அதிரூபசிங்கம் மாஸ்ரர் - நான்கு தலைமுறை மனிதர்களிடம் ஒரே மாதிரியான தோழமையை கைக்கொண்டவர் - ச.ச.முத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2017 (வெள்ளிக்கிழமை)
காலநீட்சியும் முதுமையும் பலரை எங்களிடம் இருந்து பறித்து சென்றபடியே இருக்கிறது அவர்கள் ஒவ்வொருவர் இந்த உலகை விட்டு போகும்போதும் ஒரு வரலாற்றை நாம் இழந்துவிடுகின்றோம்.
இந்த முறை அதிரூபசிங்கம் மாஸ்ரர் வல்வையின் விளையாட்டுத்துறை, ஆன்மீகம், திருத்தலவரலாறுகள், நாடகவளர்ச்சி, தமிழ்தேசிய எழுச்சி, எதை எடுத்தாலும் அதில் முழுமையான தகவல்களுடன் ஒரு சாட்சியமாக இருந்தவரை இழந்திருக்கிறோம்.
இந்த மரணம் தந்த கவலையை விட அந்த மனிதனை எவ்வளவு தூரம் நாம் பதிவு செய்து இருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியே எழுகிறது அதிலும் நவீன தொழில்வளர்ச்சியும் இலத்திரனியல் தொழில்நுட்பமும் வான் தொட வளர்ந்து எழுந்து நிற்கும் இந்த பொழுதில் அவரை கதைக்க சொல்லி கலை ஆன்மீகம் விளையாட்டுகழகங்கள் சனசமூகசேவாநிலையம் கல்விமன்றம் தமிழ்தேசிய எழுச்சி என்று அனைத்தை பற்றிய ஒரு எழுபதுஆண்டுகால பார்வையை பதிவு செய்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டோம். என்னதான் முயன்றாலும் திரும்ப தொடர்பு கொள்ள முடியாத பெரும் பிரபஞ்சத்தின் மையத்துள் அவர் ஐக்கியமாகிவிட்டார்.
வல்வையின் எந்த பொதுநிகழ்வுகளிலும் அவரது அறிவிப்புகுரல் அந்த நிகழ்வை இன்னும்வீரியமிக்கதாக ஆக்கி அவையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவல்லது அதற்கு முக்கிய காரணமே அந்த குரலில்' தெறித்தோடியபடி வெளிவரும் ஒருவித தோழமை குரல்தான்.
அதிரூபசிங்கம் மாஸ்ரரிடம் நிறைந்து தளும்பிய ஆளுமைகளில் மிக முக்கியமானதே அவரது அந்த தோழமை மனோபாவம்தான்.அவர் ஒரு நான்கு தலைமுறை மனிதர்களிடம் ஒரே மாதிரியான தோழமையை கைக்கொண்ட ஒருவராக விளங்கியவர்.
வல்வை சனசமூகசேவாநிலையத்தின் தலைமை பொறுப்புகளில் எனது தந்தையுடன் செயற்பட்ட அவர் அதற்கு பிறகு பல வருடம் கழித்து அதே சனசமூகசேவாநிலையத்தின் பொறுப்புகளில் என்னுடனும் அதே செயலூக்கத்துடனும் நிர்வாக தோழமையுடனும் அவரால் செயற்பட முடிந்திருந்தது. அதன் பிறகு எனக்கு பின்வந்த ஒரு தலைமுறையுடனும் ஊர் கழக விடயங்களில் அவர் அதே முறையில் பணி புரிய முடிந்தது பெரீய ஆச்சர்யமே எந்த வரையறைக்குள் அவரை வைத்து அவரது இல்லாமைiயை சொல்ல முடியும் என்று புரியவில்லை ஏன் என்றால் எல்லாவிதமான செயற்பாடுகளுக்குள்ளும் அவர் நின்றிருக்கிறார். அதில் முழுமையான ஈடுபாட்டை வெளிக்காட்டி இருக்கிறார்.
வல்வை சனசமூகசேவா நிலையத்தில் அவர் புதிய புத்தகங்களை வாங்குவதற்காக எது எது நல்லவை என்று தெரிவு செய்யும் ஒரு பொழுதில் அவருடன் நின்றிருக்கிறேன்.வெறுமனே வர்ணணைகள் நிறைந்த நாவல்களைவிட சமூகத்துக்கு சேதி சொல்லக்கூடிய புத்தகங்களை அவர் தெரிவு செய்வதில் பிடிவாதமாக நின்றவர்.
ஒரு 50, 70 பக்கங்களில் அந்த நேரத்தில் இந்தியவிடுதலைப்போராட்ட வீரர்களான லாலாலஜபதிராய், பகத்சிங், ஆசாத், நேதாஜி,அரவிந்தகோஸ், வாஞ்சிநாதன் பாரதி ஆகியோரின் புத்தகங்கள் அவரது தெரிவில் வாங்கப்படடவை.
அந்த புத்தகங்கள் அவரது கனவை போலவே சனசமூகசேவா நிலைய எல்லை கடந்தும் பல இடங்களுக்கு பயணப்பட்டு இந்த நூற்றாண்டின் எமது இனத்தின் மிகச்சிறந்த வீரர்களாக நிர்வாகிகளாக தலைமைகளாக தளபதிகளாக விளங்கிய பலரின் கரங்களில் 80களில் தவழ்ந்து அது சொல்ல வேண்டிய சேதியை சொல்லி நின்றதை நேரில் பார்த்தேன்.அந்த மனிதர்களில் பலரும் அவர்மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்ததார்கள்.
அந்த மனிதர்களில் பலரும் அவருடன் ஒரு ஆழ்ந்த தோழமையை ஒருவிதமான பிணைப்பை கொண்டிருந்தார்கள்.
சத்தியநாதன் சங்கரை மாஸ்ரர் எங்கே கண்டாலும் வீரா என்றே அழைப்பார். சங்கரின் அந்த இறுக்கமான உடல் அமைப்பும் வேகமும் அவருக்கு ஏனோ அவனுக்கு அந்த பெரையே சொல்லி அழைப்பார்.
அதனை போலவே பாடசாலைநாட்களில் பண்டிதரை (ரவீந்திரன்) நாம் அழைத்த தாகூர் என்ற பெயரையே அவரும் அழைப்பார். (ரவீந்திரன்) அதனை போலவே கிட்டுவை அச்சகம் என்றே அழைப்பார் ஊரைவிட வெளியில் அவரை கண்டபோதெல்லாம் அவர்கள் இவருடன் நிறையவே கதைத்தார்கள். தமிழ்தேசிய எழுச்சியில் இந்த பொடியள் விண்ணை எட்டித்தொட முயலுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருந்தது அவர்களுக்கும் அவருக்குமான தொடர்புகள் மிக நீண்டது.
பலருடன் அதிரூபசிங்கம் மாஸ்ரரும் இணைந்து நடாத்திய அலைஒளி பல படைப்பாளிகளை உருவாக்கியதில் பெருமை கொள்ளலாம்.இந்த அலைஒளியின் வருகைக்கு பின்பாக வல்வையில் எழுந்த கையெழுத்து சஞ்சிகை எழுச்சி என்பது நிச்சயமாக அதிரூபசிங்கம் மாஸ்ரருக்கு பெருமை சேர்க்கும் ஒரு பெரும்விடயமாகும்.
எப்போதுமே தூவப்படும் சிறு விதையானது எழுந்து பெரு விருட்சமாகும்போது பறவைகளுக்கு தெரியாது இந்த விருட்சத்துக்கான விதையின் முதல் தூவல் எது என.... ஆனால் அலைஒளியின் பாதிப்பால் எமது இளம்பறைவைகள் கழகம் சந்தி வாசிகசாலையில் ஆரம்பித்த பறவை கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியர்குழுவில் ஒருவரான கிட்டு அதன் பின்னர் தமிழகத்தின் பிரபல தேவி வாரஇதழில் போராட்ட வரலாறு எழுதும் பொழுதுகளில் இந்த அனுபவம் தனக்கு உதவியதாக நண்பர்களான எம்மிடம் கூறி இருக்கிறார்.
இவை எல்லாவற்றையும்விட அதிரூபசிங்கம் மாஸ்ரர் ஒரு சமூகம் கலிவி பெறவேண்டிய அவசியத்தை உணர்ந்து அந்த தளத்திலும் ஆர்வமுடன் செயற்பட்ட ஒருவராகவே விளங்கினார்.
அவரிடம் கற்ற ஒரு வரிசை என்பது பலதரப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய ஒன்று.அந்த மாணவர்கள் வரிசை என்பது என்றுமே அவரது பெயரை நினைபடுத்தி கொண்டே இருக்கும்.
இத்தனை விடயங்களிலும் ஒருவர் தன் தடம் பதித்திட முடியுமா என்ற வியப்பு எழுகிறது அதற்கு பின்னால் இருந்த அவரது சமூகம்பற்றிய இனம் பற்றிய கரிசனை என்றென்றும் நன்றியுடன் எம்மால் நினைத்து பார்க்கத்தக்கது இனியும் அந்த மண்ணில் ஒலிக்கும் ஏதோ ஒரு கழக விளையாட்டு போட்டி அறிவிப்பு குரலிலோ அரங்காற்றுகை நிகழ்வு ஒன்றின்போதோ ஆலயபண்ணிசையிலோ கல்விகற்பித்தலிலோ படைப்பாளி ஒருவனின் எழுத்திலோ அவரை என்றும் பார்க்கலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.