தமிழகத் திருக்கோவில் வரிசை - தாராசுரம் - ஜராவதீஸ்வரா் திருக்கோவில் -வல்வையூர்அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)
கும்பகோணத்திற்குத் தெற்கே குறுக்குப் பாதையினூடாக ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது தாராசுரம் திருக்கோவில். சுவாமிமலை, திருவலஞ்சுழிகோவில்களிலிருந்தும் பேருந்துகள் அடிக்கடி தாராசுரம் செல்கின்றன. இறைவன் ஜராவதீஸ்வரா், இறைவி பெரியநாயகி அம்பாள். இருவரும் அருகருகே அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் இடம்தான் தாராசுரம்.
ஐக்கிய நாடுகள் சபை – தொல்பொருட் பிரிவினரால் தமிழ்நாட்டில் பராபரிக்கப்படும் திருக்கோவில்கள் மூன்று.
(1) தஞ்சைப் பெருவுடையார் கோவில்
(2) கங்கை கொண்ட சோளேச்சரம்
(3) தாராசுரம்.
திராவிடக் கலைவடிவ நுணுக்கங்களுடன் கூடிய அழகிய கற்சிற்பங்களுக்காகவே இக் கோவில்கள் மூன்றும் ஐ.நா தொல்பொருட் துறையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அழகிய தனிச் சிற்பங்கள் மட்டுமல்லாது, விஸ்தராமான மண்டபங்கள், தரை, தூண்கள், மேலே தூண்களை இணைக்கின்ற விதானங்கள், சந்நிதிகள், சந்நிதிகளின் மேலேயுள்ள பண்டிகைகள், கருவறைகள் ஆகிய அனைத்திலும் காணப்படும்.
ஒவ்வொரு கருங்கல்லும் புடைச்சிற்பங்களாகக் (சிற்பத்தின் பாதிப்பகுதி மட்டுமே கல்லின் வெளியே புடைத்திருக்கும் ) காணப்படுவது தாராசுரம் கோவிலின் சிறப்பம்சமாகும். அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள 1’X1’, 1’X2’ வடிவ கருங்கற்கள் கூடக் கதை பேசுகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கதைகள் பலவும்புரிகிறது. சில புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு கதை அல்லது வரலாறு நான்கைந்து கற்களில் தொடர்ந்தும் செல்கின்றன.
ஐ.நா தொல்பொருட்துறையினரால் பராபரிக்கப்பட்டு வரும் மேற்குறித்த மூன்று கோவில்களிலும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை இந்தப் பந்தியில் நோக்குகிறோம். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் ராஜராஜசோழன்.அவன் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோளேச்சரம். ராஜராஜசோழனின் பேரன் 2 ஆம் ராஜராஜன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டியது தாராசுரம். பொது அமைப்பில் மூன்றும் அச்சிட்ட பிரதிபோலவே காணப்படுகிறது. மூன்றிலும் பக்கவாட்டுப் படிக்கட்டுக்கள் உள்ளன. (தஞ்சையில் அகன்ற நேர்வரிசைப் படிக்கட்டும் உண்டு ) மூன்று இடங்களிலும் மண்டபங்களில் காணப்படும் சிற்பங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை.
மாடங்களில் வைக்கபபட்டிருக்கும் விக்கிரகங்கள் ஒரே விதமானவை. வழமையாகக் கோயில் முகப்புகளில் காணப்படும் கோபுரங்களுக்குப் பதிலாக, அடி பருத்து உயரம் குறைந்த முகப்பு வாசல் மூன்று கோவில்களிலும் காணப்படுகிறது. கங்கை கொண்ட சோளேச்சரத்தில் முற்றுப்பெறாத அடிக்கோபுரம் ஒன்றும் காணப்படுகின்றது. கருவறைப் பண்டிகைகளே வானளாவிய கருவறைக் கோபுரங்களாக நிமிர்ந்து நிற்பதை மூன்று இடங்களிலும் காண்கிறோம். தஞ்சைப் பெரிய கோவிலின் கருவறைக் கோபுரத்தின் உயரம் 216 அடி. கங்கை கொண்ட சோளேச்சரத்தின் கருவறைக் கோபுர உயரம் 160 அடி. தாராசுரம் ஜராவதீஸ்வரா் கருவறைக் கோபுரம் 80 அடி உயரம் கொண்டது. திருவிசைப்பா பாடிய ஒன்பதில்மரில் சேந்தனார் தவிர ஏனைய அனைவரும் தஞசைப் பெரிய கோவில் மீது “ திருவிசைப்பா ” பாடியுள்ளனர்.
கருவூர்த்தேவர் மட்டுமே கங்கை கொணட சோளேச்சரம் மீது திருவிசைப்பா பாடியுள்ளார். ஆனால் தாராசுரம் இந்த இரு கோவில்களுக்கும் பிந்திய வரலாறு (12ஆம் நூற் கொண்டமையினால் எந்தப் பதிகமும் பாடப்பெறவில்லை. உலக பாராம்பரிய நினைவுச் சின்னம் என்பதைக் காட்டும் ஐ.நாவின் சின்னம் பொறித்த பெரிய விளம்பரப் பலகை மூன்று கோவில்களிலும் காணப்படுகிறது.
அகன்ற திறந்த ஒரு உள்வீதி. உள்வீதியைச் சுற்றிவர உயர்ந்த சுவர், சுவரின் மேல் விளிம்பில் தொடர்ச்சியாகக் காணப்படும் சிறிய ரிஷபங்களின் அணிவகுப்பு, சுவருக்கு வெளியே அழகான புற்றரைப்பகுதி, புற்றரையின்இடையிடையே வட்டம், சதுரம், ஐங்கோணம், நட்சத்திர வடிவங்கள் கொண்ட அமைப்பில் கண்ணைக் கவரும் பூச்செடிகள் பரந்த புற்றரையைச் சுற்றிவரும் தார்போட்ட ஒரு புறவீதி, இத்தனைக்கும் வெளியே கோவிலின் சரி கிழக்குப் புறமாக 200 மீற்றர் தொலைவில் முற்றுப்பெறமால் உடைந்து சிதைந்த நிலையில் உள்ள ஒரு கோபுரப்பகுதி. இதுவே கோவிலின் முழுமையான அமைப்பு.
கிழக்குப் பார்த்தபடியுள்ள கோயில் முகப்பு வாசலினூடாக நாம்உள்ளே நுழைந்தால் நேரே ஒரு கொடிமரம். நேர் படிக்கட்டு வரிசை இல்லை. 6 வரை உயர்ந்துள்ள மண்டபத்தின் ஓரமாக நகருகிறோம்.
மண்டபத்தின் மேல் விளிம்பில் உள்ள கொடுங்கைகளின் (தாழ்வாரம்) அழகு, கொடுங்கைக்குப் பெயர்பெற்ற “திருப்பெருந்துறை” திருக்கோவிலை நினைவுபடுத்துகிறது. பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து பல மடிப்புக்களாக அமைத்துள்ள கலைத்திறனைப் பார்த்து நாம் இன்புறலாம். அதனை ரசித்தபடியே தெற்குப் பக்கமாக உள்ள பக்கவாட்டுப் படிகளில் கால் வைத்து மேலேஏறுகிறோம். சில்லுப்பூட்டிய குதிரைகள் மண்டபத்தினை இழுக்கும் அமைப்பினையும், படிக்கட்டுக்கள் அருகே யானை உருவினை ஒத்தபடியுமான அழகான கற்சிற்பங்களையும் ஆக்கியுள்ளனா். கல் அடுக்குகளில் உள்ள ஒவ்வொரு கல்லிலும் காணப்படும் புடைச் சிற்பங்களை ரசித்தபடியே பரந்த மண்டபப் பகுதிக்கு வருகிறோம். மிக நெருக்கமாக அமைந்துள்ள ஒவ்வொரு தூணிலும் வித்தியாசமான பல புடைச்சிற்பங்களைப் பார்க்கிறோம். தரைப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லிலும் காணப்படும் கல்வெட்டு எழுத்துக்கள் தேய்வடைந்து இப்போது தெரிந்தும் தெரியாமலும் உள்ளன.
பல வருடங்களுக்கு முன்பு யான் முதற்தடவை தாராசுரம் போயிருந்தவேளை கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான வேலையாட்கள் பலவிதமான இரசாயனப் பொருட்களையும் பாவித்து, பலமணிநேரம் செலவிட்டு ஒவ்வொரு கற்சிற்பங்களையும் சுத்தப்படுத்தி மெருகேற்றுவதைக் கண்டேன். ஐ.நா தொல்பொருட் துறையைச் சேர்ந்த பல முதற்தர அதிகாரிகளும், அவர்களுக்குக் கீழே உள்ள 2 ஆம் தர அதிகாரிகளும் இந்த ஊழியர்களை வழிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஐந்தாறு வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற “ சுத்தமாக்கற் பணிகள் ” நிறைவுபெற, சில வருடங்களுக்கு முன்னரே கும்பாபிஷேகம் நடந்தேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 2ஆவது தடவையாக நான் தாராசுரம சென்றபோது புதுப்பிக்கப்பட்ட கோவிலும் சிற்பங்களும் மனதைக் கொள்ளை கொண்டன. சிற்பங்கள் – புடைச்சிற்பங்களுக்கு மேலாக வர்ணப்பூச்சு எதுவும் பூசப்படாமல் – இயற்கை அழகு குன்றாமல் – கருங்கல்லின் இயல்பான நிறத்திலேயே பாதுகாத்துப் பராபரிப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே.
உள் மண்டபத்தில் உள்ள தூண் வரிசைகளிற் சில யாழித் தூண்களாகக் காணப்பட்டன. கருவறையின் வாசலருகே இரு புறமும் இரண்டு உயர்ந்த கல்விளக்குகள் உள்ளன. மண்டபத்தின் வடக்குத் தெற்குப் பக்கச் சுவர்களில் உள்ள பெரிய கல்யன்னல்கள் வழியாக வரும் குளிர்ந்த காற்று மண்டபத்தின் உள்ளே வெப்பத்தைக் குறைத்து குளிர் நிலையைக் கொடுக்கிறது. வாசலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்களையும், கணபதி முருகனையும் கைதொழுது, உள்ளே லிங்க வடிவில் வீற்றிருக்கும் ஐராவதீஸ்வரரை மனமுருகி வணங்குகிறோம்.
ஜராவதீஸ்வரரின் சிரசின் மீது, மேலே ஒரு செப்புக் குடத்திலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வீழ்ந்தபடி உள்ளது. கருவறையின் வாசலில் ஒரு காலை வைத்து தலையை மட்டும் உள்ளே நீட்டி நிமிர்ந்து பார்த்தால் கருவறைக் கோபுரத்தின் உட்புற அமைப்பும், பிரமாண்டமும் நமக்குப் புரிகிறது. அருகிலேயே, தெற்குப் பார்த்தபடி அருள்பாலிக்கும் ஸ்ரீபெரிய அம்பிகையின் சந்நிதி உள்ளது. இரண்டு மண்டபங்களுக்கும் பொதுவாகவே மேற்குறித்த யாழித்தூண்கள் அமைந்துள்ளன. அம்பாள் கருவறை வாசலில் இருபுறமும் உள்ள உருவத்திற் பெரிய துவாரபாலகிகளிடம் அனுமதி பெற்று பெரிய நாயகி அம்பாளை வணங்குகிறோம். அம்பாள் நின்ற திருக்கோலத்தில்– நான்கு திருக்கரங்களுடன் – புன்னகை பூத்த முகமும் கொண்டு தன்னை நாடிவரும் அனைவரையும் அரவணைத்து அருள்பாலிக்கிறாள்.
மேலே ஏறிச்சென்ற தென்புற படிக்கட்டுகள் வழியாக மீண்டும் கீழிறங்கி பிரகாரத்தினை வலம்வர தெட்சணாமூர்த்தி சந்நிதிக்கு வந்து விடுகிறோம். வழமையாக கணபதி அமர்ந்திருக்கும் தென்மேற்கு மூலையில் சரபேஸ்வரா் சந்நிதி காணப்படுகிறது. அகன்ற வீதியின் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் கருவறைப் பண்டிகையே கோபுரமாக நீண்டு நிமிர்ந்து நிற்கும் அழகினையும், கோபுரம் கொண்டுள்ள மாடங்களையும் – சிற்பங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
கருவறையைச் சுற்றிலுமுள்ள புற்றரைப் பகுதியில் 3’ தூரம் விலகி 11/2 விட்டமுள்ள வட்டவடிவமான 36 கல் வட்டங்கள் புற்றரை மட்டத்தில் காணப்படுகின்றன. விபரம் அறிய முற்பட்டபோது இருவர் வித்தியாசமான விபரங்களைத் தந்தார்கள்.இந்த வட்டங்கள் கருங்கற் குத்துவிளக்கின் அடிப்பாகம் என்றார் ஒருவர். இல்லையில்லை… விஷேட காலங்களில இந்த வட்ட அமைப்பின் மேல் குத்துவிளக்குகள் எரிய வைக்கப்படுவதாக வேறொருவர் கூறினார். இரண்டு விபரங்களும் “ குத்துவிளக்கு ” சம்பந்தப்பட்டதாக இருப்பது புரிகிறது.
கருவறைக்கு சரி பின்புற மாடத்தில் அண்ணாமலேஸ்வரா் எதிரே மறுபக்கத்தில் கிழக்குப் பார்த்தபடி 11 லிங்கங்கள் – லிங்கபாணம் மட்டுமே கொண்டு – ஆவுடையார் பாகம் இல்லாமற் காணப்படுகின்றன. லிங்கங்கள் எவை? எவை? யாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை எனும் குறிப்பு எதுவும் இங்கில்லை. அருகிலேயே கிழக்குப் பார்த்தபடி இரண்டு சந்நிதிகள் பூட்டிக் கிடக்கின்றன. அருகிலேயே சிறியதும் பெரியதுமாக இரண்டு லிங்கங்கள். இந்த லிங்கங்களின் அருகிலேயே ஒரு பெரிய அம்மியும், அதற்கேற்றாப்போல் குளவி ஒன்றும் காணப்படுகிறது. ஒருவேளை, கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக வேளையில் விக்கிரகங்களை நிலை நிறுத்த மருந்து அரைக்கப் பயன்படுத்தியிருப்பார்களோ?தெரியவில்லை.
பிரகாரத்தின் வட சுற்றுக்கு வந்துவிட்டோம்.
கருவறையின் அபிஷேகத் தீர்த்தம் வெளியேறும் “ கோமுகி ” வித்தியாசமான கலையம்சங்கள் கொண்டதாக ரசித்துப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. கருவறையின் வட மாடத்தில் பிரம்மா, துர்க்கை உள்ளனா். எல்லாக் கோவில்களிலும் சண்டிகேஸ்வரா் அல்லது சண்டிகேஸ்வரி சந்நிதானம் பொதுவாக சிறிய சந்நிதானமாக இருப்பதையே பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கே 6 படியேறி, திசைமாறி மீண்டும 10 படியேறி மேலே போனால், ஒரு கோவிலின் கருவறை போன்ற அமைப்புடனான சந்நிதியில் சண்டிகேஸ்வரா் அமர்ந்துள்ளார். இந்தப் படிகளின் இடைத்திருப்பத்தில் ஒரு லிங்கமும் காணபபடுகிறது. பொதுவாகத் தீர்த்தக் கிணறு சண்டிகேஸ்வரா் சந்நிதிக்கு அருகிலேயே காணப்படுவது வழமை.
இங்கே தீர்த்தக்கிணறு,சண்டிகேஸ்வர் சந்நிதியின் வடபுறமாக உள்வீதியின் மறுபக்கத்தில் காணப்படுகிறது. பைரவர் சந்நிதி வழமையான இடத்திலும், அருகே அகஸ்தியர் சந்நிதியும் உண்டு. தாராசுரம் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனாலும் சனீஸ்வரனுக்கு தனிச்சந்நிதி உண்டு. மீண்டும் கோவில் நுழைவு வாசல் ஊடாக வெளியே வந்தால், வெளிப்புறமாக 5’ ஆழம்வரை கொண்ட நீள்சதுர வடிவான அகன்ற குழியுள்ள பகுதிக்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டு வழியாகக் கீழிறங்கி சமதளப்பகுதியில் வந்து நிற்கிறோம்.
படிகள் தவிர்ந்த ஏனையவை கருங்கற் சுவரினால் மேற்தரைப் பகுதியுடன் இணைந்துள்ளது. இந்த தரைப்பகுதியில் 10’ உயரத்தில் தாமரை வடிவிலமைந்த பெரிய பலிபீடமும், அதனோடு இணைந்தபடி கிழக்காக - உயரம் குறைந்த ஒரு சிறிய மண்டபத்தில நந்தியொன்றும் கிழக்குப் பார்த்தபடி உள்ளது. இந்த அமைப்புக்கும் நுழைவு வாசலுக்கும் இடையே ஒரு தனி மண்டபத்தில் ஒரு சிறிய பலிபீடமும்பெரிய நந்தியும் காணப்படுகிறது.
தாமரை வடிவிலமைந்த பலிபீடத்திற்குச் செல்லும் 8 படிகளும், கோயிற் குருக்கள் கால் பதித்து மேலேறக் கூடியதான ஒடுங்கிய படிவரிசை கொண்டு காணப்படுகின்றன. படி வரிசையின் இருபுறமும் அழகிய புடைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அருகே சிறியதாகக் காணப்பட்ட அறிவிப்புப் பலகை “ இசைப்படிகள் இவை ” எனத் தெரிவித்தன. நான் பார்த்திருக்கையிலேயே ஒரு சிலர் சிறிய கல் கொண்டு அந்தப் படிக்கட்டுகளில் தட்டியதை அவதானித்தேன். யானும் அதே வழியில் தேடியெடுத்த ஒரு சிறுகல் கொண்டு அந்த இசைப்படிகள் ஒவ்வொன்றையும் தட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு கற்படியும் வெவ்வேறான ஓசையை எழுப்பியதை என்னால் நன்கு உணர முடிந்தது. ஆனால்… அந்தப் படிகள் அஸ்டஸ்வரங்களை ஒலித்தனவா என்பதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மீண்டும்சொல்கிறேன், படிகள் வித்தியாசமான இசையைக் கொடுத்தது உண்மையிலும் உண்மை.
தாராசுரம் கோவிலைப் பல வருடங்களுக்கு முன்பு தரிசிக்கச் சென்றபோது கிடைத்த “ இசைப்படிகள் ” அனுபவம் இது. சில மாதங்களுக்கு முன்னர் (05.02.2013 இல்) நெருங்கமுடியாதபடி கம்பிவலை போட்டு மூடி பூட்டுப் போட்டுள்ளனா். “ இசைப்படிகள் ” மீது கல்லினால் தட்டித் தட்டியே அந்த ஒடுங்கிய படிக்கட்டுகள் பள்ளம் விழுந்து தேய்வடைந்து – சிதைந்து போயிருந்தது உண்மையே. அதனால் இந்த சிதைவினைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்டிருந்த இந்தக் “ கம்பிவலை ” ஏற்பாடு அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
மீண்டும் ஒரு திருக்கோவில் பயணத்தில் சந்திப்போம்.
அடுத்தவாரம் – “ சூரியனார் கோவில் ” சூரியப் பெருமானுக்குரிய தனிக்கோவிலாக அமைந்த ஒரே இடம். நவக்கிரக கோவில்களில் மூலக் கோயில்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.