யாழில் கோயில்களில் மிருக பலியிடலுக்கு முற்றாகத் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2017 (புதன்கிழமை)
இந்து ஆலயங்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத் தடை உத்தரவினை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக குற்றமிழைத்தவரை கைது செய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் என வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்து ஆலயங்களில் மிருகபலியிடல் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கு பிரதேச சபைகள் உள்ளுராட்சி சபைகள் அனுமதி வழங்குவதாகவும், அது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதிருப்பதாகவும், இத்தகைய மிருகங்களை வதை செய்து, மிருகபலி செய்வது தொடர்பாக தடையிட்டு எழுத்தானை வழங்கக்கோரி அகில இலங்கை சைவ மகாசபை வழக்கொன்றை சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தது.
மேற்படி வழக்கு தொடர்பாக இறுதி தீர்பை வழங்குவதற்காக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்படி தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கீழே படங்களில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா அன்று பிற்பகல் இடம்பெறும் காத்தவராஜன் படையல் நிகழ்வின் போது கொண்டுவரப்பட்ட சில மிருகங்களையும் அவை ஏலம் விடப்படுவதனையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.