மன்னாரில் உள்ள கணேசபுரம் ஆரம்பப்பாடசாலை கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் ஆதரவுடன் புத்தாண்டு தினத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வெற்றிகரமாக புத்தாண்டில்
கால்பதித்துள்ளார்கள் மாணவர்கள்.
சென்ற ஆண்டு ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் தாயகத்தில் மேற்கொண்ட உதவித் திட்டங்களைப் போல இந்த ஆண்டிலும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது.
மன்னார் கணேசபுரம் ஆரம்பப் பாடசாலை சுமார் ஐந்து ஏக்கர் காணி கொண்ட காட்டுப்பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது, வெறுமனே மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே போதியதல்ல என்று அந்தப் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
சுற்றவர உள்ள காட்டை சுத்தம் செய்து மைதானமாக்கி, கம்பி வேலிகள் போட்டு மறு சீரமைப்பு செய்தல், பிள்ளைகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைகள் போன்ற பல விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்றும் அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இப்பகுதி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கும் பகுதியாகவும் முன்னாள் போராளிகள் செறிந்து வாழும் இடமாகவும் இருப்பதாக உதவிகள் வழங்கப்பட்டபோதே ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் தாயக நிர்வாகி சுட்டிக்காட்டினார்.
அப்பகுதியில் போர் எல்லாவற்றையும் அழித்து மக்கள் வாழ்வை எதுவுமற்ற வறுமைக் குழிக்குள் தள்ளிவிட்டு போயுள்ளது, எஞ்சியுள்ள சிறார்களை சிறந்த எதிர்கால தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டிய சவாலையும் முன்வைத்து போயுள்ளது.
அடிப்படை வசதிகளற்ற சிறார்களை மீட்டெடுக்கும் உதவிகள் அங்கு போதியதாக இல்லை , பல உதவிப் பணிகள் இடை நடுவில் நின்று போயுள்ளன, ஆகவே அவற்றை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலும் இன்றய நிலையில் சிறார்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது தலையாய கடமையாகவும் இருக்கிறது என்ற நோக்கில் இப்பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரொரன்ரோ புளுஸ் நிறுவனம் மன்னார் பகுதியில் குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல், சிறு தொழில்களை ஊக்கப்படுத்தல் என்று பல்வேறு பணிகளையும் நிறைவேற்றியுள்ளது.
அந்தவகையில் பாலர் பாடசாலை உருவாக்கத்தில் தனது கரங்களை உறுதியாக பதித்து புலர்ந்திருக்கும் புத்தாண்டை வீரியமாக தொடங்கி வைத்துள்ளது, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும் என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்ற சிறப்பு வாசகத்துடன் மன்னார் கணேசபுரம் ஆரம்பப் பாடசாலை தனது காலடியை நம்பிக்கையுடன் பதித்துள்ளது.
தாயகத்தில் நின்று போரின் அழிவுகளில் இருந்து மக்களை மீட்கும் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனின் பணியை அப்பகுதி மக்களும் பெற்றோரும் மனமகிழ்ந்து பாராட்டி தமது நன்றிகளையும் தெரிவித்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 05, 2018 at 06:25
சிறந்த செயல்பாடு வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.