா நடந்தேறியது.
1954 ஆம் ஆண்டு நடைபெற்ற அவரின் வரவேற்பு விழா
பாடசாலையின் இடமாற்றவேளையில் எதிர்பாராத பிரச்சனை ஒன்று எழுந்தது. றோமன் கத்தோலிக்க பாடசாலையின் பெயரை “காந்தி பாடசாலை” என்றோ “சரஸ்வதி பாடசாலை” என்றோ மாற்ற வேண்டுமென நம்மவர்களில் (சைவர்கள்) சிலர் பெருமுயற்சி எடுத்தனர். அதற்கான கலந்துரையாடலின் போது கத்தோலிக்க மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்ததுடன், நம்மவர்கள் (சைவர்கள்) காட்டிய வலுவான எதிர்ப்பின் காரணமாக இறுதியில் அந்த ஆலோசனை கைவிடப்பட்டது.
“றோமன் கத்தோலிக்க பாடசாலையின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் பெரும்பான்மை சமயத்தினாராகிய (சைவர்கள்) எமக்குண்டு” என்னும் வாதம் ஓங்கி ஒலித்தமையினாலேயே, நம்வர்களினால் முன் மொழியப்பட்ட ஆலோசனை நம்மவர்களினாலேயே நிராகரிக்கப்பட்டு இன்றுவரை "றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை" எனும் பெயரே நீடித்து நிலைத்து நிற்கும் பெயர் ஆயிற்று.
றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் தற்போதைய தோற்றம்
1964 இல் றோமன் கத்தோலிக்க பாடசாலை அரசாங்கப் பாடசாலையாக மாற்றம்பெற முன்னர், தேவாலய வளாகத்தினுள் தேவாலய நிர்வாகக் கட்டுப்பாட்டினுள் பாடசாலை இருந்த அந்நாளிலேயே “சைவசமயம்” ஒரு பாடமாக சிறப்புற போதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
திக்கம் அருளானதம் மாஸ்டர், மதவடி வெங்கடாசலம்பிள்ளை ஆசிரியரின் பாரியார் சகுந்தலா ரீச்சர் ஆகியோர் சைவசமயம் கற்பித்து வந்தனர். கொழும்பு விவேகானந்தா சமயப்பரீட்சை, யாழ் சைவபரிபாலணசபைப் பரீட்சை ஆகியவற்றில் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மாணவர்கள் மிகச்சிறப்பான பெறுபேற்றினை பெற்றனர்.
தேவாலயத்தின் இன்றைய தோற்றம்
தேவாரப் பாடல்கள் வகுப்பறைகளில் ஓங்கி ஒலித்தன. வகுப்பறைகளில் சரஸ்வதி படம் நிரந்தரமாயிற்று. சரஸ்வதி பூசை வருடந்தோறும் கொண்டாடப்பட்டது. விஜயதசமியன்று ஏடு தொடக்கும் வைபவம் ஒரு முக்கிய நிகழ்வாயிற்று. இந்த நிலையில் 1967 இல் திரு.சிவகுகதாசன் மாஸ்டர் (வித்தனை ஒழுங்கை) மாற்றம் பெற்றுவர சமயபாடம் கற்பிப்பதில் ஒரு புதிய வேகம் பிறந்தது. கத்தோலிக்க குருமாரினதும் கத்தோலிக்க பெருமக்களினதும் நல்லாசியுடன் சைவசமய பாடம் சிறப்புற கற்பிக்கப்பட்டமையை நாம் என்றும் பெருமனதோடு போற்றிப் புகழவேண்டும்.
வன்செயலின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சேதமாக்கப்பட்ட புனித செபஸ்தியார் தேவாலயத்தை புதுப்பிக்கும் வேலைகள் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு, இன்று தேவாலயம் புதுப்பொலிவுற்றுத் திகழ்வதை நேரில் பார்க்கின்றீர்கள். இந்த கைங்காரியத்திற்கு புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்கள் (சைவர்கள்) சிலர் மனவுமந்து அளித்த நிதி உதவிகளை நம்மூர் கத்தோலிக்க சமூகமும் – தேவாலய நிர்வாகமும் நன்றியோடு நினைவிற் கொண்டுள்ளனர்.
புனித செபஸ்தியார் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக!
(Phots courtesy - Y.Parthipan)
குறிப்பு
இதுவரை இவரின் 9 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.