Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மனப்பட மனிதர்கள் : வல்வையின் நடிகமணி வீ. வைரமுத்து (ரெத்தி மாஸ்டர்) பாகம் 15)

பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2016 (புதன்கிழமை)
இடுப்பில் உடைவாள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு தடி.. உயர்த்திக்கட்டிய சாரம், ஒரு பக்கமாக புடைத்தெழும் மார்பு.. ஓரமாக வானம் பார்த்த முகம்.. ஆறடி ஆஜானுபாகுவான தோற்றம்.. 
 
வேம்படிக்கு அருகில் நடந்தது நாடகம்... 
 
"வல்வை அது ஒரு முல்லை.. - அதில் 
வாழ்வது பெரும் தொல்லை...! "
 
இடுப்பில் இருந்த தடியை உருவி வேம்படியில் இருந்த தபால் பெட்டிக்கு மேல் ஓர் அடி.. வாளாகக் கருதிய தடி.. சுக்குநூறாகி ஆகாயத்தில் பறக்கிறது.. 

செண்பகப்பாண்டியன்.... நாடகம்... வாழ்க்கை நாடகமாகியிருந்தது.. அவன் பித்தனா திரைப்படம் வந்திருந்த காலம் " அவன் பித்தனா நான் பித்தனா.. ? " கூர்ந்து பார்க்கிறேன்.. 

"பார்ப்பவன் குருடனடி.. படிப்பவன் மூடனடி.. 
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி.. 
நீரோ கொதிக்குதடி.. நெருப்போ குளிருதடி.. 
வெண்மையை கருமையென்று கண்ணாடி காட்டுதடி.." 
 
வாய்ப்பில்லாத கலைஞன் ஒருவனின் மனம் குழம்பி.. வெண்மையை கருமையென்று கண்ணாடி காட்டுகிறது.. 
 
"உலகம் ஒரு நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார்கள்..." அதுதான் நடந்தது.. 
 
நமக்கும் அடி விழுமா..? அச்சத்துடன் பார்க்கிறேன்... தொடர்கிறது நாடகம்.. பாண்டியன் துச்சாதனனாக மாறினால் என்ன செய்வது.. ? சந்தைக்குப் போகும் பெண்கள் பயத்தில் விலகி ஓடுகிறார்கள்.. 
 
"ரெத்திமாஸ்டருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.." சிலர் கூறுகிறார்கள்... வேறு சிலர் சிரிக்கிறார்கள்.. தூரத்தே வேடிக்கை பார்க்கும் கூட்டம்.. வல்வையின் ஒரு மாபெரும் நடிகன் வீதியில் நடித்துக் கொண்டிருந்தார்... 
 
இந்த மாபெரும் நடிகனுக்கு உதவ இந்த நாட்டுக்கு ஒரு கடமை இருக்கிறதே.. ஒன்றுமே இல்லாத இது ஒரு நாடா.. ? சுற்றி நின்று கைகொட்டிச் சிரிக்கும் இவர்கள் மனிதர்களா.. ?
 
இவரோடு நடித்த நடிகர்கள் எங்கே..? அவர்கள் நடிகர்களா..? ஆயிரம் கேள்விகள் என்னை சாட்டை கொண்டு அடித்துப்புரட்டின.. 
 
இந்த மாபெரும் கலைஞன் மனோநிலை குழம்பி வீதிக்கு வர காரணமென்ன..? இப்படியொரு நிலை நமக்கு வந்தாலும் இந்த வல்வை இப்படித்தானே கைகொட்டிச் சிரிக்கப்போகிறது.. 
 
வல்வையின் வாழ்வில் எங்கோ ஓரிடத்தில் குறைபாடு இருப்பது போல மனது கூறுகிறது.. அவர் கூறியதை மீண்டும் திருப்பிப் போடுகிறேன்.. 
 
"வல்வை ஒரு முல்லை.." முல்லை என்றால் மக்கள் வாழமுடியாத காடும் காடு சார்ந்த இடமும்.. இங்கு வாழ்வது தொல்லை.. 
 
"ஒரு கலைஞனுக்கு வல்வையில் வாழ்வது தொல்லை.." என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது.. 
 
ஐம்பது ஆண்டுகள் கடந்து சிந்திக்கிறேன்.. கலைஞனாக வாழ்ந்து பார்த்து, நமது மக்களிடையே வாழ முடியாத கொடுமையால் நான் எழுதிய "ஒரு சினிமா பைத்தியத்தின் புலம்பல் " என்ற புத்தகத்தை தட்டிப்பார்க்கிறேன். 
 
என்னை "ஒரு சினிமா பைத்தியம் " என்று கேலி செய்தவர்களுக்கு எதிராக நான் தூக்கிய போர் வாள் அது.. 
 
வல்வையில் மட்டுமல்ல இலங்கை முழுவதுமே கலைஞர்களுக்குள்ள ஆபத்தான முடிவு அவர்களை பைத்தியமாக்கி சாகடிக்கும் வாழ்வியல் கொண்டதுதான் என்பதை எத்தனையோ கலைஞர்களின் வாழ்வில் பார்த்துவிட்டேன். 
 
ஆகவேதான் ரெத்திமாஸ்டரை ஒரு பித்தனாக என்னால் கேலி செய்ய முடியவில்லை.. கலையை வெளிப்படுத்த வழி கூறாத.. கல்லுப்பற்றி இறுகிப்போன.. சடங்கு மயமான.. முன்னேற்றமற்ற நமது கிடுகு வேலி சமுதாயக் கட்டமைவு ஒரு கலைஞனை வீதியில் நடிக்க வைத்திருக்கிறது.. 
 
" நெஞ்சோ கொதிக்குதடி.. நீரோ குளிருதடி.. 
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி.. "
 
சூறாவளி சுழல்கிறது.. கடற்கரை மண் காற்றோடு கலந்து உலகம் மறைகிறது.. 
 
கற்பனைக்குதிரை ராஜபாட்டையின் வழியாக ஓடுகிறது.. ஆர்மோனியப் பெட்டியின் ஓசை கேட்கிறது.. வல்வையில் ஒரு பொற்காலம் மலர்கிறது.. 
 
மேடையைப் பார்க்கிறேன்.. இவ்வளவு அழகான, இவ்வளவு பிரமாண்டமான மேடையை போடத்தான் முடியுமா..? 
 
முறுக்கு மீசை, இடுப்பில் பளபளக்கும் வாள், வெல்வெற் சட்டை, கெம்பீர முடி, இரண்டு பக்கங்களிலும் சின்னத்துரை செற் சின்னமேள தாரகைகள்.. மந்திரி பிரதானிகள் புடைசூழ நடுவில் பாண்டிய மன்னனாக ரெத்தி மாஸ்டர்.. 
 
தேகம் புல்லரிக்கிறது.. அவருடைய நடிப்பு, எழுச்சி, வசனப்பிரயோகம், சரேலெனத்திரும்பும் இலாவகம் இவனுக்கு இணையான ஒரு நடிகன் இன்னும் ஒரு நூற்றாண்டு போனாலும் இந்த மண்ணில் பிறக்க முடியாது.. 
 
கரகோஷம் வானைப் பிளக்கிறது.. ஒரு நல்ல நடிகன் இருந்தால் ஊர் ஒன்றுபடும், ஒற்றுமை வளரும்.. வல்வை முறுக்கேறி திரண்ட காலம் அது.. 
 
அக்காலத்தே இந்தியாவில் நடப்பதைப் போல வல்வையிலும் நாடகங்கள் நடைபெறும், கிடுகு வேலியால் கோயில் வீதியை அடைத்து உள்ளே உன்னதமான மேடை போடப்பட்டிருக்கும், சிறிய கட்டணத்துடன் தொடர்ந்து நாடகம்... பல காட்சிகளாக நடக்கும். 
 
நெடியகாட்டு வீதியில் இருந்து சிதம்பரா மைதானம், மணிக்கம்பி தோட்டம்வரை நடைபெற்ற தொழில்முறை நாடகங்களுக்கெல்லாம் சிறுவனான என்னை எனது தாயார் அழைத்துச் செல்வார். 
 
எப்படி பம்பல் சம்மந்தமுதலியார், டி.கே.சி, அவ்வை சண்முகம் போன்றவர்களின் நாடக சபாக்கள் இந்தியாவில் தொழில்முறை நாடகங்களாக புகழ் பெற்றதோ அதுபோன்ற ஒரு காலம் வல்வையிலும் பூத்து புகழ் மணம் பரப்பிக்கொண்டிருந்தது. 
 
ரெத்திமாஸ்டர், அனந்தண்ணா, சோதிசிவம், பெரியதம்பி அண்ணா, குட்டிக்கிளி அண்ணா, சிவபெருமான், கணக்கர், சிவானந்தம் அண்ணா, ரேவடி நேசன் போன்ற நடிகர்களின் நாடகங்கள் வல்வையின் கலை வாழ்வுக்கு நீர் பாய்ச்சின. 
 
இந்த நாடகங்களுக்கு போகும் போது நான்கு ஐந்து வயதில் ஆவலாகப் போய் மக்களோடு மக்களாக இருப்பேன், பாய் கொண்டு வருவார்கள் நாடகம் தொடங்கும், தொடங்கும் என்று பார்த்தபடியே இருப்பேன்.. பத்து மணி தாண்டிவிடும்.. அப்படியே உறங்கிவிடுவேன்... நாடகங்களை பார்க்க முடியாத உறக்கம். 
 
ஆனால் அந்த நாடகங்கள் பற்றி மறுநாள் மற்றவர்கள் கதைப்பதை காது கொடுத்து கேட்டுக்கொண்டிருப்பேன். 
 
அதில் பாண்டிய மன்னனாக வந்த ரெத்திமாஸ்டர் பற்றி எல்லோரும் மிக மரியாதையாகவும் பெருமையாகவும் பேசுவதை கேட்டு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் சிறு வயது முதலே இருந்தது. 
 
ஒரு நாள் அவர் அயல் வீட்டில் ஆங்கிலம் கற்பிக்க வந்திருப்பதாக சொன்னார்கள், கழுத்தில் ஒரு மப்ளர்.. கரும்பச்சை நிறம், மேலாக வாரிய முடி, ஆஜானுபாகுவாக தோற்றம் பாண்டிய மன்னனே வந்தது போல இருந்தார். 
 
"மிக நல்ல மனிதர், மிகவும் பண்பானவர், சிறந்த கல்வியாளர் இப்பகுதியில் அவரைப் போல ஆங்கிலத்திலும், பொது அறிவிலும், நடிப்பிலும், விளையாட்டுக்களிலும் ஒரு கெட்டிக்காரனை காணமுடியாது " என்று சொன்னார்கள். 
 
அவருடைய ஆற்றலை பார்ப்பதற்கு ஒரு நாள் வழி கிடைத்தது.. 
 
அப்போது பிள்ளையார் கோயில் மடத்தில் பாரதம், இராமாயணம் போன்ற காவியங்களை படிப்பார்கள்," படிப்பு " என்பது இதற்குப் பெயர், மாலை நேரங்களில் பால், கர்க்கண்டு எடுத்துக் கொண்டு எல்லோரும் போவார்கள். 
 
நானும் அம்மாச்சியுடன் மடத்திற்கு போனேன் அங்கு ரெத்திமாஸ்டர் புத்தகம் போல பலகையால் செய்யப்பட்ட ஒரு பீடத்தில் மகாபாரத புத்தகத்தை வைத்து படித்து விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பார்.. 
 
அருகே குளம், பக்கத்தில் வில்வமரம், அமைதியாக நமது நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார், தூரத்தே இலுப்பை மரங்கள்.. சுகந்தமான காற்று மாலை வேளை, பாரதப்படிப்பு, நாடகக் கலை என்று சிறுவனான என்போன்றவர்களை செதுக்கிய சிற்பக்கூடம் அது. 
 
சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், கூர்ந்து பார்த்தேன்.. மனம் அந்தக் காட்சியை அப்படியே படம் பிடித்துக்கொண்டது.. ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்றும் பழுதடையாத புகைப்படமாக அந்தக்காட்சி மனதில் கிடக்கிறது. 
 
ஊரிக்காட்டில் ரோமியோ யூலியட் நாடகம்.. காலஞ்சென்ற சின்னத்துரையின் மனைவி கட்டி, அவர் தங்கை ராணிமலர், அடுத்தவர் சோதிமலர், எனது தாயார் சகிதம் போயிருந்தேன். 
 
ஜன நெரிசல் தாங்க முடியவில்லை.. கதையை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், காதலன் காதலி சாவதாக பேசினார்கள்.. அம்பிகாபதி அமராவதியா, ரோமியோ யூலியட்டா சரியாக தெரியவில்லை.. அன்றும் உறங்கிவிடுகிறேன்.. ஆனால் வந்தது ஆயிரம்பேருக்கு மேல்.. டிக்கட் விலை ஞாபகமில்லை ஒர் எம்.ஜி.ஆர் படம் போல பரபரப்பு.. அந்தக்காட்சியை மட்டும் மனதால் படம் பிடித்து வைத்துவிடுகிறேன்.. 
 
இன்று எழுத வேண்டும் என்பது விதி.. 
 
இப்படி துண்டு துண்டாக பல தகவல்கள் இருந்தன.. ஒரு தகவல்படி அக்காலத்தே நடிகர் சோதிசிவம் அந்தமான் கைதி என்ற திரைப்படத்தை நாடகமாக போட்டு அதில் எம்.ஜி.ஆரை விட சிறப்பாக நடித்தார் என்று பேசியது ஒரு தகவல். 
 
இன்னொன்று...
 
நாடகத்திற்கு வரக்கூடாதென சில முதலாளிகள் பொறாமை கொண்டு அவரை பளையில் அடைத்து வைக்க, அவர்களுக்கு அடித்துவிட்டு தப்பி வந்து சரியான நேரம் மேடையேறியதாக சொல்வார்கள். 
 
மூன்றாவதாக அணைந்ததீபம் என்ற நாடகத்தில் ரேவடி நேசன் என்பவர் ஒரு ரௌடியாக வந்து துப்பாக்கியால் சுட ஒரு கிளியை பின்புறம் இருந்து எறிவார்கள் சூடு வேண்டிய கிளி மேடையில் விழும்.. 
 
இவைகளை மனப்படங்களாக கீறியபடி மறுபடியும் ரெத்திமாஸ்டருக்கு வருகிறேன்.. சிறிது காலத்தில் இவருடன் பழகும் வாய்ப்பு இவருடைய சகோதரியார் வள்ளியம்மைப்பிள்ளை வீடு சென்றபோது எனக்கு வாய்க்கிறது. 
 
அருளம்மா என்ற வள்ளியம்மைப்பிள்ளையின் மகனும் சிறந்த நாடக நடிகருமான அருளானந்தராஜாவுடன் இணைந்து நாடகங்களைப் போட்டபோது ரெத்திமாஸ்டரின் நாடக வரலாறு பற்றி வள்ளியம்மைப் பிள்ளை தொடர்கதையாக அவர் வாழ்வை பல பல வருடங்களாக என்னிடம் சொன்னார். 
 
அவற்றைக் கேட்கும் போது.. 
 
கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வீ.வீ. வைரமுத்து போன்ற அக்கால பிரபல நடிகர்களுக்கு கடுகளவும் சளைக்காத மகத்தான நடிகர் இவர் என்ற உண்மை மேலும் ஊர்ஜிதமாகியது. 
 
ஒரு நாள் ரெத்திமாஸ்டரிடமே நடிகமணி வைரமுத்துவை தெரியுமா..? என்று கேட்டேன்.. அப்போது அவர் ஓரளவு நலமாக இருந்த பொழுது.. சிரித்தார்.." எந்த வைரமுத்து..?" என்று கேட்டார்.. வீ.வைரமுத்து நான்தான்.. அரிச்சந்திரமயான காண்டமா. செண்பகப்பாண்டியனா "இந்த வைரமுத்தனுக்கு இணையாக இந்த குடாநாட்டில் ஒரு நடிகன் இருக்கிறானா.. ?" என்று கேட்டார். 
 
இவர் மட்டுமல்ல இவருடைய மகன் பல்வைத்தியர் டாக்டர் பழனிவேல் மிகச்சிறந்த நடிகர், உதயசூரியன் நாடகப்போட்டியில் இவர் நடித்த நாடகம் ஒன்று இரண்டாவது இடம் பெற்று இவர் வெள்ளிக்குடத்தை பரிசாக பெற்றதை பார்த்துள்ளேன்.. அப்போது இலந்தைப்பழமல்ல "கலந்தைப்பழம் குட்டி" என்று சிங்களத் தமிழில் இவர் நடித்த நடிப்பும் அற்புதமானது... தந்தையிடமிருந்து வந்திருக்கிறது. 
 
சிதம்பராவிலும் இவர் நடித்த பல நாடகங்கள் பார்த்துள்ளேன், குடாநாட்டில் டாக்டர் பழனிவேல் மிகச்சிறந்த நடிகர் என்பது எனக்கு மட்டுமே தெரியும், ஏனென்றால் குடாநாட்டின் நாடக நடிகர்களுடன் எல்லாம் போட்டியிட்டுள்ளேன், பழனிவேலுக்கு இணையான நடிகரை இன்றுவரை நான் காணவில்லை.. 
 
அவரை வைத்துத்தான் நான் ரெத்திமாஸ்டருடைய நாடகங்களை எடைபோட்டேன்.. அவருடைய உறவினரான இராஜகோபால் மாஸ்டர் பின்னாளில் இவரைப்போலவே பாண்டியன், துரியோதனன் போன்ற பாத்திரங்களை நடித்து சாதனை படைத்தார். 
 
இவருடைய குடும்பத்தினரான அருளானந்தரஜா எல்லாளன், துரியோதனன், சாம்ராட் அசோகன், இலங்காபரண தண்டநாயக்கன், ஷாஜகான், கண்டி அரசன், சுந்தரபாண்டியன் போன்ற பாத்திரங்களில் நடித்தபோது ரெத்திமாஸ்டரின் பாணியை தொடர்ந்து முன்னெடுத்து பல சாதனைகள் படைத்தார், சிறந்த நடிகராக தேர்வானார். 
 
காலஞ்சென்ற அருளம்மா என்ற வள்ளியம்மைப்பிள்ளை தனது அண்ணனைப் போலவே தன் மகனையும் ஒரு நாடகக் கலைஞனாக உருவாக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார். தனது வீட்டையே பல வருடங்களாக வல்வை பாரத் கலாமன்றத்தின் நாடக இல்லமாக பாவிக்க அனுமதி தந்தார். 
 
அவருக்குள் இந்த வெறியையும், விசையையும் கொடுத்தவர் அந்தக்கால நடிகர் வீ.வைரமுத்து என்ற ரெத்திமாஸ்டரே..
 
இவருடைய வீட்டில் நாம் நாடகம் பழகும்போதெல்லாம் ரெத்தி மாஸ்டர் வருவார்.. அவருக்கு மனோநிலை ஏன் பாதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு அருளம்மா பல காரணங்களை கூறியிருக்கிறார்.. 
 
ஆனால் மனோநிலை பாதிக்கப்பட்டாலும் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாடக மேடை வாழ்வாகவே செய்து போயிருக்கிறார்.. 
 
ஒரு சம்பவம்.. 
 
ஒரு நாள் கொழும்பில் இருந்து ஒரு வாடகைக்காரில் வந்திருக்கிறார்.. கையில் ஒரு சூட்கேஸ்.. உள்ளே தங்கக்கட்டிகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.. வாடகைக்கார் சாரதியும் அதிகபணம் கிடைக்கும் என்று ஓடி வந்துள்ளார். 
 
கார் வல்வை வந்துவிட்டது.. கையில் பணமில்லை.. தங்கக் கட்டிகள்தான் இருக்கின்றன.. இந்தப் பெட்டி காரில் இருக்கட்டும் இதோ பணத்தை எடுத்து வருகிறேன் என்று மானாங்கானை வழியால் போனவர் போனதுதான் வரவேயில்லை.. 
 
தங்கக்கட்டியுடன் தப்பி ஓடிய கார் சாரதி நடுவழியில் பெட்டியை திறந்து பார்க்க அது செங்கற்களாக இருக்க திரும்பி ஓடிவந்து அவரைத் தேடி அலைய பிடிக்க முடியாது மறுபடியும் செங்கல்லுடன் கொழும்பு போனது ஒரு கதை.. 
 
இக்கதையை எனக்கு சொன்னவர் காலஞ்சென்ற அருளம்மா.. 
 
இப்படி பல வீதி நாடகங்கள் இவரால் மனோநிலை குழம்பிய காலத்தில் நடத்தப்பட்டுள்ளன.. 
 
வல்வையில் வாழ்ந்த இப்படிப்பட்ட உன்னதமான கலைஞர்களைப் பற்றி எம்மிடம் என்ன குறிப்பு இருக்கிறது.. 
 
ஈழத்தின் நாடக வரலாறு பற்றி எழுதிய பல அறிஞர்கள் பிற்காலத்தில் எனது விரிவுரையாளர்களாக இருந்துள்ளார்கள்.. அவர்களிடம் "ரெத்திமாஸ்டர், மரிசலின்பிள்ளை மாஸ்டர், அனந்தண்ணா, சிவசோதி " போன்ற மாபெரும் கலைஞர்களை எல்லாம் ஏன் உங்கள் நாடக நூலில் பதியவில்லை என்று கேட்டுள்ளேன். 
 
வல்வை தனது கலைஞர்களை ஆவணமாக பதிந்து பல்கலைக்கழக நூல்நிலையங்களுக்கு முறைப்படி கொடுக்க வேண்டும்.. அப்போதுதான் பல்கலைக்கழக மட்டத்திலான ஆய்வுக்கும், நூலாக்கத்திற்கும் அது வரும். 
 
நாம் நமது வீரப்பிரதாபங்களை எமக்குள் பேசுவதில் பயன் எதுவும் இல்லை.. அவற்றை பதிவுகளாக்க வேண்டும்.. பல்கலைக்கழக ஆய்வுக்குள் கொண்டு வரவேண்டும்... 
 
வீ.வைரமுத்து என்ற இந்தக் கலைஞர் பாண்டியனாக நடித்த புகைப்படத்தை செந்திவேல் மாஸ்டரின் மகள் அமுதலட்சுமி கனடாவில் இருந்து நண்பர் அருளானந்தராஜாவுக்கு அனுப்ப அவர் என்னிடம் கொடுத்த புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். 
 
எனக்காக 56 வருடங்கள் காத்திருந்து இன்று எனது கைக்கு வந்த இப்புகைப்படத்தின் மீது எனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுகின்றன.. 
 
"ஒரு பொருள் யாரால் தேடப்படுகிறதோ அவனிடம் போய்ச் சேரும்..." பைபிள்.. 
 
இதில் நடுவில் பாண்டியனாக நிற்பவரே ரெத்திமாஸ்டர்.. 
 
இந்த மேடை அலங்காரம், இந்த எடுப்புக்கு இணையாக அக்கால யாழ்குடாநாட்டு நாடகங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.. இலங்கை நாடக நூல்களில் பதிவான எத்தனையோ நாடகங்கள் பற்றி எனக்கு தெரியும் அவை இதற்கு அருகிலும் வரமுடியாத நாடகங்கள். 
 
இத்தனை சாதனை செய்த கலைஞர்கள் வரலாற்றில் பதியப்படவில்லை என்றால் தவறு எங்கே இருக்கிறது.. நம்மில்தான் இருக்கிறது.. 
 
இந்தக் குறை தீர்க்க எழுதப்பட்டதுதான் இந்த மனப்பட மனிதர்கள் என்ற தொடர்.. 
 
நமது ஊரின் கலைஞர்களின் வாழ்வை பதிவாக்க வேண்டும்.. வீணே நமக்குள் பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை.. 
 
வல்வை பற்றி எதுவுமே தெரியாத எண்ணற்ற வல்வைப் பிள்ளைகளையும், பெற்றோரையும் உலகம் முழுவதும் காண்கிறேன்.. 
 
அத்தகையோருக்கு ஓர் ஆவணம் வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே இந்தத் தொடர்.. 
 
நாடக நடிகன் ஒருவன் வாழ்க்கையே நாடகமானபோது பாடிய பாடல் இங்கு வருகிறது.. இதில் இரண்டு வரிகள் வரும்.. 
 
"இதில் சொந்தமின்றி பந்தமின்றி வந்தவழி நினைவுமின்றி 
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு.. "
 
என்ற வரி மனதைத் தொடுகிறது.. இந்தப்பாடலில் ரெத்திமாஸ்டர் தன் வரலாற்றை பதிவு செய்யாதவர்களை பார்த்து பாடுவது போல நினைத்துப் பாருங்கள் உங்கள் கண்களில் நீர் சொட்டும்.. 
 
இத்துடன் இந்தத் தொடரின் முதற்பாகம் நிறைவடைகிறது.. 
 
சிறிய இடைவெளிக்கு பின்னதாக பாகம் இரண்டு வெளிவரும்.. அதில் மற்றவர்கள் வருவார்கள்.. 
 
இது குறித்த கருத்துக்களை எழுதுங்கள்.. கருத்துப்பக்கத்தை பொட்டல் வெளியாக விட்டுவிடாதீர்கள்.. 
 
இதுவரை படித்த அனைவருக்கும் வணக்கம்.. 
 
கி.செல்லத்துரை..
 
எமது குறிப்பு 
 
எழுத்தாளர் திரு.கி.செல்லத்துரை அவர்கள் எழுதி இதுவரை எமது இணையதளத்தில் வெளிவந்த 14 பாகங்களையும் எமது இணையதள தேடல் பகுதியில் (Search) 'மனப்பட மனிதர்கள்' என தட்டச்சு செய்து பார்வையிடலாம். நேரத்தை ஒதுக்கி தொடர்ந்து 15 பாகங்கள் எழுதி தந்திருந்த திரு.செல்லத்துரை அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai