சுன்னாகம் பகுதிகளில் எண்ணெய்க்கசிவு: நொதெர்ன் பவர் நிறுவனத்தை மூட உத்தரவு!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2015 (வியாழக்கிழமை)
யாழ் சுன்னாகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு காரணமாக இருந்ததாக கூறப்படும் நொதெர்ன் பவர் நிறுவனத்தை [Chunaakam Northern Power Company (Private) Limited] உடனடியாக மூட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை கொழும்பில் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த முடிவு அறிவிக்கபட்டதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நோர்தேன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய், பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளாக மல்லாகம், தெல்லிப்பழை, புன்னாலைக்கட்டுவன் அளவெட்டி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள 800க்கும் மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டன.
மேற்படி விடயம் தொடர்பாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நடந்துவரும் அதேவேளை, பல்வேறு கண்டன போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் வடக்கு மாகாண சபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, எண்ணெய் கசிவு தொடர்பான ஆய்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலையிலேயே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க உடனான சந்திப்பின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம் எண்ணெய்க்கசிவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் பற்றி கூறியதுடன் பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் குறித்த நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிட்டதுடன், இதனால் யாழ்ப்பாணத்துக்கான மின்சார விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.