முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த தலை சிறந்த சிவபக்தன். வானுலகில் “ வலன் ” எனும் அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் சிவபெருமானை வழிபட, திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியும் முசுகுந்தனின் உதவியைப் பெற்று நேரில் வெற்றியடைய உதவி புரிந்த முசுகுந்தனுக்கு விரும்பிய பரிசினைக் கொடுக்க மனம் ஒப்பினான். முசுகுந்தனும் சிவபெருமான் மீது கொண்ட பற்றினால் “ நீ வழிபடும் தியாகேசரைத் தருக ” எனக் கூறினான்.
இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திரன், தான் வழிபடும் தியாகேசரைப் போன்று மேலும் ஆறு திருவுருவங்களை வடிவமைத்து முசுகுந்தனிடம் காட்ட, சிவபெருமான்முசுகுந்தன் மனதிற் தோன்றி இந்திரன் வழிபட்ட தியாகேசரை அடையாளம் காட்டினார். முசுகுந்தனும் அதனையே குறிப்பாகக் காட்ட, இந்திரன் செய்வதறியாது ஏழுதியாகேசரையும் முசுகுந்தனிடமே அளித்து, தென்னாட்டில் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டினான். இந்திரன் வேண்டுகோளின் படி ஏழுதியாகேசரையும் திருவாய்மூர், திருநள்ளாறு, திருக்குவளை, திருவாரூர், திருக்காறாயில், வேதாரண்யம், நாகபட்டினம் முதலான ஏழு சிவஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடியற்றி வந்தான். இவ் ஏழுஸ்தலங்களும்“ சப்தவிடங்கத்தலங்கள் ”என்றழைக்கப்பட்டன.
“ சீரார் திருவாரூர் தென்னாகை
நள்ளாறு காரார் மறைக்காடு
காறாயில் – பேரான ஒத்த திருவாய்மூர்
உகந்த திருக்கோளலி சப்த விடங்கத்தலம் ”
எனும் வாசகத்தாலும் இதனை அறிக. முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றான “ திருவாய்மூர் ” மிகச் சாதாரணமான ஒரு சிறிய கோயிலாகத் தென்பட்ட போதிலும் கீர்த்தி மிகுந்த இடமாக பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது.
நாகபட்டினம் –திருத்துறைப் பூண்டி பேருந்து சாலையில் “ எட்டுக்குடி ” க்குப் பிரியும் சாலையில் பயணிக்க இத்திருத்தலத்தை அடையாலம். நீர் வளம் மிகுந்த நெற்பயிர் விளையும் சோலைகளுக்கு நடுவே இத்திருத்தலம் கிழக்கு நோக்கிய மூன்று நிலைக் கோபுரம் கொண்டு அமைந்துள்ளது.
இராஜ கோபுரம் கடந்து உள்ளே சென்றால் நால்வர் – உற்சவ மூர்த்தி கோயிலும், மடைப் பள்ளியையும், பைரவர் சந்நிதிகளையும் காணலாம். பைரவர் மூர்த்தம் என்பது ஒன்றல்ல. ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தாண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், காள பைரவர், ஈசான பைரவர் என அஷ்ட பைரவர்கள் அமர்ந்துள்ள சிறப்புமிகு ஸ்தலம் திருவாய்மூர் திருக்கோவிலாகும். அஷ்ட பைரவர்களின் அருட் பிரவாகத்தினால்இது காசிக்கு இணையான ஸ்தலமாகக் கொள்ளப்படுகிறது.
உட்பிரகார வாசலின் மேலே கணபதி, சிவன் – அம்பாள், முருகன் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடுமண்டபத்தின் முன் புறமாக நடராஜர் சந்நிதி காணப்படுகிறது. இருமருங்கும் துவார பாலகர்கள் கொண்ட கருவறையில் மூலவர்“ வாய் மூர்நாதர் ” லிங்க வடிவில் அளவான அலங்காரத்துடன் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்றார். மூலவருக்கு இடதுபுறமாக அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலத்தில் நிறைந்த அலங்காரங் கொண்டு அம்பிகை“பாலின் நன்மொழியாள் ” வேண்டுவார் வேண்டுவன ஈந்து அருள் மழை பொழிகிறார். மூலவர் சந்நிதிக்குத் தென்புறம் தியாகராஜர் சந்நிதியும், வடபுறமாக திருமறைக் காடர் (வேதாரண்யேஸ்வரர் ) சந்நிதியும் உள்ளது.
திருக்கோயிலின் முன்புறமாக உள்ள திருக்குளத்தில் நிறைய வெண் தாமரை மலர்கள் மலர்ந்து கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. அந்தக் குளக்கரையில் , “திருக்குள விநாயகரும் ” , அருகிருக்கும் அரச மரத்தின் அடியிலே “ அரச மரத்தடி விநாயகரும் ” அமர்ந்துள்ளனர்.
ஊருக்கு மேற்காக உள்ள தீர்த்தக் குளம் “ சூரிய தீர்த்தம் ” எனப்படுகிறது. சூரியபகவான் இத்தீர்த்தத்தில் நீராடி வாய்மூர் நாதரை வழிபட்ட காரணத்தால் இதற்குச் “ சூரிய தீர்த்தம் ” என்ற பெயர் நிலைத்ததுடன், இதுவே ஸ்தல தீர்தமுமாகியது என்று விபரம் தெரிந்தவர்கள் கூறக்கேட்போம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 12, 13 ஆம் நாட்களில் சூரிய பகவான் தன் பொற் கதிர்களை உள்ளே பரப்பி பெருமானையும், அம்பிகையையும் வழிபடும் அருங்காட்சியைக் காண பெருமளவு மக்கள் கூடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அந்தக்“ காட்சியினைக் காணும் வாய்ப்புக்கிட்டவில்லை.
முயலகனின் தலை மீது நடராஜர் திருவடி பதிந்துள்ள சிறப்பு, இடபத்தின் மீதமர்ந்துள்ள தெட்சணா மூர்த்தி, பேய்க் கோலம் கொண்டு கையில் தாளத்துடன் இருக்கும் காரைக்கால் அம்மையார், ஒரே வரிசையில் அமர்ந்துள்ள நவக்கிரகங்கள் ஆகியவை பார்த்துத் தரிசிக்க வேண்டிய சிறப்பு மூர்த்தங்களாகும். வடக்குப் பார்த்தபடி உள்ள துர்க்கை அம்பாளுக்கு இராகுகால வேளையில் நடைபெறும் விசேட பூசை இங்கு மிகப்பிரசித்தமானது.
அப்பர், சம்பந்தர் இருவரதும் தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலம் திருவாய்மூர், திருநாவுக்கரசு நாயனார் திருமறைக் காட்டுத் (வேதாரண்யம்) திருமடத்தில் திருஞான சம்பந்தரோடு தங்கி இருந்தார். வேதாரண்யக் கதவுகள் திறந்து – மூடிய அந்தத் திருநாளில் அப்பர் சுவாமிகளின் பாடலுக்கு மறைக் கதவினை அரிதில் திறந்தும், ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் கதவுகளை அடைத்தமை பற்றியும் நினைவுடையராக உறக்கமின்றித் துயின்றார்.
அச்சமயம் வேதவனப் பெருமான் கனவிடைத் தோன்றி எதிர் நின்றார். “ திருவாய் மூர்ச்செல்வர் நாம்- எம்முடன் வருக” என அழைத்தார். அவ்வருட் செயலை உணர்ந்து விழித்தெழுந்த நாவரசர்,“ எங்கே யென்னையிருந் திடந்தேடி… ”எனும் பதிகம் பாடிக்கொண்டே அவரைத் தொடர்ந்து சென்றார். அப்பரைத் தேடிக்கொண்டே திருஞான சம்பந்தரும் தொடர்ந்து பின் சென்றார். அங்ஙனம் சம்பந்தர் போந்தமையை,
“ திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடியடைப் பித்தாருந் நின்றார்
…………………………………………..
…………………………………………… ”
எனத் தமது பதிகத்தின் எட்டாவது பாடலில் போற்றிப் பாடினார் அப்பர். முன்னே வழிகாட்டிச் சென்ற இறைவன் கோயிலின் உள்ளே புக, அப்பரும் உட்புகுந்தார். இறைவன் விண்ணிடைத்தோன்றி ஆடற்காட்சி நல்கினார். இறைவன் திருவருளை வியந்து ஆடற்காட்சி கண்ட அருட்திறத்தையும் சேர்த்து “பாட அடியார் பரவக் கண்டேன் ” எனும் திருத்தாண்டகத் திருப்பதிகம் கொண்டு போற்றி அருளினார்.
திருஞான சம்பந்தரும் அப்பருடன் அம்மையப்பன் ஆடிய காட்சி கண்டு வியந்து - பணிந்து- மகிழ்ந்து நின்றனர். மன அமைதியின்றித் தவித்த அப்பர் சுவாமிகளை இறைவன் தானே எழுப்பி – தன்னைப் பின் தொடர அழைத்து வந்து – இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் அம்மையப்பனாகக் காட்சி கொடுத்த ஒரே திருத்தலம் “ திருவாய்மூர்” ஆகும். இருவருக்கும் ஆடற்காட்சியினை விரல் காட்டிக் காண்பித்த “விரல் காட்டி விநாயகர் ”திருவாய் மூர்திருத்தலத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறார்.
இத்திருக்கோயில் ஆதியில் பல்லவ, சோழ மன்னர்களால் பராபரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் காலத்துக்கும் முற்பட்ட பழமைச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.