தமிழகத் திருக்கோயில் வரிசை வள்ளிமலை - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2016 (வெள்ளிக்கிழமை)
வள்ளல் முருகன்
“பொன்னன் மனைவி பொன்னி ” , போல, “ வள்ளல் மனைவி வள்ளி ” என வாரியார் சுவாமிகள் முருகனைக் குறிப்பிடுவார்கள். இச்சா சக்தியாக விளங்கும் வள்ளிபிராட்டியும், கிரியா சக்தியாக விளங்கும் அன்னை தெய்வானையும், ஞானசக்தியாக விளங்கும் முருகப் பெருமானும் விரும்பி வீற்றிருக்கும் மலை வள்ளிமலை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படும் ஐவகை நிலங்களுள் முதல்வகை நிலம் குறிஞ்சியாகும். அழகிய மலை, மலைசார்ந்த காடு, நீரோடை – நீர்ச்சுனை – அருவி – நதி என அழகிய நிலவளம் கொண்ட இப்பகுதியிலேயே வள்ளிமலை அமைந்துள்ளது.
ஸ்ரீ வள்ளிபிராட்டி பிறந்து, வளர்ந்து, தினைப்புனம் காத்து, கந்தவேளுடன் திருவிளையாடல் புரிந்து, திருக்கரம்பற்றி திருமணம் நிகழ்ந்த வரலாறு கந்தபுராணம் – வள்ளி திருமணத்தில் சொல்லப்படுகிறது. கிடைத்தற்கரிய நோய் தீர்க்கும் மூலிகைகள் படர்ந்து பரவியிருக்கின்ற இடம் வள்ளிமலை. சித்தர்கள், ஞானிகள், துறவிகள் எனப் பலரும் அந்நாளில் மட்டுமல்ல – இந்நாளிலும் வாழும் மலை இது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தே வள்ளிமலையை “ ஞானபூமி ” என வாரியார் சுவாமிகள் வர்ணித்துள்ளார்.
வள்ளியைக் கைப்பிடித்த வள்ளல் முருகன் விரும்பி வீற்றிருக்கும் திருத்தலமாகிய இந்த வள்ளிமலையை அருணகிரிநாதர், கச்சியப்பசிவாச்சாரியார், வள்ளல் இராமலிங்க அடிகளார், வள்ளிமலை சுவாமிகள், வாரியார் சுவாமிகள் உட்பட இன்னும் பல சான்றோர் பெருமக்கள் வணங்கியும் – வாழ்த்தியும் – பாட்டிசைத்தும் முருகன் அருள் பெற்றார்கள். இந்தப் புனிதர்களின் காலடி பட்டுத் தோய்ந்து மேலும் வளமடைந்தது இந்தக் குறிஞ்சி நிலம். இத்தகைய அதி அற்புதமான முருகன் தலத்தினைத் தரிசிக்கக் கிடைத்தமை வாழ்நாளில் எமக்குக் கிடைத்த பெரும்பேறாகவே கருதுகிறோம்.
அமைவிடமும் தேரடித் தெருவும்:
“ வில்வநாதீஸ்வரா் ” கோயில் கொண்டுள்ள “ திருவலம் ” எனும் பழம்பதிக்கு வடக்கே 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வள்ளிமலை. காட்படி புகைவண்டி சந்திப்பிலிருந்து வடகிழக்காக 19 கி.மீ தூரத்தில் உள்ளது இம் மலை. வேலூர், ஆற்காடு, இராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி முதலான நகரங்களின் மையத்தில் உள்ள வள்ளிமலை திருக்கோயிலுக்கு எல்லாப் பெருநகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. இதைவிட வேலூரிலிருந்து திருவல்லம் ஊடாக அடிக்கடி பேருந்துகள் போய்வருகின்றன.
பிரதான வீதியிலிருந்து இடதுபுறம் பிரியும் நேர்த்தியான தார்சாலையில் பெரிய வளைபு ஒன்று காணப்படுகிறது. இதன் ஒரு தேர்க்கொட்டகை. அதனை ஒட்டியபடி “ தேரடி விநாயகர் ” எனப்படுகின்ற “ வரசித்தி விநாயகர் ” சிறிய சந்தியில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். சந்திக்கு முன்பாக நான்கு தூண்களுடனான மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. வளைவிலிருந்து எதிரே 100 மீற்றர் தூரத்தில் தெரியும் கோபுரவாசல் வரை உள்ள வீதியினை “ சந்நிதித் தெரு ” என்கிறார்கள்.
இந்த வீதி தேரடியிலிருந்து ஆரம்பமாவதால் “ தேரடித் தெரு ” என்றும் பலர் குறிப்பிடுகின்றார்கள். இந்த வீதியின் இரு புறமும் திருமண மண்டபங்கள், தர்மசாலைகள், அறநெறிப் பாடசாலை ஆகியன காணப்படுகின்றன. இராஜகோபுரம் முன்பாக மிகப்பெரிய நிழற்கூடம் உள்ளது. ஆயிரம் பேர்வரை அமரக்கூடிய இந்த நிழற்கூடத்தின் தாழ்வார ஓரங்களின் இரு பக்கமும் வள்ளியுடனான முருகன் திருவிளையாடல்கள் அனைத்தும் வரிசையாக அழகிய வர்ணத்தில் வரையப்பட்டுள்ளது. நிழற்கூடத்தின் இடதுபுறம் சொற்பொழிவுகள் –கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடியதாக பெரிய மேடையும், வலதுபுறம் நிர்வாக அலுவலகமும், அருகே சேமிப்பறையும் காணப்படுகிறது. கோபுர வாசலருகே ஒரு புறம் விநாயகரும் மறுபுறம் முருகனும் உள்ளனா்.
கீழ்க்கோவில்:
ஐந்து நிலையுள்ள இராஜகோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் மதிற்சுவரோடு கூடிய விசாலமான – திறந்தபடியான முதற் பிரகாரத்திற்கு வருகிறோம். ஈசான மூலையில் கிணறு. அருகே நவக்கிரக கோவில். அக்கினி மூலையில் மடைப்பள்ளியும் களஞ்சிய அறையும். பிரகாரத்தின் மையத்தில் கருவறை கருவறையில் அழகிய முகங்கள் ஆறும், கடம்பமாலையணிந்த பன்னிரு தோள்களும், தாமரை போன்ற அழகிய திருவடிகளும், கூர்கொண்ட வேலும், சேவற்கொடியும் – மயில்வாகனமும் கொண்டு அருள்பாலிக்கின்ற ஆறுமுகப்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.
இந்தக் கருவறையை ஒட்டியபடி இருப்பது ஒடுங்கிய இரண்டாம் பகுதியான நடு மண்டபம். இங்கே வலப்பக்கம் விநாயகரும் இடது பக்கம் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனா். இதனோடு இணைந்தபடி இடது புறத்தில் உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ளது “ மயில் மண்டபம் ” எனப்படுகின்ற மகாமண்டபம். பக்தர்கள் தரிசனம் முடிந்து இளைப்பாறிச் செல்லும் இடமாக உள்ள வெளிமண்டபமானது எட்டுக் கற்தூண்களுடன் காணப்படுகிறது. இந்த மண்டபத் தூண்களும், கருவறைப் பகுதியும் ஆண்டுதோறும் பூசப்படும் சுண்ணாம்புப் படிமங்கள் படைபடையாகப் படிந்துள்ளமையால் அவற்றின் துல்லிய வேலைப்பாடுகள் எதனையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. கருவறைப் பிரகாரத்தின் பின்புற கதவைத் திறந்துகொண்டு மேலேறிச் சென்றால் “ சரவணப்பொய்கை ” திருக்குளம் வருகிறது. சரவணப் பொய்கைக்குக் கீழே கோயில் அமைந்துள்ளமையால் இதனைக் “ கீழ்க் கோயில் ” என்கின்றனா்.
அருணகிரிநாதர்:
14ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர் “ முத்தைத்தரு பக்தித் திருநகை ” என இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, இறைவன் அருளால் பதினாறாயிரம் பாடல்கள் பாடினார் அவர். எனினும் 1324 பாடல்கள் மட்டுமே இன்று எமக்குக் கிடைத்துள்ளன. சந்தம் மிகுதியாக இசை இன்பத்தைக் கொடுக்க வல்லது அருணகிரியாரின் திருப்புகழ். அவர் அருளிய “ கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல் பொரி ” எனும் திருப்புகழ்ப் பாடலை இசைக்காமல் வாரியார் சுவாமிகள் எந்தச் சொற்பொழிவினையும் ஆரம்பிப்பதில்லை.
அருணகிரிநாதரின் “ வள்ளிமலைத் திருப்புகழ் ” பதினொரு பாடல்கள் கொண்டது. பதினொரு திருப்புகழுக்கும் வாரியார் வழங்கியுள்ள பொழிப்புரை, தெளிவுரை, விரிவுரை என்பன அற்புதமானவை. வரிக்கு வரி வாரியாரின் விளக்கங்கள் அந்நாளில் வள்ளிமலை மீது நடந்த “ காதற் காவியத்தை” க் கண்முன்னே கொண்டு வருகிறது. இதனைத் தெளிவுபட வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருமுறையாவது வள்ளிமலை சென்று முருகனைத் தரிசிக்க எண்ணல் தோன்றும் “ அல்லி விழியாலும் முல்லை நகையாலும் ” எனத் தொடங்கும் வள்ளமி மலைத் திருப்புகழின் முதற்பாடல் “ வள்ளிபடர் சாரல் வள்ளி மலைமேலு வள்ளி மணவாளப் பெருமாளே ” என அற்புதமாக முடியும் அழகினைப் பாருங்கள். அழகான சொல்லாடலுடன் நிறைவு பெறும் வள்ளிமலைத் திருப்புகழின் ஈற்றடிகள் சில.
“ வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடைகொண்ட பெருமாளே ”
“ வனசரா் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே ”
“ வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா ”
“ வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும் பெருமாளே ”
கச்சியப்ப சிவாச்சாரியார்:
பதினாறாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து மறைந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவநெறியாளர். முருக பக்தர். “ திகட சக்கர செம்முகமைந்துளான் ” என இறைவன் அடியெடுத்துக் கொடுக்க , “ கந்தபுராணம் ” எனும் அரும் பொக்கிசத்தை இயற்றியவர். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவகாண்டம் , தட்சகாண்டம் என ஆறு காண்டங்களை உள்ளடக்கிய 10,345 அரிய பாடல்களைக் கொண்டது கந்தபுராணம். வளம்மிக்க வள்ளிமலையின் வனப்பு, சிறப்பு, தொன்மை, அழகு, பெருமை கூறுவதுடன் வள்ளிநாயகியின் பிறப்பு, வளர்ப்பு, தினைப்புனம் காத்தல், வள்ளி திருமணம் ஆகியவற்றினை நயம்பட எடுத்துக் கூறுவது கந்தபுராணம்.
அயன் படைத்திடும் அண்டத்துக் காவியமாய்ப்
பயன் படைத்த பழம்பதி என்பரால்
நயன் படைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
வியன் படைத்த விளங்கு மேல்பாடியே.
-கந்தபுராணம்
கந்தபுராண நூலாசிரியர் வள்ளிமலையைக் குறிப்பிடும்போது தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய மேல்பாடியைக் குறிப்பிட்டு , அடுத்துள்ள பழம்பதி வள்ளிமலை எனக் குறித்துக் காட்டுகின்றார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் வள்ளிமலை வந்திருந்து வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானைத் தொழுது வணங்கிப் பாடியுள்ளமை இந்தப் பழம்பதிக்குப் பெருமை சேர்க்கிறது.
வள்ளிமலைச் சாமியார்:
வள்ளிமலையில் 35 வருடகாலம் தங்கித் தவம்புரிந்து, ஒரு ஆச்சிரமம் அமைத்து, அதற்குத் “ திருப்புகழ் ஆச்சிரமம் ” எனப் பெயரும் சூட்டி , அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடத்தக்க பல சிஷ்யர்களையும் உருவாக்கியவர் சச்சிதானந்த சுவாமிகள். அந்தத் திருப்புகழ் ஆச்சிரமம் இன்று நித்திய அன்னப்பணியாற்றும் அறநிலையமாக மாறியுள்ளது.
மலையடிவாரம் ஆறுமுகர் சந்நிதியிலிருந்து சமணர் குகை வழியாக (இது சீரான படிக்கட்டுப் பாதையல்ல. தனிப்பாதை. சமணர் குகை எனப்படுகின்ற ஒரு குகையைக் கடந்து) 1 கி.மீ மலை மீது செல்ல, சிறிய சமவெளியில் தாமரைக்குளம் ஒன்று வருகிறது. தடாகத்தில் அழகிய தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கியுள்ள அழகினை அள்ளிப் பருகியபடி வடக்கு நோக்கிச் சிறிது தூரம் பயணித்தால் ஆச்சிரமத்தை அடையலாம்.
இதே போன்று , மலைமீதுள்ள ஆலயத்திலிருந்து அரை கி.மீ தூரம் தனி வழியில் கீழிறங்கி வந்தாலும் திருப்புகழ் ஆச்சிரமத்தை அடையலாம். தேவி வள்ளியைத் தன் பிரியமான தெய்வமாகக் கொண்டு ஆச்சிரத்தில் திருவுவமைத்து, “ பொங்கியம்மன் ” எனப் பெயரும் சூட்டி ஆதரித்து வந்தார் சச்சிதானந்த சுவாமிகள். திருப்புகழின் புகழ் பரப்புவது ஒன்றே பணியாகக் கொண்டிருந்த சச்சிதானந்த சுவாமிகளை அவரது சிஷ்யர்கள் “ வள்ளிமலைத் திருப்புகழ் சாமியார் ” என்றழைக்க அப்பெயரே பிற்காலத்தில் நிலையானதாயிற்று வள்ளிமலை மீதுள்ள உயரமான சிகரத்திற்கு “ பர்வதராஜன் குன்று ” என்றும், இன்னொரு சிகரத்திற்கு “ யானைக் குன்று ” என்றும் யெர் சூட்டியவரும் இவரே. திருத்தணியில் ஆண்டுதோறும் டிசம்பர் 31, மறுநாள் ஜனவரி 1இல் நடைபெறுகின்ற திருப்படித் திருவிழாவினைத் தொடங்கியவரும் இதே வள்ளிமலைச் சுவாமிகளே. திருத்தணி முருகன் ஸ்தலத்தில் நடைபெறும் திருப்படித் திருவிழா பற்றிய தெளிவான விபரம் “ திருத்தணி ” கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. வள்ளிமலைச் சுவாமிகள் 1950 ல் உலக வாழ்வைத் துறந்து இறைவனடி சேர்ந்தபோது, சுவாமிகள் முதன் முதலில் தங்கியிருந்து குகைக்குள் ஜீவசமாதி செய்யப்பட்டுள்ளது.
வள்ளிமலையில் வாரியார் சுவாமிகள்:
அரசர்கள், பெருஞ் செல்வந்தர்கள், வள்ளல்கள், மட்டுமே கோவிற் திருப்பணிகள் செய்ய இயலும் என்ற கருத்தினை மாற்றி, சாதாரண ஆன்மீக வாதிகளாலும் திருப்பணிக் கைங்கரியங்களை நிறைவேற்ற முடியும் எனும் பாரம்பரியத்தை உருவாக்கியவர் வாரியார் சுவாமிகள். தமது வாழ்நாளில் பல்வேறு இடங்களிலும் கோயிற் திருப்பணிகள், குடமுழுக்கு விழாக்கள், திருக்குளங்கள் – கல்விக்கூடங்கள் - அறக்கட்டளைகள் - குருகுல கல்விச் சாலைகள் எனப் பல்வேறு நற்பணிகளையும் நிறைவேற்றி முடித்த பெருமை வாரியார் சுவாமிகளையே சாரும். வாரியாரின் சொந்த ஊர் வள்ளிமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள “ காங்கேய நல்லூர் ” ஆகும்.
சுவாமிகள் திருமணம் செய்த .இடம் இன்னமும் கிட்டியதே. இந்தக் காரணங்களால் அடிக்கடி “ வள்ளிமலை ” வந்து போகும் வாய்ப்பைப் பெற்றார் வாரியார். அதனால் வள்ளிமலை முருகன் மீது மாறாத அன்பும் - காதலும் கொண்டிருந்தார் அவர். இதனாலேயே அருணகிரிநாதர் பாடிய “ வள்ளிமலைத் திருப்புகழ் ” 11 பாடலுக்கும் இவரது விரிவுரையும் – விளக்கவுரையும் தனித்துவமாக அமைந்தன.
பொதுவாகவே வள்ளிமலை முருகன் கோவில் வாரியாரது தனிக்கவனத்திலும் கண்காணிப்பிலும் இருந்த போதிலும், மலைக்கோவில் - வள்ளி கோவில் - கீழே ஆறுமுகர் சந்நிதி - மதிற்சுவர் எனப் பணிகள் பலவும் ஒரே வேளையில் மேற்கொள்ளப்பட்டு புதுப்பித்து - வர்ணம் தீட்டி சுவாமிகள் தலைமையில் 20.08.1962 இல் குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியுள்ளது. இதைவிட 1978 இல் சரவணப் பொய்கை திருக்குளத்தினை திருத்தியமைத்தும், தேர் திருத்தப்பட்டுத் திருத்தேர் ஓட்டம் நடைபெற்றமையையும் குறிப்பிடலாம்.
பிரதி வருடாவருடம் பங்குனி மாதம் கடைசி நாளன்று அதிகாலையில் நடைபெறும் பஜனையில் தாமும் கலந்து கொண்டு 6 கி.மீ தூரம் நடந்தே பஜனை செய்து வந்த வாரியார் சுவாமிகளின் “ திருப்படி விழா ” நிகழ்வினை மறக்க முடியாத நிகழ்ச்சி என ஒரு பெரியவர் பெருமைபடக் கூறியதைக் கேட்க முடிந்தது.
சரவணப் பொய்கை:
ஆறுமுகர் கோவிலின் (கீழ்க் கோயில்) பின்புறம் மலைகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ள இடத்தில் மலையடிவாரத்தில் “ சரவணப் பொய்கை ” திருக்குளம் அமைந்துள்ளது. இக் குளத்திற்கு இரண்டு வழிகளில் செல்லலாம். கருவறைக்குப் பின்புறம் உள் வீதியின் நடுவேயுள்ள சிறிய கதவினைத் திறந்து கொண்டும் செல்லலாம். அல்லது வாயிற் கோபுரம் நிழற்கூடப் பகுதியினை வலமாகச் சுற்றிச் சென்றாலும் குளத்தினை அடையலாம்.
சுருங்கக் கூறின், கீழ்க்கோவிலின் பின்புறம் சற்றே உயரத்தில் “ சரவணப்பொய்கை ” உள்ளது. வாரியார் சுவாமிகள் தலைமையிலான திருப்பணிக் குழுவினர் 1978 ஆம் ஆண்டு இத் திருக்குளத்தைப் புதுப்பித்து அழகுபடுத்திய வேளையில் குளத்தின் மையப் பகுதியில் “ நீராழி மண்டபம் ” எனும் நான்கு கால் கல் மண்டபத்தை அமைத்துப் புதுப்பொலிவு செய்தார்கள். சதுரவடிவான மிகப்பரந்த அளவுகொண்ட சரவணப்பொய்கையின் படிக்கட்டு வரிசைகள் மிக நேர்த்தியானவை - அழகானவை இல்லற வாழ்வைத் துறந்து துறவு வாழ்வுக்கு வந்துவிட்ட பல சாதுக்களை சரவணப் பொய்கையின் படிக்கட்டுகளில் அநேக இடங்களில் இன்றும் காணமுடிந்தது.
இத் திருக்குளத்தின் திருப்பணியினையும், மற்றும் பல்வேறு பணிகளையும் தலைமை ஏற்றுச் செய்துமுடித்த தவத்திரு வாரியார் சுவாமிகளுக்கும், அவருக்குத் துணைநின்ற ஏ.எஸ்.அருணாசலம்பிள்ளை அவர்களுக்கும் குளக்கரையில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் திருக்குளத்திலேதான் ஆடிமாத கிருத்திகையின் போது மூன்று நாட்கள் முருகப்பெருமானுக்குத் தெப்பத் திருவிழா – ஊரின் பெருவிழாவாக நடைபெற்றுவருகிறது.
குளக்கரை வள்ளியம்மை:
சரவணப் பொய்கையின் மேற்குக் கரையில் பழைய ஒரு கல் மண்டபம் குளத்தில் நீராடிய மகளிர் ஆடை மாற்றும் ஒரு இடமாக இருந்திருக்கிறது. 1962 இல் கீழ்க்கோவிலில் இராஜகோபுரம் கட்டிக் குடமுழுக்கு செய்த காலத்தில் இக் குளக்கரை கல் மண்டபத்தையும் புதுப்பித்து, மண்டபத்துடன் இணைந்தபடியுள்ள சிறிய கருவறையில் வள்ளியம்மையை பிரதிஷ்டை செய்து வள்ளிக்கோவிலை நிறுவி ஒழுங்கான பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. 2007ஆம் ஆண்டில் வள்ளிக்கோவில் முன்பாக பெரிய நிழற்கூடம் அமைத்துள்ளார்கள்.
வள்ளியம்மை கோவிலை அடுத்திருப்பது திருப்படி விநாயகர் கோவிலாகும். நாலுகால் மண்டபத்தின் சந்நிதியில் உள்ள திருப்படி விநாயகரை வணங்கிக் கொண்டே மலைக்கோவிலுக்கு பக்தர்கள் படியேறுகின்றனா். மலையேறும் பக்தர்களுக்கு வேலும் – மயிலும் துணை வருவதை உறுதிப்படுத்துவது போல, வேலுக்கு ஒரு நாலுகால் மண்டபமும், மயிலுக்கு ஒரு நாலுகால் மண்டபமும் மலைப்பாதையில் தனித்தனியே உள்ளன.
அருணகிரிநாதர் கோவில்:
விநாயகர் கோவிலை அடுத்திருப்பது திருப்புகழை அருளிச் செய்த அருணகிரிநாதர் கோவிலாகும். வள்ளிமலை முருகன் மீது அருணகிரிநாதர் மொத்தம் 11 திருப்புகழ் பாடியுள்ளார். சரவணப் பொய்கையின் படிக்கட்டுக்களில் அமர்ந்திருக்கும் துறவிகளுக்கு அருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் தினமும் மூன்றுவேளை உணவு வழங்கப்படுகிறது. இதை விட மலையேறிச் செல்லும் பக்தர்கள் சிலரும் கூட இங்கு பசியாறிச் செல்வதைக் காண முடிகிறது.
வள்ளியும் திணைப்புனமும்:
வள்ளிபிராட்டி கவண்வீசிக் கல்லெறிந்து திணைப்புனம் காத்தாள் என்பது கந்தபுராணம் மூலம் நாம் அறிந்ததே திணைப்புனம் காத்த பரண்போன்ற பல அமைப்புக்கள் ஆங்காங்கே வள்ளி மலையினில் காணப்படுகிறது. மலைமீதுள்ள பாறை இடுக்குகளில் குளிர்ந்த சுவைமிக்க நன்னீரச் சுனைகள் பல உள்ளன. சூரியினின் ஒளி சற்றேனும் படாத சுவைமிக்க நீர்ச் சுனையின் நீரையே வள்ளி வேலவனுக்குக் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.
இந்த சுனைகளில் வள்ளி நீராடி மஞ்சள் பூசியமைக்குச் சான்றாக பாறைகளின் சில இடங்களில் “ மஞ்சள் நிறமான பூஞ்சணம் ” படிந்துள்ளன. விபூதி சிந்திச் சிதறியமைக்கு அடையாளமாக “ வெள்ளை நிறப் பூஞ்சணமும் சில இடங்களில் காணப்படுகின்றன. இவையெல்லாம் ஜதீகங்களாக உள்ளனவே தவிர நிகழ்வுகளை நிரூபுவிக்கும் ஆதாரங்களாக இல்லை. முருகன் வள்ளியிடம் நிகழ்த்திய திருவிளையாடல்களில் அண்ணன் விநாயகனை அழைத்ததுவும் ஒன்று. விநாயகர் யானை வடிவில் வந்தமைக்குச் சான்றாக “ யானைக் குன்று ” ஒன்றினை அடையாளம் காட்டுகிறார்கள். இந்த யானைக் குன்றினில் மேலும் பல ஜதீகச் சான்றுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நாம் அந்த இடங்களைச் சென்று பார்க்க சந்தர்ப்பம் கிட்டவில்லை.
மலைக்கோவில் – கருவறை:
குகைக் கோயிலின் முகப்பு வாசலில் உள்ள கருவறைப் பகுதி மூன்று பகுதிகளாகத் தெற்கு நோக்கியபடி உள்ளது. முதற்பகுதியில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். இரண்டாம் பகுதி இளைப்பாறும் மண்டபம். அங்கிருந்து சில படிகள் மேலேறி கருவறைக்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்கிறோம்.
அழகிய அலங்காரத்துடன் கருவறையில் அமர்ந்துள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அனைவருக்கும் அருள் பாலிக்கிறார். மனம் லயித்து கரம்கூப்பி கந்தக் கடவுளை வணங்குகிறோம். முருகனுக்கு நிவேதிக்கப்படும் தேனும் தினைமாவும் வருகைதரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள். மலைக் கோவில் பகல் 7.30 -12.30 வரையும் மாலையில் 2.00 – 6.30 வரையும் திறந்திருக்கும் என்பதை அறிவிப்புப் பலகை அறியத்தருகிறது.
கொடியேற்றமும் விழாக்களும்:
வள்ளிமலை முருகனுக்கு மாசிமகத்தில் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது. மலைமேல் உள்ள முருகனுக்கு கொடியேற்றத்துடன் பெருவிழாத் தொடங்கும் அதே வேளையில் கீழ்க்கோவிலிலும் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாக் கோவில்களிலும் இரதோற்சவம் ஒரு நாள் மட்டுமே நிகழும் உற்சவமாகும். ஆனால் வள்ளிமலை முருகனுக்கு இரதோற்சவம் நான்கு நாட்களுக்கு நிகழ்கிறது. இரதம் 6 கி.மீ தூரமுடைய கிரிவலப் பாதையைச் சுற்றி வருகிறது. 7ஆம் நாள் உற்சவத்தன்று மாலையில் புறப்படும் திருத்தேர் 10ஆம் நாள் மாலையில் இருப்புக்கு வந்து சேர்ந்ததும் பக்தர்கள் அனைவரும் சரவணப் பொய்கையில் தீர்த்தமாடுகிறார்கள்.
இந்த ரதம் பல்லாண்டு காலமாக மலைச்சுற்றின் கருங்கற் பாதைகளில் வலம் வந்தால் அதன் செயற்திறன் குறைந்து வந்தது. இதனை அவதானித்த வாரியார் சுவாமிகளின் பெருமுயற்சியினால் புதிய தேர் நிர்மாணிக்கப்பட்டு இரதோற்சவம் நடைபெற்று வருகின்றது.
வைகாசி விசாகம், கிருத்திகை விழாக்கள், சதுர்த்தி, கந்தசஷ்டி, சித்திரைப் பௌர்ணமி, விஜயதசமி, தீபத் திருவிழா, தமிழ்ப்புத்தாண்டுப் படிவிழா போன்றவை வள்ளிமலை முருகன் திருத்தலத்தின் பிரதான விழாக்களாகும்.
வாசக அன்பர்களே! தமிழகத் கோவில்களைத் தரிசிக்கச் செல்லும் நீங்கள் ஒரு முறை வள்ளிமலை சென்று வள்ளல் முருகனைத் தரிசிக்கத் தவறாதீர்கள். அவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வாரித்தருவான்… நம்புங்கள்..
நன்றி : ஞானச்சுடர் , 2015 தை
அடுத்த வாரம்:
லண்டன் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பிரபலமான முருகன் ஆலயம் இது. நம்மவர்களின் விடுமுறைகால தரிசிப்பு இடங்களில் முதன்மையானது “ வேல்ஸ் முருகன் ஆலயம் ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.