ஆறாவது படைவீடாகிய “ பழமுதிர்சோலை ” என்பது மதுரை அழகர் கோவிலையே குறிப்பதாக அன்னாளில் பலரும் பாடியமை சான்றாகவுள்ளது.
சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் இந்த ஸ்தலத்தை மதுரைக்குச்செல்லும் காட்டுப் பாதையிலுள்ள “ திருமால் குன்றம் ” எனக் குறிப்பிட்டு, திருமால் இங்கே நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிப்பதாகக் கூறியுள்ளார்.
திருமுருகாற்றுப்படையில் வரும் “ பழமுதிர்சோலை ” என்பதற்குப் “ பழம் முற்றினசோலை ” என்று நச்சினார்க்கினியா் என்ற புலவரும், பழம் உதிர் சோலைமலை (பழம் உதிரப்பட்ட சோலைகளையுடைய மலை) என உரையாசிரியரும், முதிர்ந்த பழங்களையுடைய சோலைகள் சூழ்ந்த மலை எனப் பரிதியாரும் பொருள் கூறியுள்ளனா்.
திருமுருகாற்றுப்படையைத் தவிர இதர சங்க இலக்கியங்களிலும் பழமுதிர் சோலையானது அழகர்கோவில், திருமாலிக்குன்றம், சோலைவனம் என அழைக்கப்பட சிறந்த விஷ்ணு ஆலயமாகவே சிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர் களியென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகலற் போற்றுவாம்
-கந்தரபுராணம் (துதிப்பாடல்)
கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், முருகன் வள்ளியை மணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி அழைத்த பழமுதிர்சோலை வள்ளிமலையையே குறிப்பாக (வள்ளியூர் என்பது வேறு ) வாதிடுவோரும் உளர்.
அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் வள்ளிமலையையும், பழமுதிர் சோலையையும் தனித்தனியாகப் பாடியிருப்பதோடு, பழமுதிர்சோலையில் நூபுரகங்கை எனும் சிலம்பாறு உள்ளதென்பதை பின்வரும் அடிகளிற் குறிக்கிறார்.
…………………………………………………………………….
……………………………………………………………………
“ ஆயிரமுகங்கள் கொண்ட நூபுரமிரங்கு கங்கை
யாரமர வந்த லம்பு துறைசேர
…………………………………………………………………..
…………………………………………………………………. ( பழ.திருப்: இல 8)
………… ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து வருகின்ற சிலம்பாறு நிரம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த்துறைகள் பொருந்த……… எனும் கூற்றும்,
இவ்விடம் மதுரைப் பெருநகருடன் தொடர்புடையது என்பதை (பழ.திருப்: இல 13),
“ ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி படுவோனோ
டாரத் தோடகி லுற்றத ரக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் பெருமாளே.
மதுரையம்பதியிலே வைகையாற்றில் கரைகட்டும் பொருட்டு கூலியாளாகிச் சென்று, உதிர்ந்த பிட்டுக்காக அடிபட்ட சொக்கநாதர் உறையும் மதுரைக்கு அருகில், சந்தன மரம் – அகில் மரம் முதலிய மரக்கூட்டங்கள் நெருங்கியுள்ள பழமையான பழமுதிர்சோலை மலையில் விளங்கும் பெருமிதமுடையவரே …. எனத் திருப்புகழ் கூறுகிறது.
அருணகிரிநாதர் பழமுதிர்சோலைமீது 16 திருப்புகழ் பாடியுள்ளார்… சோலைமலை மேவு பெருமாளே…., ….. பழமுதிர் சோலை மலைமிசை மேவி நின்ற பெருமாளே, …. சோலை மேவி நின்ற பெருமாளே என இந்தப் பதினாறு திருப்புகழின் இறுதி வரியும் முடிவு பெறுவதை நாம் நோக்க வேண்டும்.
மதுரையை நோக்கி விரைந்த ஔவை பிராட்டிக்கு நாவற்பழத்தை உதிர்த்துச் சில கேள்விகள் கேட்டு, அம் மூதாட்டியின் வாயினாலேயே பல நீதிகளை உலகம் உய்ய அருளிய முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஸ்தலமே பழமுதிர்சோலை. ஔவையின் வாயினால் ஞானப்பழம் உதிர்வதற்காக முருகன் இங்கு நாவற்பழத்தை உதிர்ந்ததால் இந்த ஸ்தலம் பழமுதிர் சோலை (பழம் உதிர்ந்த சோலை ) என நக்கீரராலும் பிறராலும் போற்றப்பட்ட இடம் இதுவே.
ஔவையார் சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களாலும் போற்றப்பட்ட தமிழ்த் தாய். ஆகவே இவ்வம்மையாருக்கு முருகன்
அருள்புரிந்தமையையே அருணகிரிநாத சுவாமிகளும்,
………………………………………………………….
………………………………………………………….
பாடன் முக்ய மாது தமீழ் தமீ ழிறை
மாமு நிக்கு காதி லுணார் வுணர் விடு
பாசற்ற வேத சூர குருபர குமரேசா
………………………………………………………………
………………………………………………………………
எனவரும் அடிகள் கொண்ட “ சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென….. ” என்று தொடங்கும் பழமுதிர்சோலையின் பதினோராவது திருப்புகழில் “ பாடன் முக்ய மாது தமீழ் ” எனும் வார்த்தையால் விளக்குகிறார் என ஊகிக்கலாம். முருகன் தமிழ்த்தாய்க்கு அருள்புரிந்த வரலாற்றையும், அதன்மூலம் வெளிப்பட்ட நீதிகளையும் நாமும் சிந்தித்து இன்புறலாம்.
அதனால், கந்தபுராண துதிப்பாடலுடன் அருணகிரிநாதரின் திருப்புகழும் சேர்ந்து அழகர் கோவிலே பழைய பழமுதிர்சோலை என உறுதிபடக் கூறி நிற்கிறது.
எனவே, அழகர் கோவிலேதான் அந்நாளின் பழமுதிர்சோலையா? அல்லது இன்றைய பழமுதிர்சோலையா? என்பது பற்றி புத்திஜீவிகள், அறிஞா் பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தறிந்து கருத்துக் கூறுவதே பொருத்தமானதாகும். ஆகவே, ஆய்வினை விடுத்து நாம் நேரில் பார்த்து – அறிந்த ( இன்றைய ) “பழமுதிர்சோலை ” க்குப் போய்வருவோம்… வாருங்கள்.
“ பழமுதிர்சோலை ” என்றழைக்கப்படும் அழகர் கோவிலானது மதுரையிலிருந்து வடக்கே 16 மைல் தூரத்தில் அழகர்மலை மீதுள்ளது. மதுரை நகரின் மத்தியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் இரண்டிலிருந்தும் அழகர் மலைக்குப் பேருந்துகள் செல்கின்றன. மதுரையை நோக்கி நாற்திசைகளிலிருந்தும் வரும் வெளியூர் பேருந்துகள் தரித்து நிற்கும் மிகப்பெரிய பேருந்து நிலையமான “ மாட்டுத்தாவணி ” பேருந்து நிலையத்திலிருந்தும் அழகர் மலைக்கு பேருந்துகள் புறப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் அழகர் கோவிலில் தரித்துப் புறப்பட்டு, 3 கி.மீ தூரம் வளைந்து நெளிந்து மேலேறிச் செல்லும் நேர்த்தியான தார்ப்பாதையினூடாகச் சென்று (இன்றைய) பழமுதிர்சோலையைத் தாண்டி, நூபுரகங்கை தீர்த்தம் விழும் கோமுகி அமைந்துள்ள “ மாதவி மண்டபம் ” வரை சென்று திரும்புகின்றன.
அழகர் கோவிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள “ சிலம்பாறு ” என அழைக்கப்படும் நூபுரகங்கை தீர்த்தத்திற்கு அழகர் கோயிலின் வடக்கு வாசல் வழியாக ஒற்றையடிப் பாதையொன்று தனியாகச் செல்கிறது. வழிகாட்ட பல குறியிட்ட அடையாளங்களும் இப்பாதையில் உண்டு. பல தீர்த்தங்களையும் சிறிய நீரோடைகளையும் கடந்து செல்லும் இப்பாதையானது ( இன்றைய ) பழமுதிர்சோலைக்கு அண்மையில் தார்ச்சாலையில் ஏறி, நூபுரகங்கை தீர்த்தக்கேணியில் முடிகிறது. “ மாதவி மண்டபம் ” எனப்படுகின்ற தீர்த்தக்கேணியில் நூபுரகங்கைத் தீர்த்தம் கோமுகி வழியாக விழுகிறது. இந்தத் தீர்த்தத்தில் இரும்புச் சத்தும், தாமிரச் சத்தும் நிறைந்து காணப்படுவதால் இத் தீர்த்தம் பல நோய்களைத் தீர்த்து வைப்பதாகவும், இத் தீர்த்தத்தின் உற்பத்தி இடம் மலை மீது எங்குள்ளது எனச் சரியாகத் தெரியவில்லை எனவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனா். நூபுரகங்கை மலையில் பாய்ந்து வரும்போது “ சிலம்பாறு ” எனப் பெயர் பெறுகிறது. இதனையே பெரியாழ்வார்,
“ சிலம்பார்க்க வந்து தெய்வ
மகளிர்க ளாடும்சீர்
சிலம்பாறு பாயும் தென்திரு
மாலிருஞ் சோலையே ”
எனப் போற்றியுள்ளார். மாதவி மண்டபத்திலேயே அழகர் மலைக்கும், பழமுதிர் சோலைக்கும், இங்குள்ள தீர்த்தங்களுக்கும் காவற் தெய்வமாகிய “ ராக்காயி அம்மன் ” கோவில் கொண்டுள்ளாள்.
நாமும் ஜில்லென குளிர்ந்தபடியுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடி பிரயாண களைப்பைப் போக்கிக்கொண்டு 1/4 கி.மீ தூரம் தார் பாதை வழியாகக் கீழிறங்கி (இன்றைய) பழமுதிர்சோலை வாசலுக்கு வந்து சேருகிறோம். கோபுர வாசலும் வீதியும் மிக நெருக்கமாகவே உள்ளன. கிழக்குப் பார்த்தபடியுள்ள அழகான ஐந்து நிலைக் கோபுர வாசலில் காணப்படும் அறிவிப்பு நம்மை
வரவேற்கிறது.
………………………………………………………………
ஆறாவது படைவீடு
அருள்மிகு முருகன் திருக்கோவில்
சோலை மண்டபம், அழகா்மலை
…………………………
எனக் குறிக்கப்பட்ட அந்த அறிவித்தற் பலகையில் எந்த ஒரு இடத்திலும் “ பழமுதிர்சோலை ” என்கிற வாசகம் காணப்படவில்லை என்பதையும் வாசக நேயர்களுக்குத் தருகிறேன். கோபுர வாசலில் 10 படிகள் கீழிறங்கி சமதளத்திற்கு வந்தால் அகன்ற ஒரேயொரு மண்டபம். மண்டபத்தின் உட்புறச் சுவர்கள் முழுவதும் கந்தர் அநுபூதி, கந்தசஷ்டி கவசம், பழமுதிர்சோலைத் திருப்புகழ் முழுவதும் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கும் மேலே 1 வது படைவீடு, 2ஆவது படைவீடு……… எனக்குறிப்பிட்டு அந்த இடத்தின் சூழலினைப் பின்புலமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் முருகன் திருவுருவங்கள் கொள்ளை அழகுடன் ஜொலிக்கின்றன. 6’ உயரம் கொண்ட இந்த அறுபடை வீட்டுப் படங்கள் மண்டபத்தின் வடக்குத் தெற்கு உட்புறச் சுவர்களில் பக்கத்திற்கு மூன்றுவீதம், பாடல்களுக்கு மேலாகத் துலாம்பரமாகத் தெரியும்படி கண்ணாடி பிரேமிட்டு வைக்கப்பட்டுள்ளது. 6ஆவது படைவீடு – பழமுதிர்சோலை எனக் குறிக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக் காண்பிக்க வேண்டும்.
மண்டபம் நடுவே தம்பம், பலிபீடம், (நந்திக்குப் பதிலாக ) மயில் ஆகியவை உள்ளன. அவற்றினைக் கடந்து, மண்டபத்தின் தென்பக்க சுவர் ஓரமாக 3 படிகள் மேலேறிச் சென்றால், நேரே தென்மேற்கு மூலையில் கணபதி, நடுவே கருவறையில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், அடுத்து உற்சவ மூர்த்தங்கள் உள்ள சந்நிதி ஆகியவை ஒரே வரிசையில் கிழக்குப் பார்த்தபடி உள்ளன. பூரண அலங்காரத்துடன் “ யாமிருக்கப் பயமேன் ” என நாடிவரும் பக்தர்கள் அனைவரையும் அன்பு முகங்காட்டி அரவணைக்கும் முருகனின் திருமுகம் காண தினமும் பலநூறு பேர்கள் பழமுதிர்சோலை நாடி வருகிறார்கள். மண்டபத்தின் வடசுவரில் ஒரு வாசலும் வடகிழக்கு மூலையில் தெற்குப் பார்த்தபடி பள்ளியறையும் காணப்படுகின்றன.
மண்டப வாசல் வழியாக வெளியே வந்து, ஒடுங்கிய புறவீதி வழியாக வலமாக வலம் வருகிறோம். கோவிலைச் சுற்றி அந்நாளில் மிக நெருக்கமாகக் காணப்பட்ட நாவல் மரங்கள், இப்போது மிக அரிதாகவே காணப்படுகின்றன. பின் வீதியில் மிக அண்மையில் உருவான அன்னதான மண்டபத்தில் பலரும் அமர்ந்திருந்து பசியாறுவதைப் பார்க்க முடிந்தது. புறவீதியின் வடகிழக்கு மூலையில் தங்கத்தேர் மண்டபம் மிகுந்த பாதுகாப்புடன் காணப்படுகிறது. “ ரூபா 2000 செலுத்தி தங்கத்தேர் திருவிழாவினைச் செய்யலாம் ” என்கிற அறிவிப்பும் அங்கே காணப்பட்டது. தங்கத் தேருள்ள மண்டபக் கதவுகள் திறந்திருந்த காரணத்தால் தேரின் அழகினை ரசிக்க முடிந்தது. 10’ உயரம் வரையிலான தங்கத் தேர் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டு, முத்துக்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்டு பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்தது. தங்கத் தேரில் கந்தவேளின் பவனியை கற்பனையில் எண்ணிப் பார்த்தேன். தேர்பவனியின் ரம்மியமான காட்சி மனதில் விரிந்து உள்ளம் நிறைந்தது.
மண்டப உட்புறமும் சரி, கருவறையின் பிற்பக்க பண்டிகை அமைப்புகளும் சரி, கோபுரமும் சரி எல்லா இடங்களுமே காலத்துக்குக் காலம் வர்ணம் பூசி அழகுபடுத்தியிருப்பது தெரிகிறது. ஆறுமுகனுக்குகந்த ஆறாவது படைவீடாகிய பழமுதிர் சோலையில் பழமையைப் பார்க்க வரும் எவருக்கும் சற்று ஏமாற்றமாகவே இருக்கும். எங்கும் புதுவர்ணம் தீட்டப்பட்ட புத்தம் புதிய கோவிலாக பழமுதிர்சோலை ஜொலிக்கிறதே தவிர எங்கும் எதிலும் பழமை தெரியவேயில்லை.
சீர்சி றக்கு மேனி பசேல்பசே லென
நூபு ரத்தி னோசை கலீர்கலீ ரென
சேரவிட்ட தாள்கள் சிவேல்சிவே லென வருமானார்
…………………………………………………………………………..
……………………………………………………………………………
பூமி யுக்க வீசு குகா குகா திகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தொள்
பூணியிச்சை யாறு புயா புயாறுள பெருமாளே
-பழமுதிர்சோலை திருப்புகழ் இல: 11-
நன்றி : ஞானச்சுடர், பங்குனி 2014
அடுத்த வாரம் : “ திருப்பரங்குன்றம் ”மதுரையின் தென்மேற்கே உள்ள திருப்பரங்குன்றம் முருகனின்
படைவீடுகளுள் முதன்மையானது. முருகன் - தேவசேனா திருமணம் நடைபெற்ற இடம் “ திருப்பரங்குன்றம் “
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.