“ தோடுடையான்……. காதல்செய்கோயில்கழுக்குன்றே ” என்றார் சம்பந்தர். “ காளகண்டன் உறையும் தண்கழுக்குன்றே ” என்று சுந்தரா் பாடினார். “ கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாராக்கண்டேன்நானே ” என்கிறார் நாவுக்கரசர். இவ்வாறு மூவர் பெற்றதுடன், மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சி தந்தருளிய இடம் திருக்கழுக்குன்றம். இதனால் திருவாசகத்திலும் இத்தலம் இடம்பெற்றமையால், நால்வர் பாடலும் பெற்ற சிறப்புத் தலமாகத் திகழ்கிறது திருக்கழுக்குன்றம்.
மலை மீதுள்ள கோயிலை “ மலைக்கோயில் ”என்றழைக்கப்படுவது போல ஊருக்குள் உள்ள கோயிலை “ தாழக்கோவில் ” என்றழைக்கப்படுகிறார்கள்.
செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் சாலையில் 14 கி.மீதூரத்தில் உள்ளது திருக்கழுக்குன்றம். சென்னையிலிருந்து கோயில் 70 கி.மீதூரத்தில் உள்ளது. செங்கல்பட்டு – மாமல்லபுரம் – கல்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகள் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன.
வேதங்களே மலையாகி இருப்பதனால் “ வேதகிரி ” என்றும், வாழை மரங்கள் நிறைந்திருப்பதால் “ கதலி வனம் ” என்றும், கழுகுகள் வந்து உணவு பெற்றுச்செல்வதால் “ பட்சிதீர்த்தம் ” என்றும் மலைக்கோவிலுக்குப் பல பெயர்களுண்டு.
மலைக்கோயில் ஏறக்குறைய 500 அடி உயரமுடையது. மூன்று பெரிய மலையைக்குடைந்து கட்டப்பட்டுள்ள மலைக்கோயிலானது, பச்சைப்பசேலென எழில் கொஞ்சும் பசுமைக்கு மத்தியில் – வெண்மை நிறத்தில் – பளிச்செனத் தெரிகிறது. மலை ஏறிச்செல்ல சீரான படிவரிசைகளும், மலையைச் சுற்றி வலம் வர நல்ல பாதையுமுள்ளது.
மலைக்கோவிலின் மதிய வேளைப்பூசை நேரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் மலையை வட்டமிட்டு வந்து உணவருந்திச்செல்லும். இந்த அற்புத நிகழ்ச்சியினைக் காண்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் மலைக்கோவிலுக்குச் சென்று வந்தார்கள். 2000 ஆம் ஆண்டின் பின்னர் கழுகுகள் வருவதில்லை என கோயிற்குருக்கள் கூறினார்.
திருக்கழுக்குன்றம் மிகப்பழமையான பெரியகோயில். ஊருக்குள் நுழைய முன்னரே தாழக்கோயிலின் நெடி துயர்ந்த கோபுரங்கள் நம்மை வரவேற்கின்றன. கோயிலின் முன்பாக உள்ள வீதியிலே 5 திருத்தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான்கு கோபுரங்களும் நான்குதிசைகளையும் நோக்கியவாறு உள்ளன. இந்த கோபுரங்களில் சிற்பங்கள் எதுவுமில்லை. வடக்குக்கோபுரம் 9 அடுக்குகளுடன் உச்சியில் 11 கலசம் தாங்கி வானுயரக் காணப்படுகிறது. ஆனாலும் கிழக்குக் கோபுரமே பிரதான வாசலாகும். சந்நிதிக்கு எதிரே ஸ்தலத்தீர்த்தமான “ சங்குதீர்த்தம் ” உள்ளது. பாதிப் படித் துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளதுடன், நீராழி மண்டபமும் – நீராடுவதற்கான படித்துறையும் காணப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குளத்தில்“ சங்கு ” பிறந்து ஒதுங்குகிறது. இங்கு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் அறியும் வண்ணம் இந்த விபரங்கள் கோவில் உட்பிரகாரத்தில் எழுத்தில் காணப்படுகிறது.
கழுக்குன்றத்தின் “ புஷ்பகரமேளா ” வும் “ லட்சதீபப்பெருவிழா ” வும் பிரசித்தமானவை. குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் சுபவேளையில் “சங்கு தீர்த்த புஷ்கரமேளா ” கொண்டாடப்படகிறது. இந்த நல்ல வேளையில் நீராடுவதற்கு பல லெட்சம் பக்தர்கள் கழுக்குன்றத்தில் குவிவார்கள். மாலையில் கோவிலிலும், தீர்த்தங்களிலும், ஊரெங்கும் தீபமேற்றி “ லெட்ச தீபப்பெருவிழா ” வாக வெகு விமரிசையாகக்கொண்டாடுவர். இந்த விபரம் கோயிற் குறிப்பிலிருந்து பெறப்பட்டது.
சங்கு தீர்த்தத்தின் மேற்குக்கரைப் படித்துறையில் மார்க்கண்டேயர் வழிபட்ட உருவிற் சிறிய சிவலிங்கம் உள்ளது. இந்த மூர்த்தத்தை “ மார்க்கண்டேஸ்வரா் ” எனும் திருநாமம் கொண்டு அழைக்கிறார்கள்.
தாழக்கோயிலின் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளுடன் உச்சியில் நவகலசங்கள் கொண்டு காணப்படுகிறது. இதுவே கோயிலின் பிரதான வாசலாகும். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனா். கருங்கல்லில் அமைந்துள்ளது வார பாலகர்கள் உருவங்கள் அழகுடையவை. கிழக்குக் கோபுர வாசல் வழியாக உள்ளே போனால் வ லது பக்கம் கோயில் அலுவலகம் உள்ளது. இடது பக்கம் கலையழகுமிக்க 16 கால் மண்டபம் உள்ளது.
இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிரகாரத்தை வலம் வரும் போது விநாயகர் சந்நிதிக்கு வருகிறோம்.
வடக்கு வாசலருகே “ நந்திதீர்த்தம் ” உள்ளது. தீர்த்தக்கரையில் நந்தி உள்ளது. அடுத்துள்ள மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கி ஐந்து நிலைகளையுடைய உட்கோபுரத்தினுள் நுழைகிறோம். இக்கோபுரம் மட்டும் நிறைந்த சிற்பங்களுடன் வண்ணக்கோபுரமாக உள்ளது. வாசலின் இடது பக்கம் “ அநுக்கிரக நந்திகேஸ்வரர் ” தனது தேவியுடன் உள்ளார். உள் நுழைந்து வலமாக வரும் போது சோமஸ்கந்தர் சந்நிதிக்கு வருகிறோம்.
இந்தப் பிரகாரத்தில் “ பீடம் மட்டுமே கொண்ட ” ஆத்ம நாதர் சந்நிதி, எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், வண்டுவனவிநாயகர், ஐம்புகேஸ்வரா், அருணாசலேஸ்வரர் முதலான சந்நிதிகள் தனித்தனியாக உள்ளன.
ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாயுள்ளது. சந்நிதிச் சுவரில் கந்தர் அநுபூதிப் பாடல்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் உள்ள சந்நிதியில் அம்பிகை“ திரிபுரசுந்தரி ”நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். முகத்தில் புன்னகை தவழ சாந்த சொரூபியாக உள்ள அம்பாளின் திருமார்பில் தவழும் “ ஸ்ரீ சக்கரம்” ஜொலிக்கிறது.
அம்பாளின் வட கிழக்கு மூலையில் பள்ளியறையும் , அம்பாளின் உற்சவ மூர்த்தமும் காணப்படுகிறது. அம்பாளின் உட்பிரகாரத்தை வலம் வரலாம். அம்பாளுக்கு (1) ஆடிப்பூரம் (2) பங்குனி உத்தரம் (3) நவராத்திரியில் வ ரும் நவமி திதி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே முழு அபிஷேகம் நடைபெறுகிறது. நாள்தோறும் பாத அபிஷேகம் மட்டுமே நடைபெறும். அம்பாளின் கருவறையை வலம் வரும்போது, சலவைக் கல்லில் பொறித்து வைக்கப்பட்டுள்ள “ அபிராமி அந்தாதி ” பாடல்களை வாசிக்க மனதுக்கு நிம்மதி பிறக்கிறது.
அம்பாளுக்கு எதிரில் “ பிரத்யட்சவேதகிரீஸ்வரா் ” சந்நிதி உள்ளது. அடுத்துள்ள நடராஜர் சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் வசீகரமான முழுப்பொலிவுடன் உள்ளது. வலப்பக்கம் உள்ள வீரபத்திரரையும், துவாரபாலகர்களையும் வணங்கி உட்சென்றால், உட்சுற்றில் சூரியன், விநாயகர், அறுபத்து மூவர் மூலத்திருமேனிகள் உள்ளன. ஒரே அளவான 7 சிவலிங்கங்களும், அறுபத்து மூவரின் உற்சவத் திருமேனிகளும் காணப்படுகிறது. பைரவர் சந்நிதியில் வாகனமின்றி பைரவர் காணப்படுவது வித்தியாசமாக உள்ளன.
கருவறையில் மூலவர் “ பக்வத்சலேஸ்வரா் ” அழகான அலங்காரத்தோடு அனைவருக்கும் அருள்பாலிக்கின்றார். மூலவர் சந்நிதியின் வலப்பக்கச் சு வரை ஒட்டிய படி உள்ள அகோர வீரபத்திரா் எட்டுக்கரங்களில் பற்பல ஆயுதங்களுடனும் கபால மாலையுடனும் காணப்படுகின்ற போதிலும் முகத்தில் அகோரம் எதுவுமில்லை. சாந்தம் தவழுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயர், தட்சணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனா்.
சித்திரைப் பெருவிழா தாழக்கோயிலில் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.